புனித பவுல், விசுவாசிகள் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் (ரோமர் 8:14; எபேசியர் 5:18). பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார் (எபேசியர் 4:30). நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையில், பல சீஷர்கள் இடையூறை அனுபவிக்கின்றனர். ஆவிக்கேற்றபடி நடக்க முடியாமல், அவர்கள் தள்ளாடுகிறார்கள், சில சமயங்களில் தோல்வியடைகிறார்கள் (கலாத்தியர் 5:25). இது மிக மிக இன்றியமையாத ஒழுக்கம்; ஒரு சீஷன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அறிவு ஜீவிகள்:
பல சீஷர்கள் தங்களை அறிவாளியாகவும், அதிபுத்திசாலியாகவும் கருதுகிறார்கள். எனவே, அவர்கள் வழிநடத்தப்படவோ அல்லது தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கவோ விரும்பவில்லை. புத்திசாலிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சில நேரங்களில் மூடர்களாக நடந்து கொள்வதுண்டு (ரோமர் 1:22).
கடந்த அனுபவங்கள்:
சில சீஷர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, அவர்கள் முன்பு போலவே நடப்பதால் தோல்வியடையலாம். கடந்த கால வெற்றி தற்போதைய வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை; எனவே தேவ ஆவியின் வழிகாட்டுதலைக் கற்றுக்கொள்வதும், அதற்கு அடிபணிவதும் அர்ப்பணிப்பதும் அவசியம்.
பணிச்சுமை:
ஜெபம், வேதாகம வாசிப்பு மற்றும் தேவ சித்தத்தைத் தேடுவதில் ஒழுங்கு இல்லாத பல விசுவாசிகள் உள்ளனர். வாழ்க்கையின் ஆவிக்குரிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பகுத்தறிவு இல்லாமல், பல விஷயங்களில் கவனமாக இருக்கிறார்கள்.
கேட்க வேண்டாம்:
தேவன் நம் கோரிக்கைகளைக் கேட்டு அவற்றை நிறைவேற்ற விரும்பும் அன்பான தேவன். பலர் இந்த அற்புதமான உறவை கொண்டாடுவதில்லை மற்றும் தேவனுடன் உரையாடும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்வதில்லை. ஆனால் வேதாகமம் கூறுவது என்ன? விசுவாசிகள் தங்கள் வாயைத் திறக்க வேண்டும், கேட்க வேண்டும் மற்றும் பெற வேண்டும் என்று கற்பிக்கிறது (சங்கீதம் 81:10; மத்தேயு 7:7). தேவன் பாரபட்சமின்றி கேட்பவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் (யாக்கோபு 1:5).
அர்ப்பணித்தல்:
சீஷர்கள் ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கு தங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், தேவ ஆவியால் கட்டுப்படுத்தப்படாத மற்றும் வழிநடத்தப்படாத பகுதிகள் வாழ்க்கையில் உள்ளது அல்லவா.
பிடிவாதம்:
பரிசுத்த ஆவியானவர் பிடிவாதமான மற்றும் கலகக்கார மக்களுடன் தொடர்ந்து போராடுவதில்லை (ஆதியாகமம் 6:3).
காத்திருக்க வேண்டாம்:
அமைதியற்றவர்களும் உள்ளனர். ஆவியானவர் அவர்களை வழிநடத்தும் வரை அவர்களால் காத்திருக்க முடியாது. தாவீது முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை கேட்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது; அதற்குப் பின்பு பெலிஸ்தியரின் பாளயத்தை முறிய அடிக்க கிளம்பினான் (2 சாமுவேல் 5:24). ஆனால் தேவனுக்கு முன்னால் செல்வது பேரழிவுக்கான ஒரு செய்முறையாகும்.
நான் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்