விழிப்புடனும், ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என விசுவாசிகளுக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்கப்படுகிறது. விசுவாசிகள் எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் இல்லாதபோது, அவர்கள் எளிதில் ஏமாற்றப்படலாம். "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்" (கொலோசெயர் 4:2) என்பதாக பவுல் எழுதுகிறார். கவனமாக விழித்திருங்கள் என்று சொல்வதற்கு முன்பு நன்றி செலுத்துதல் என்பது மிக அவசியம். ஆம், சிலர் விண்ணப்பங்களை மட்டுமே ஜெபமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நன்றியுணர்வுடனும் இருக்கும் சீஷர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், மிகவும் சில ஊழியக்காரர்களே விழிப்புடன் இருக்கிறார்கள்.
1) விழித்தல்:
கவனமாக இருப்பது என்பது விழிப்புடன் இருப்பது. ஜெபத்தில் தூங்கக்கூடாது என்பது எச்சரிக்கை. துரதிர்ஷ்டவசமாக, சிலர் ஜெப நேரம் தொடங்கியவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்கிறார்கள். சிலர் விழித்திருந்தாலும், தூக்கத்தில் முணுமுணுப்பது போல் நடந்துகொள்கின்றனர். தூக்கத்தில் நடப்பது போல, சிலர் ஜெபிக்கும் போது அலைந்து திரிவார்கள்.
2) கவனித்தல்:
விசுவாசிகள் குறைந்த பட்சம் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில், ஆவிக்குரிய மண்டலம். கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை ஒடுக்கும் ஒரு மோதல் மண்டலத்தில் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் முன்னணியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எபேசியர் 6:1-10). உதாரணத்திற்கு, சூதாட்டம் அல்லது விபச்சாரம் அல்லது போதைப்பொருள் அல்லது கொடுமை அல்லது வன்முறைக்கு பெயர் போன நகரங்கள் உள்ளன. இரண்டாவதாக, உள்ளூர் சூழலில் கவனமாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் சமகாலச் சிக்கல்களில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவ நோக்கத்திற்கு எதிராக செயல்படும் சாத்தானால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம். சாத்தானின் உத்திகளை அறிந்து, அதையெல்லாம் விசுவாசிகளின் ஜெபங்களினால் தகர்த்தெறியவும் மற்றும் கட்டுப்படுத்தும்படி இருக்க வேண்டும், மூன்றாவதாக, நம் ஜெபங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராய்" (எபேசியர் 3:20) இருக்கிறாரே.
3) தரித்திருத்தல்:
நாம் ஜெபங்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பவுல் எழுதுகிறார். தோரணையில் அதாவது வெளித் தோற்றத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் (content) அல்லது ஜெபக்குறிப்புகளிலும் சரியானபடி இருக்க வேண்டும். சிலருக்கு ஜெப மனப்பான்மை இருக்கலாம் ஆனால் ஜெபங்களில் வெளிப்படுத்த கவனமான உள்கருத்துகள் இல்லை. அவர்கள் தேவ விருப்பத்துடன் அல்லது சித்தத்துடன் ஒத்துப்போகாத தங்களுக்கு விருப்பமான உட்கருத்துகளை முணுமுணுக்கிறார்கள்.
4) நன்றி உணர்தல்:
விசுவாசிகள் நன்றியுள்ளவர்களாக இருக்க கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தேவனின் அற்புதமான பதிலைக் குறித்த ஒரு விழிப்புணர்வு இன்றி ஜெபித்து விட்டு அதை அப்படியே மறந்து விடுகிறார்கள்.
நான் தேவ காரியங்களில் விழிப்புடனும் நன்றியுடனும் இருப்பதில் உறுதியாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்