கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் போதிக்கும் வகையில், ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி பரலோகராஜ்யத்தைப் பற்றி விளக்கினார் (மத்தேயு 18:2-4). அந்தக் குழந்தை அந்தியோக்கியாவின் இக்னேஷியஸ் என்று சொல்வதுண்டு, அவர் பின்னர் சபையின் தலைவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் ஆனார். பின்னர் அவர் வேதாகம கருத்துரையாளர் வில்லியம் பார்க்லேயின் கூற்றுப்படி தேவனுக்காக இரத்த சாட்சியாக மரித்தார். கிறிஸ்தவ நடை என்பது பாவம், உலகம் மற்றும் கெட்ட கிரியைகளிலிருந்து விலகி மனந்திரும்புதலுடன் தொடங்குகிறது. பின்னர் ஒரு நபர் ஒரு குழந்தையைப் போல மாற வேண்டும். இது பக்குவமற்ற அல்லது குழந்தைத்தனமாக மாறுவதை அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் தாழ்மையுடன் மாற வேண்டும். ஞானிகளையும் பெருமையுள்ளவர்களையும் குழப்புவதற்கு தேவன் தாழ்மையான மற்றும் முட்டாள்தனமான விஷயங்களைப் பயன்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 1:27).
அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்:
கர்த்தர் சிறுவனை அழைத்தார், அவன் வாஞ்சையாய் வந்தான்; உடனியல்பான கீழ்ப்படிதல் இருந்தது. அவன் தயங்கவில்லை, தாமதிக்கவில்லை, அந்த இடத்தை விட்டு ஓடி விடவில்லை. அதே போல, தேவன் நம்மை அழைக்கும்போது, நாமும் வாஞ்சையோடு ஓடோடி வர வேண்டும்.
குழந்தை ஆசான்கள்:
யூத சமூகத்திலும் பெரும்பாலான கலாச்சாரங்களிலும் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் பெரியவர்களைப் பார்க்க வேண்டும், பெரியவர்கள் குழந்தைகளைப் பார்க்கக்கூடாது என்று பெரும்பாலான கலாச்சாரங்கள் நம்புகின்றன. ஆனால் ஆண்டவரோ அந்த ஆணையைத் தலைகீழாக மாற்றி சிறுபிள்ளைகளை ஆசான்களாக்கி முக்கிய இடத்தை அளித்தார்.
அச்சுறுத்தல் இல்லாதது:
குழந்தைகள் அச்சுறுத்துவதில்லை. ஒரு குழந்தையை சந்திக்க யாரும் பயப்பட மாட்டார்கள். சீஷர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். கிருபையுடன் கூடிய இரக்கத்தால், கிறிஸ்தவர்கள் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும்.
ஏமாற்றாதே:
குழந்தைகள் மற்றவர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் அல்ல. பெரும்பாலும், அவர்கள் உண்மையுள்ளவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் குற்றமற்றவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களை ஏமாற்றவோ, வஞ்சிக்கவோ, பொய் சொல்லவோ கூடாது.
தாழ்மை:
குழந்தைகள் தங்கள் சமூக நிலையைப் பற்றி உணரவில்லை. அவர்கள் அனைவரையும் நேசிக்கிறார்கள், அனைவரையும் நம்புகிறார்கள், அனைவரையும் நன்றாக நடத்துகிறார்கள். அவர்கள் தாழ்மையுடன் இருக்க மெனக்கிடுவதில்லை, ஆனால் தாழ்மையுடன் இருக்கிறார்கள். கர்த்தராகிய ஆண்டவரின் சீஷராக இருப்பது என்பது தாழ்மையுடன் இருப்பது மற்றும் தேவ ஊழியர்களாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேல் அறையில் சீஷர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் பணிவையும் சேவையையும் ஊழியத்தையும் வெளிப்படுத்தினார் (யோவான் 13:2-17).
விசுவாசம்:
குழந்தைகள் மற்றவர்களை எளிதில் நம்புகிறார்கள், அவர்கள் வார்த்தைகள் உட்பட. சீஷர்கள் இரட்சிப்பைப் பெற்று விசுவாசத்தில் நடக்க கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் நம்ப வேண்டும்.
நான் தேவனுடைய சிறு பிள்ளையா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்