ஒரு இளம், ஆற்றல்மிக்க மற்றும் வளர்ந்து வரும் ஊழியத்தலைவர் தனது அமைப்பின் உறுப்பினர்களுக்கு நிதிக் கணக்குகளை வழங்க தயாராக இல்லை. தான் கடவுளுக்கு மட்டும்தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமேயன்றி மனிதர்களுக்கு அல்ல என்பதாக வாதிடுவார். உண்மையில், அவர் எதிர்த்து வாதிடுவது பவுலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி; அது என்னவெனில், “ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை(1 கொரிந்தியர் 4:3). அவர் வேதத்தை மேற்கோள் காட்டியவுடன், குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அமைதியாகிவிட்டார்கள்.
இருப்பினும், ஒரு மூத்த வணிகர் அக்குழுவில் இருந்தார், அவர் இதுபோன்ற ஒன்றைச் சொன்னார்: “நாம் அரசாங்கத்திடம் வரி கட்டுகிறோம், அரசாங்கம் நமக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் அப்படியில்லை எனில் அது ஊழல் நிறைந்ததாக இருக்கும் என்று நினைக்கிறோம். அதுபோல் வீட்டில் குடும்பச் செலவுக்காக பணம் கொடுக்கிறோம், பின்னர் குடும்பச் செலவின் கணக்கை கேட்கிறோம். மேலும் வீடுகளில் உள்ள குழந்தைகளிடம் எதையாவது வாங்கச் சொல்லி கடைக்கு அனுப்புகிறோம், பிள்ளைகளிடம் கொடுத்த பணத்திற்காக கணக்கு கேட்கிறோம். ஆக, கணக்கு கேட்பது என்பது தானாகவே நம்மோடு இயல்பாக பிறந்த குணம். பின்னர், பெருமூச்சு இழுத்தவாறு, நாம் ஒரே ஒருவரிடம் தான் எந்த கணக்கையும் கேட்பதில்லை, அது யாரெனில் 'தர்மம் எடுப்பவரிடம்' என்றார். பின்னர் அந்த இளம் ஊழியரிடம், "நீங்கள் ஆண்டவரின் வேலைக்காரனா அல்லது ஆண்டவருக்காக பிச்சைக்காரனா" என்றார். ஆகவே இந்த உறுப்பினர் குழு அமைப்பே தேவையில்லாதது, நான் இதை விட்டு பதவி விலகுறேன் என்று ராஜினாமா செய்தார்.
பல போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் மிஷன் தலைவர்கள் நிதி சம்பந்தமாக இந்த வகையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். ‘ஊழியர்கள்’ கணக்கு அளிக்க வேண்டிய பொறுப்பில்லை என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாலந்து உவமையில் தேவன் கணக்கு ஒப்புவித்தலின் அவசியத்தை உணர்த்துகிறார். மூத்த வணிகர் சொன்னது போல்; ‘கணக்கு ஒப்புவிக்காதவர்கள் பிச்சைக்காரர்கள் போன்றவர்களே'. அளவுக்கு அதிகமான வருமானத்தை உடையவர்கள், தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், எவ்வித கணக்கையும் கேட்க மாட்டார்கள்.
நான் கணக்களிப்பவனா? அல்லது பிச்சைக்கார மனநிலை உள்ளவனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்