கர்த்தராகிய இயேசுவை பாவிகளின் சிநேகிதன் என்றார்கள்; ஏனென்றால் அவர் சாமானியர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கிண்டல் கேலிக்கு ஆளானவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் தள்ளப்பட்டவர்கள் என போன்றோரிடம் கரிசனையாக இருந்தார், நன்கு பழகினார் (மத்தேயு 11:19). வரலாறு முழுவதும், திருச்சபை காணாமல் போன, ஒதுக்கப்பட்ட மற்றும் சிறியோரை ஏற்றுக்கொண்டதைக் காணலாம்.
குணப்படுத்தும் பணி:
மிஷனரி மருத்துவராக பணியாற்றிய பால் பிராண்ட் என்பவர் தான், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொழுநோய்க்கான மாற்றுச் சிகிச்சைக்கு முன்னோடியாக இருந்தவர். பிலிப் யான்சியுடன் இணைந்து எழுதிய 'பிரமிக்கத்தக்க அதிசயமாய்' (Fearfully and Wonderfully) என்ற புத்தகத்தில் ஒரு முக்கியமான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்:
கார்மேகன், ஒரு தொழுநோயாளி, நோய் முற்றிய நிலையில் இருந்தார். அவருக்கு ஒருபக்க முக முடக்கம் இருந்ததால் சாதாரணமாக சிரிக்க முடியாது. மக்கள் அவரை விரும்புவதில்லை மற்றும் சில நேரங்களில் அவர் சிரித்தால் பயந்து விடுவார்கள், அதனால் அவர் சிரிப்பதையே நிறுத்திக் கொண்டார். பால் பிராண்ட் மற்றும் அவரது மனைவி மார்கரெட் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அத்தகைய நோயாளிகள் பொதுவாக நன்றியற்றவர்களாகவும், எதிர்ப்பவர்களாகவும் மற்றும் கலகக்காரர்களாகவும் இருப்பார்கள். பால் பிராண்டின் தாய், அவரிடம் அன்பையும் மரியாதையையும் காட்டினார், அது அவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வர வைத்தது.
விசுவாச சோதனை:
கார்மேகன் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால், நோயாளி அல்லாதவர்களிடம் அவருக்கு சரியான அணுகுமுறை இல்லை. கார்மேகன் ஒரு நாள் உள்ளூர் திருச்சபைக்குச் சென்றால் என்ன நடக்கும் என்று கேட்டார், ஆனால் அங்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. உள்ளூர் விசுவாசிகள் வெளிநாட்டு மிஷனரிகளைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.
பதட்டமான தருணங்கள்:
இருப்பினும், பால் பிராண்ட் சபையின் மூப்பர்களுடன் கலந்துரையாடினார், மேலும் அவர் கார்மேகனுடன் வந்து பொதுவான கோப்பை பயன்படுத்தப்படும் பரிசுத்த பந்தியில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை, ஒரு வெளிநாட்டு மருத்துவரும் குணமடைந்த தொழுநோயாளியும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர், என்ன நடக்கும் என்ற ஆச்சரியம் காத்திருந்தது.
நட்பான சைகை:
சபையார் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது, முந்தைய பெஞ்சில் அமர்ந்திருந்த ஒருவர் திரும்பி இருவரையும் பார்த்தார். கார்மேகனை அழைத்து தன் அருகில் உட்காரச் சொன்னார். கார்மேகன் மிகவும் மகிழ்ந்து சென்று அமர்ந்தார். சபையில் நடந்த அந்த நட்பான செயல் கார்மேகனை முற்றிலும் மாற்றியது. பின்பதாக தட்டச்சுப்பொறிகளுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியபோது சிறந்த துல்லியமான கருவிகள் தயாரிப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார், வாழ்வில் மாற்றம் பெற்றார்.
மற்றவர்களை நேசித்தல்:
தேவனை நேசிப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், காண்கின்ற சகோதர சகோதரிகளிடம் தேவன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள் (1 யோவான் 4:20).
நான் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களை ஏற்றுக்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்