தொடர் - 16
நெடிதுயர்ந்த வரையினின்று வீழ்ந்தது வெள்ளியருவி. அதன் நீர் விழும் ஓசை இனிய கானமாய் எழுந்தது. வானளாவ உயர்ந்து நின்ற மரங்களின் பசுமை பொங்கும் இலைகளின் மேல் செந்தீயாய்ச் சிரித்த மலர்கள் அழகைச் சிந்தின! மாலை நேரத் தென்றல் மலர்களை தழுவி நறுமணங்கமழச் செய்தன. ஆண்டவனின் அற்புத படைப்பின் அழகை அள்ளிப் பருகியபடி பசும்புற்றரை மீது அமர்ந்திருந்தனர் ஜெபசிங்கும் சாந்தியும்! பள்ளி துவங்கவும் பசுஞ்சோலை கிராமத்திற்கு வந்து திரும்பவும் பணியேற்று ஆறு திங்கள் பறந்துவிட்டது. வானிலே வெண்ணிலவு மெல்ல எழுந்தது. முழுநிலா நாள் அல்லவா? பார்த்துக்கொண்டே இருந்த ஜெபசிங் உள்ளத்தில் உணர்வுகள் பொங்கிப் பிரவாகித்தன. உணர்ச்சியின் வசப்படுபவன் பைத்தியம். உணர்ச்சியைத் தன் வசப்படுத்துவோன் கவிஞன்!.
ஜெபசிங்கின் விரல்கள் துடித்தன. தன் பாக்கெட்" டைரியை எடுத்து 'எழுத ஆரம்பித்தான்.
கமல முகஞ் சிரிக்க
கஸ்தூரி தான் மணக்க
தந்தக் கால் எடுத்து
தவழ்ந்து வரும் சிறுகுழவியோ?
நீலவான் பொய்கை தனில்
நீந்தி வரும் முழுநிலவே - நீ
சந்தனக் கணுக்காலில்
சதிராடும் கிண்கிணியினின்று (கொலுசு)
சரிந்து விழும் முத்துக்களோ
சிதறி இருக்கும் விண்மீன்கள்!
உரிமையோடு அவன் டைரியைப் பறித்தவள் கவிதைப் படித்தாள். கனவுலகில் திளைத்தாள்! “என்ன சாந்தி! வரப்போகும் நம் செல்வத்தை நினைத்துப் பார்க்கிறாயா?” சிரித்தார் ஜெபசிங்.
“என்னை மன்னித்துவிடுங்கள்... நான்... நிறுத்தினாள் அவள் விழிகள் கலங்கியிருந்தன.
“சும்மா சொல் தவறான எதையும் நீ செய்திருக்கமாட்டாய்!”.
“தன் மீது இவ்வளவு நம்பிக்கையா? அவள் உள்ளம் அவளைக் குடைந்தது. “நான் முன்பே சொல்லியிருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வராதே' உள்ளம் குமைந்தாள், மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.
“அத்தான்! ஆண்டவர் நமக்கு : ஒரு ஆண் குழந்தையை தந்தால், அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டு ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பதாக பொருத்தனை பண்ணிவிட்டேன். உங்களை கேட்டு செய்திருக்க வேண்டும். இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள்” அவள் கண்கள் இறைஞ்சின.
“என் சாந்தி தப்பிதமான எந்தக் காரியமும் செய்ய மாட்டாள் என எனக்குத் தெரியும். ஆனாலும்... நாம் இருவரும் ஒருவரே! நாம் எதைச் செய்தாலும் , ஏன்... சிந்தித்தாலும் கூட அதை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து முடிவெடுக்க வேண்டும் தெரிகிறதா?”.
“சாந்தி! கவலைப்படாதே! தெரியாமல் செய்ததற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது. நான் உன்னை மன்னித்து விட்டேன். நீ 'உம்' என்று இருந்தால் வீணாக நம் மகிழ்ச்சியான நேரம் தான் துன்பமாகும்! என் சாந்தியல்லவா? எங்கே சிரி!” சிரித்தார் ஜெபசிங். மெல்லப் புன்னகைத்தாள் சாந்தி மாலைமயங்க ஆரம்பித்தது. “வீட்டிற்குப் போகலாமா?” ஜெபசிங் கேட்டார்.
“நீங்கள் தனி ஜெபம் பண்ணும் இடமல்லவா இது? இன்று ஜெபிக்க வேண்டாமா?”
இருவரும் முழங்கால் படியிட்டனர். நேரம் ஓடியது. ஒருவாறு ஜெபத்தை முடித்து எழுந்தவர் இரவு நேரமாகவே சற்று விரைவாக நடந்தனர்.
தேவநேசமாக மாறிய இராமசாமித்தேவர் ஜெபசிங்கை தன் மூத்தமகனாகவே பாவித்து பாசம் செலுத்தினார். பசுஞ்சோலை கிராமத்திலே ஜெபசிங் தம்பதியினரை தன் குடும்பத்தோடே ஒன்றாகக் குடியிருக்கும்படி கூறினார். அதற்கு ஜெபசிங் சம்மதிக்காததால் தன் வீட்டுக்கு அருகிலேயே தனக்குச் சொந்தமான: வீடுகளில் ஒன்றில் குடியிருக்கும்படி வற்புறுத்தவே ஜெபசிங் சம்மதித்தார். இராமசாமித்தேவரின் .... மன்னிக்கவும் தேவநேசம் அவர்களின் வீட்டைக் கடந்துதான் ஜெபாவும், சாந்தியும் தங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் தன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்த தேவநேசம்,
“தம்பி! சாந்திம்மாவைக் கூட்டிக்கிட்டுப் போனா சீக்கிரமா வீட்டுக்குத் திரும்பிடணும், கர்ப்பிணிப் பொண்ணு, இராத்திரி மலைப்பக்கமா இருக்கிறது நல்லதல்லப்பா. சாமி நம்ம கூடத்தான் இருக்கார். நாமும் ஜாக்கிரதையா இருக்கணுமில்லையா?” பாசம் பொங்க உரிமையோடு உரைத்தார்.
“சரிங்கய்யா!” பணிவோடு பதிலுரைத்தார் ஜெபசிங், “தம்பி! உன்னோட கொஞ்சம் பேச வேண்டும்” என்று கூறவே “வருகிறேன் ஐயா” என்றபடி வீட்டினுள் நுழைந்தார். சாந்தி, தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்குச் சென்று, இரவு உணவை ஆயத்தம் செய்தாள்.
இரவு உணவை உற்சாகமின்றி அருந்திக் கொண்டிருந்த ஜெபசிங்கை கண்கொட்டாமல் பார்த்தாள் சாந்தி!.
ஏங்க.... சாப்பாடு நன்றாக இல்லையா? அமைதியாகக் கேட்டாள். “நன்றாக இருக்கிறதே! ஏன் சாந்தி” ஆச்சரியமாகக் கேட்டார்.
“உங்கள் முகத்தைப் பார்த்தால் ஏதோ பிரச்சனை மாதிரி தெரிகிறது... சின்ன மாமாவிடம் போண்களே... ஏதும் சொன்னார்களா?”
“பிரச்சனை தான் சாந்தி! திருமணப் பிரச்சனை. டேவிட் துரைராஜுக்கு வசந்தியைக் கேட்கிறார்கள்!” சுரத்தில்லாமல் சொன்னார்.
“இதிலென்ன பிரச்சனை? வசந்தி வேலையில்லாமல் தானே இருக்கிறாள். டேவிட் நல்ல பிள்ளையாக இருக்கிறான். வசந்திக்கு ஏற்றவன் தான் டேவிட், திருமண காரியம் கைகூடி வரும்போது நாம் ஏன் யோசிக்க வேண்டும்?
“சாந்தி! டேவிட்டுக்கு வசந்தி ஏற்றவள் தானா என்பதே என் பிரச்சனை”.
கதிரவனைக் கண்ட கமலம் போல் மலர்ந்திருந்த அவள் முகம் காலையில் குவளையெனக் கூம்பியது.
“ஏனத்தான் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” வருத்தம் வார்த்தையில் தெரிந்தது.
“சாந்தி! இப்படிச் சொல்லுகிறேனே என்று வருத்தப்படாதே. உங்களுக்கு அப்பா இல்லை. அத்தை உழைச்சி ஓடாகி அவளைப் படிக்க வைச்சிருக்காங்க. அவளுக்கு அந்த உணர்வே இல்லை. தான் அலங்கரித்துக்கொண்டு ஜாலியா இருந்தாப் போதும் என்று நினைக்கிறாள். அவள் இந்த கிராமத்தில் வந்து சந்தோஷமா இருப்பாளா? அவனை சந்தோஷமா இருக்கவிடுவாளா? ”
“அப்படிச் சொல்லாதீங்கத்தான்! எல்லா நல்ல பண்புகளும் பிறந்த பொழுதே நமக்கு வந்து விடுவதில்லை. சூழ்நிலைகளும் பண்பை உருவாக்குகின்றன. இங்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாமும் அருகில் தானே இருக்கிறோம் அறிவுரை கூறி திருத்தலாம்!” ஆவலோடு தன் கணவர் முகத்தைப் பார்த்தாள்.
“எனக்கென்னவோ “டேவிட் வசந்தி இணைப்பு ஆரம்பத்தில் அதிகக் கசப்பை உருவாக்கும் என்றேபடுகிறது. காத்தருக்குச் சித்தமானால் நடக்கட்டும்!”
“ஜெபிப்போம், மாமாவிடம் போய்ச் சொல்வோம். கா்த்தருக்குச் சித்தமானால் நடக்கட்டும் இந்த சனி, ஞாயிறு மதுரை போவோமா?” ஆவல் பொங்கி வழிந்தது.
சத்தமாகவே சிரித்தார் ஜெபசிங். “தங்கை திருமண காரியம் என்றவுடன் உற்சாகத்தைப் பார். இப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் சொல்வோமா?” கேலியாகக் கேட்டார்.
“போங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான்” சிரித்துக்கொண்டே சமையலறையைச் சுத்தம் செய்ய சென்று விட்டாள். மனக்கண்ணால் தன் தங்கையின் மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்தாள் சாந்தி!.
இதன் தொடர்ச்சி ஏமாற்றம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.