போதகர் ஒருவர் இளைஞன் ஒருவனுக்கு ஆற்றில் வைத்து ஞானஸ்நானம் கொடுத்தார். அப்போது கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அங்கிருந்த சிலர் போதகரை நோக்கி; “எங்கள் புனித நதியை மாசுபடுத்திவிட்டீர்கள். இதற்கு நாங்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்போம்" என கத்தினார்கள்.
நதி மற்றும் மதம்:
வரலாற்றில், ஆறு அல்லது ஏரி அல்லது கடல் போன்ற நீர்நிலைகளின் கரையில் நாகரிகங்கள் அல்லது வாழ்விடங்கள் இருந்தது என்பது தெளிவாகிறது. இத்தகைய வாழ்விடங்களில் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதால் அவர்கள் நதி அல்லது கடலை வணங்கத் தொடங்கினர். படைத்தவரை மறந்து, வெறும் படைப்புகளை வழிபட்டனர். அவர்கள் அத்தகைய நதிகளை முடிந்தவரை தூய்மையாக வைத்திருக்க விரும்பினர், ஆனால் எப்போதும் தோல்வியடைந்தனர்.
வடிகால்:
ஆத்திரமடைந்தவர்களிடம் ஒருவர் கேட்டார்; சாக்கடை நீர் ஆற்றை மாசுபடுத்தவில்லையா? பல ஆறுகள் மற்றும் ஏரிகளில், சாக்கடை தண்ணீர் வந்து கலக்கிறதே என்று கேட்டதற்கு, அவர்கள் பதில் சொல்லவில்லை.
தொழிற்சாலை கழிவு:
மற்றொரு நபர் கேட்டார்; கரையோரங்களில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகள் கழிவு தண்ணீரை வெளியேற்றுவது உங்களுக்குத் தெரியாதா? ஆற்றில், பல தொழிற்சாலைகள் அவற்றின் அழுக்கு நச்சு நீரை வெளியேற்றுகின்றனவே.
இறந்தவர்களின் சாம்பல்:
இன்னும் ஒரு கேள்வி; இறந்தவர்களின் சாம்பல், நதியை மாசுபடுத்தவில்லையா? இறந்தவர்கள் தகனம் செய்யப்பட்டனர், சாம்பல் எச்சங்கள் ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஆவிக்குரிய மாசு:
ஞானஸ்நானம் பெற்றவர் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். எல்லா மனிதர்களும் சாத்தானால் பாதிக்கப்பட்டவர்கள், பாவத்தின் ஆவிக்குரிய அழுக்கால் மாசுபடுத்தப்பட்டவர்கள். எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள் என்று வேதாகமம் அறிவிக்கிறது (ரோமர் 3:23).
அக தூய்மை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்; "மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்" (மாற்கு 7:20-22).
புற தூய்மை:
பல மதங்கள் வெளிப்புறத் தூய்மையைப் பற்றியே போதிக்கின்றன, உள்ளான பரிசுத்தத்தைப் பற்றி அதாவது சுத்தமான இருதயம், மேன்மையான எண்ணங்கள், குற்றமற்ற மனசாட்சி, தார்மீக நோக்கங்கள், நீதியான அணுகுமுறை, இரக்கமுள்ள இருதயம் மற்றும் சரியான உறவு பற்றியெல்லாம் பேசுவதே இல்லை.
உண்மையான ஆவிக்குரிய வாழ்வு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒரு நபரை எல்லா பாவங்களிலிருந்தும் நீக்கி சுத்தப்படுத்துகிறது மற்றும் அந்நபரின் மனசாட்சியைச் சுத்திகரிக்கிறது (1 யோவான் 1:7-9; எபிரெயர் 9:14).
(மத்தேயு 5:8) தேவனைப் பார்ப்பதற்கு என் இருதயம் சுத்தமானதாக உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்