எளிமையான எண்ணம் கொண்டவர்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் எப்போதும் இருக்கிறார்கள். "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13) என வேதாகமம் தெளிவாக கூறினாலும், பரந்த வழியைத் தேர்ந்தெடுக்கும்படி மக்களிடம் விளம்பரப்படுத்தி அவர்களைத் தூண்டும் ஏராளமான கள்ளத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கள்ளப் போதகர்கள் மற்றும் கள்ளத் தீர்க்கதரிசிகள் பற்றி மூன்று வகைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
1) ஓநாய்கள்:
ஓநாய்களுக்குள் ஆடுகளை அனுப்புவதாக ஆண்டவர் தெளிவாகக் கூறினார். ஆம், இது தவறான கருத்துக்கள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள், தத்துவங்கள், கட்டுக்கதைகள், மிகைப்படுத்தல்கள், பரம்பரை வரலாறுகள், வெற்றுப் பேச்சுக்கள், பாட்டிக் கதைகள்... போன்றவற்றால் நிறைந்த ஒரு விரோதமான அல்லது முரண்பாடான உலகம் (மத்தேயு 10:16). ஆகையால், "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்" (மத்தேயு 7:15). தங்களை நல்ல வேதாகம போதகர்கள் அல்லது நல்ல பிரசங்கிகள் என்று தங்களை காட்டிக் கொண்டு, கர்த்தருடைய வழியைப் பின்பற்றுவதிலிருந்து திசை திருப்பி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
2) நாய்கள்:
அந்நியர்களை, குறிப்பாக எளிதில் பயப்படுபவர்களை கடிக்கும் போக்கு இவர்களுக்கு உண்டு (பிலிப்பியர் 3:2). அவை வளர்ப்பு நாய்கள் அல்லது சிறிதான நாய்கள் அல்ல, ஆனால் மூர்க்கமான நாய்கள். உரிமையாளர் இல்லாத தெரு நாய்கள் கூட்டாக வேட்டையாடுகின்றன. பல நேரங்களில், அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு, வழிப்போக்கன் யாராக இருந்தாலும் தாக்குகிறார்கள். கள்ளப் போதகர்கள் சண்டையிடுபவர்கள், சர்ச்சைக்குரியவர்கள் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள். "நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்" (நீதிமொழிகள் 26:11). அதே போல தான் இவர்களும் பழைய மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்குத் திரும்பி புதிய அர்த்தத்தைத் தருகின்றனர். விருத்தசேதனம் பற்றி பவுல் எழுதுகையில் சீஷர்களாக மாறுவதற்கு முன்பு விருத்தசேதனம் மூலம் யூதர்களாக மாற வேண்டும் என்று கூறுபவர்களை நாய்க்கு ஒப்பிட்டு எழுதினார்.
3) முரட்டு மிருகங்கள்:
"இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்" (2 பேதுரு 2:12). பேதுரு கள்ளப் போதகர்களை அரக்கத்தனமான மிருகங்கள் என்று விவரிக்கிறார். அத்தகைய மிருகங்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு ஏற்றது. நன்மைக்கு நல்லது செய்வது மனித இயல்பு, தீமைக்கு நல்லது செய்வது என்பது தெய்வீகம். தீமைக்கு தீமை என்பது விலங்கு இயல்பு, நன்மைக்காக தீமை செய்வது பிசாசு இயல்பு என்று கூறப்படுகிறது. இது மனித இயல்பு மற்றும் தெய்வீக இயல்புக்கு மாறாக சரீர இயல்பு அல்லது விலங்கு உள்ளுணர்வை விவரிக்கிறது. கொடூரமான அவர்களின் தாக்குதலில் அவர்கள் இரக்கம் காட்டுவதில்லை, இதனால் அவர்கள் சாத்தானின் இயல்பை வெளிப்படுத்துகிறார்கள்.
வேதாகமத்தின் சரியான போதனையை அறிவதே பாதுகாப்பதற்கான சிறந்த வழி. சரியான போதனையில் நங்கூரமிட்டு இருப்பவர்கள், தவறானதை மிக எளிதாக அல்லது உடனடியாக எதையும் கணிக்க முடியும். பெரோயா பட்டணத்து விசுவாசிகள், மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததனர், ஆம், பவுலின் போதனையைக் கூட மதிப்பிட முடியும்.
வேதத்தின் சரியான போதனையில் நான் நங்கூரமிட்டிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்