ஒவ்வொரு நாளும் ஒரு பாரில் சில நண்பர்கள் கூடுவார்கள். அவர்கள் மது நிரப்பப்பட்ட கண்ணாடிகளை எடுத்து நண்பர்களிடம் 'சியர்ஸ்' (‘Cheers') என்று சொல்லுவார்கள். இருப்பினும், அவர்கள் அனைவரும் உற்சாகம் ('சியர்ஸ்') என்று சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை. மது, போதைக்கு அடிமையானவர்கள், விவாகரத்து செய்தவர்கள், துக்கப்படுபவர்கள் மற்றும் சோகமானவர்கள் அவர்கள் தங்கள் கவலைகளை குடியில் மூழ்கடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த தற்காலிகமான நிவாரணம் தான் ‘சியர்ஸ்’. எல்லாம் தெளிந்ததும் மீண்டும், அவர்கள் தங்களுக்கான கவலைகளில் மூழ்கிவிடுகிறார்கள்.
கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; புதிய ஏற்பாட்டில் குறைந்தது ஐந்து முறையாவது திடன் கொள்ளுங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கத்தில், அந்த சொற்றொடர் ஒற்றை வார்த்தையாக இருந்தது.
1) மன்னிப்பு:
படுத்த படுக்கையான முடக்குவாதக்காரனிடம் (திமிர்வாதக்காரன்), அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதால், உற்சாகமாக இருக்கும்படி கர்த்தர் சொன்னார். "இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்" (மத்தேயு 9:2). "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்" (சங்கீதம் 32:1).
2) உடல்நலம் மற்றும் மறுசீரமைப்பு:
பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கு பிரச்சனை இருந்த பெண், ஆண்டவரின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டவுடன் குணமடைந்தாள். தொட்டது யாரென்று தேடியவுடன் பயம் கொண்டாள், ஆனாலும் தன்னை அடையாளப்படுத்தினாள். அவள் குணமடைந்தாள் அல்லது மீட்பைப் பெற்றாள் என்று கர்த்தர் அவளுக்கு உறுதியளித்தார். "இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்" (மத்தேயு 9:22).
3) பிரசன்னம்:
சீஷர்கள் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால், படகோட்ட முடியாமல் தவித்தனர். உடனே ஆண்டவர் தண்ணீரின் மேல் நடந்தபடி அவர்களிடம்; "திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்" (மத்தேயு 14:27). ஆம், கர்த்தர் காற்றை நிறுத்தக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் படகில் இருப்பதைத் தேர்ந்தெடுத்தார்.
4) வெற்றி:
சிலுவையில் அறையப்படுவதற்கு முன், சீஷர்களுடன் ஒரு நெருக்கமான உரையாடலின் போது, கர்த்தர் உபத்திரவத்தைப் பற்றி பேசினார். உலகில் அவர்கள் உபத்திரவத்தை எதிர்கொள்வார்கள் என்றும்; ஆனாலும் "திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்" (யோவான் 16:33). சீஷர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, வெற்றிக்கு உரியவர்கள்.
5) உறுதிமொழி:
தன் சாட்சியை யூதர்கள் குழுவும் ஆலோசனை சங்கமும் நிராகரித்தபோது பவுல் மிகவும கவலைப்பட்டார். ஆனால் "அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமில் சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்" (அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11). நிராகரிப்பால் அவர் ஊக்கம் இழந்தபோதும், கர்த்தர் அவருடன் இருந்தார்.
ஆம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும், மீட்டெடுக்கப்பட்டும், மேலும் நெருக்கடியிலும், பிரச்சனையிலும், தோல்வியிலும் அவருடைய பிரசன்னம் நம்மோடு இருக்கும் போது நாம் உற்சாகமாக இருக்க வேண்டும், திடன் கொள்ள வேண்டும்.
நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara