ஒரு முள்‌ மலராகிறது

செய்தித்தாளில் தன் முகத்தைப் புதைந்திருந்த தேவராஜ், தன் மனைவியின் அழைப்பைக் கேட்டு நிமிர்ந்தார்.

“உங்க ப்ரண்ட் ஜெயராஜ் சொல்லிவிட்டு போனதைப் பற்றி ஒன்றும் நீங்க பேசவேயில்லையே” ஆவலாகக் கேட்டாள் விமலா.

“நானும் அதைப் பற்றித்தான் பேச வேண்டும் என்றிருந்தேன். நீ என்ன நினைக்கிறாய்?” ஆர்வமாகக் கேட்டார் தேவராஜ்.

“பையன் சாம்சன் இன்ஜியரா இருக்கான். வாட்டசாட்டமா இருக்கான். டெளரியும் நிறைய எதிர்பார்க்க மாட்டாங்க நகை போதுமானது இருக்கு. பேங்க்ல 40ஆயிரம் இருக்கு. லதா படிச்சு வேலைக்கா போகப்போறா?... மேரேஜ் செட்டில் பண்ணி விடுவோம்” உற்சாகமாப் பேசிக் கொண்டே போனாள் விமலா. தேவராஜ் திடுக்கிட்டார்.

“விமலா! நீ என்ன சொல்ற? லதாவுக்கா மேரேஜ் பண்ண வேண்டும் என்கிறாய்?” மூத்தவள் சாந்தி இருக்கும்போது...”

சீறினாள் விமலா “நல்லாயிருக்கே நீங்க பேசறது? சாந்தியை மேரேஜ் பண்ணிக் கொடுத்திட்டா வீட்டு வேலைகளை யார் செய்யறது? நீங்களும் பெரிய ஆள்தான். இருக்கிற நகைகளையும். பணத்தையும் வைத்து உங்க மகளை நல்ல மாப்பிள்ளைக்குக் கொடுத்திட்டு, என் மகளைப் பிச்சைக்காரனுக்குத் தள்ளிடலாம்ன்னு நினைக்கிறீங்களா? நான் உயிரோடு இருக்கிற வரைக்கும். சாந்திக்கும். சாம்சனுக்கும் திருமணம் நடக்காது! நடக்க விடமாட்டேன்” ஆவேசமாகக் கத்தியவள் விருட்டென்று எழுந்து போய்விட்டாள்.

தேவராஜின் உள்ளம் சுக்கு நூறாகியது. கடந்த கால நினைவுகள் அலை பாய்ந்தன.

அன்பும் அடக்கமும் நிறைந்த அமுதாவுடன் அவர் இல்லற வாழ்வு ஆரம்பமாகியது. மூன்றே ஆண்டுகளில் வாழ்வின் அனைத்துப் பயனையும் அடைந்து விட்டது போல் இரண்டு வயது பெண் குழந்தை சாந்தியை அவர் கைகளில் பரிசாக அளித்துவிட்டு கண்ணை மூடிவிட்டாள் அமுதா. சாந்தியை வளர்ப்பதில் ஆறுதல் அடைந்தார், தேவராஜ், பெற்றோரும், உற்றோரும் குழந்தையை பேணி வளர்க்க ஒரு தாய் தேவை என வற்புறுத்தியதால் விமலாவை மணந்தார். ஆரம்பத்தில் சாந்தியை நேசித்த விமலா தனக்கு ஒரு பெண் குழந்தை; லதா பிறக்கவும், சாந்தியை வெறுக்க ஆரம்பித்தாள். வேலைக்காரியைப் போல நடத்த ஆரம்பித்தாள் மேல்நிலைப் பள்ளியோடு சாந்தியின் படிப்புக்கு முற்றுப் புள்ளியிட்டாள். லதாவை கல்லூரிப் படிப்பிற்கு அனுப்பினாள். லதாவை அளவிற்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்தாள். தேவராஜால் எதுவும் சொல்ல முடியவில்லை. சிறி விழுந்தாள் விமலா. தேவராஜின் இதயம் விம்மியது. “இயேசுவே! நானே வழியும் சத்தியமும் ஜுவனுமாயிருக்கிறேன் என்று சொன்னவரே! என் மகளின் வாழ்வுக்கு வழி காட்டப்பா! அற்பமாக எண்ணப்பட்ட லேயாளுக்கு புத்திரசுவிகாரம் அருளினீர் (ஆதி29:31) 'ஆறு கோத்திரப் பிதாக்களின் தாயானாள். நீர் உதித்த யூதா கோத்திரத்தின் தாயும் ௮வள் தானே! அன்னிய ஸ்திரீயின் மகன் என சகோதரர்களால் புறக்கணிப்பட்ட யாபேஸைக் கொண்டு அம்மோன் புத்திர் கையின்று இஸ்ரவேலை இரட்சித்தீரே அப்பா! அற்பமாக மதிக்கப்படும் என் மகளுக்கு வாழ்வு கொடுப்பா!” விழிகளின்று விழுந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் தேவராஜ்.

“அம்மா இந்த ஜுஸைக் குடிச்சிட்டு படுங்கம்மா” அன்பாக எழுப்பினாள் சாந்தி.

கண் விழித்தாள் விமலா. தன்னருகில் டம்ளரை ஏந்தியபடி நிற்கும் சாந்தியைக் கண் இமைக்காமல் பார்த்தாள். 15நாட்ககளுக்கு முன் நடந்த சம்பவம் ௮வள் கண்முன் விரிந்தது. தேவராஜிடம் கோபமாகப் பேசியவள், அன்றிலிருந்து சாந்தியை அதிகமாக வெறுத்து ஒதுக்கினாள். இந்நிலையில் ஒருநாள் வேகமாக மாடிப்படிகளில் இறங்கியவள். கால் தவறிட, படிகளில் உருண்டு விழுந்து விட்டாள். தலையில் பலமான இடி. வீட்டில் சாந்தியைத் தவிர யாருமில்லை. தலையில் கட்டுப்போட்டு பக்கத்து வீட்டுக்கார உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தாள் சாந்தி. அதிக இரத்தம் வெளியேறி விட்டதால் இரத்தம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்தது. தன் இரத்தத்தை மனப்பூர்வமாக தந்தாள். “என் மகள், என் மகள்” என்று செல்லம் கொடுத்து வளர்த்த லதா, வழக்கம் போல் சிநேகிதிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்க, வேளாவேளைக்கு மருந்து, டானிக் உணவு, பழரசம் எனக் கொடுத்துத் தன் கண்ணைப்போல் கவனித்து வந்தாள் சாந்தி.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்த விமலாவின் மனச்சாட்சி அவளைக் குத்திக்குடைந்தது. கண்கள் கண்ணீரைக் கொட்டின. கண்ணீரைக் கண்ட சாந்தி.

“ஏம்மா அழறீங்க? இன்னும் கொஞ்ச நாள்ல நல்ல சுகமாயிடும்மா” ஆதரவாகத் தேற்றினாள். 

“சாந்தி! என்னை மன்னிச்சிடும்மா! நான் பாவி! உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறேன்? என்னை எப்படியம்மா உன்னால் நேசிக்க முடியுது?” சாந்தியின் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்து அமர்த்திக் கொண்டாள். அன்பான அரவணைப்பால் சாந்தியின் உள்ளம் சிலிர்த்தது! பொங்கிவரும் தாயன்பை உணர்ந்தாள் முதல் தடவையாக.

“அம்மா! என்னை நீங்கள் கொடுமைப்படுத்தவே இல்லையம்மா! எதையாவது நினைத்து வருத்தப்படாதீர்கள்!.

“இல்லை சாந்தி! உன்னை வேலைக்காரியைப் போல நடத்தியிருக்கிறேன். நீ என்னை ஏம்மா நேசிக்கிற?” அழுதாள் விமலா.

“தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்த தெய்வம் நம் இயேசு, பகைவனையும் நேசின்னு சொன்னாரம்மா (மத்தேயு 6:44) தன்னைத் தன் தகப்பன் வீட்டை விட்டுப் பிரித்து அடிமையாக விற்றுப்போட்ட சகோதர்களையும் நேசித்தான் யோசேப்பு (ஆதயாகமம் 45:5, 50:19:20) அதனால் தானம்மா அவன் எகிப்தின் அதிபதியாக முடிந்தது. அப்படியிருக்கும்போது என்னை சிறுவயதிலிருந்தே வளர்த்த உங்களை நான் நேசிக்கவில்லை என்றால் இயேசு சாமி என்னை மன்னிக்கவே மாட்டாரம்மா”.

“அம்மா! கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்று நம் வேதம் கூறுகிறது. யோசேப்பு அடிமையாய்ப் போனதுனால்தான் எகிப்தின் அதிபதியானன். ரூத் தன் உற்றார் உறவினரை விட்டு அநாதைபோல தன் மாமியைப் பின் தொடர்ந்து போனதுனால் தான் நிறைந்த ஆசீர்வாதத்தைப் பெற்றாள்! என்னை வீட்டு வேலை செய்யச் சொன்னதால் எல்லா வேலைகளையும் நன்றாகப் பழகிக் கொண்டேன். நீங்கள் என்னை வெறுத்துத் தள்ளியபோது இறையன்பை ருசித்து அவரைப் பற்றிக்கொண்டேன். ஜெப வாழ்க்கை என்னுள் மலர்ந்தது. இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டுமம்மா!... அம்மா! நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கம்மா! சந்தோஷமாக இருங்க. அப்பத்தான் சீக்கிரம் சுகம் கிடைக்கும்”. என் கண்ணே சாந்தி! உனக்கிருக்கிற பெருந்தன்மையான மனது, கடவுள் பக்தி எனக்கில்லையேம்மா?” அணைத்துக் கொண்டாள் சாந்தியை.

அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்த தேவராஜீக்குத் தான் காண்பது கனவா? அல்லது நனவா? என்றே புரியவில்லை.

தன் தந்தையைக் கண்டதும் தாயின் அன்பணைப்பிலிருந்து தன்னை விடுத்துக் கொண்டு தந்தைக்கு டிபன் தர சமயலறை நாடிச் சென்றாள் சாந்தி.

தேவராஜைக் கண்ட விமலா, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். “என்னங்க உங்க ப்ரண்டுக்கு லெட்டர் போடுங்க! சாந்திக்கும் சாம்சனுக்கும் மேரேஜ் ஏற்பாடு செய்யுங்க! லதா பஸ்ட் பி.ஏ தானே படிக்கிறா. இன்னும் இரண்டுவருடம் போகட்டும் அப்புறம் அவளுக்கு செட்டில் பண்ணலாம். சாந்தி மேரேஜை நல்லா நடத்தி, அவளை வாழ வைக்கணுங்க! அப்பத்தாங்க என் மனதுக்கு சாந்தி கிடைக்கும்.” கண்ணீர் பொங்கக் கூறினாள் விமலா.

ஒரு முள் மலராக மலர்ந்து விட்டது. எனவே நறுமணம் வீசுகிறது. தேவராஜின் செவிகளில் தேனெனப் பாய்ந்தது விமலாவின் வார்த்தைகள்! அவர் உள்ளம், இறைவனுக்கு நன்றிதனை சமர்ப்பித்தது. இதழ்கள் இசைத்தன.

“ஸ்தோத்திரம் தேவா”.

இந்தக் கதை  நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download