விண்ணிலே கண்சிமிட்டும் விண்மீன்கள் மண்ணுலகுக்கு இறங்கி வந்தது போல் மின் சுடரைத் தன்னுள் கொண்ட பல வண்ணக் காகித விண்மீன்கள், அந்தத் தெருவின் பெரும்பான்மையான வீடுகளின் முன்தொங்கித் தங்களுக்குள் இருந்த மின் விளக்கால் ஒளியைப் பரப்பியதை தன் பங்களாவின் வாயிலில் நின்று கண்ணற்ற சாந்தா விண்மீன் அற்ற தன் பங்களாவையும் பார்த்தாள். சோகம் என்ற மேகம், அவள் 'நிலவு போன்ற வதனத்தில் படர, விழிகளில் நீர் திரையிட்டது. கிறிஸ்துமஸ் வருகைக்கான மகிழ்ச்சி அந்த பங்களாவில் இல்லை.
மாடி வராண்டாவை நோக்கினான் சுரேஷ். நாற்காலியில் அமர்ந்து எங்கோ ஒரு சூன்யத்தை வெறித்துப் பார்த்தபடி அமாந்திருந்தான். பெருமூச்சு விட்டான். நினைவு பின்னோக்கிச் சென்றது.
24 ஆண்டுகளுக்கு முன் பூத்துக் குலுங்கும் புது மணப் பொண்ணாய் நாணமும், நளினமும் பின்னிட, பொன்னகையும் புன்னகையும் போட்டியிட கம்பீரமான தன் கணவன் டேனியலைக் கரம் பற்றி ஆலயம் சென்றாளே. அன்று அவளடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு உண்டா? அனைத்து ஆசீர்வாதமும் அடைந்தது போல் அகமகிழ்ந்தாள். வசந்த கால வாழ்வில் தென்றல் கமழும் எனக் கனவு கண்டாள். ஆனால் ஏமாற்றமே! ஓவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்க்காகப் பல விளக்குகளாலும், பொம்மைகளாலும் ஒரு குழந்தை தவழ வேண்டுமப்பா, எனக்குக் குழந்தை பாக்கியம் கொடு? என்று தானே இறைஞ்சுவாள். அவள் வேண்டுதல் காற்றோடு காற்றானதே? அவனியையே அழித்துவிடும் அணுகுண்டுக்கு வழியமைத்த அறிவியல் வளர்ச்சி அவளுக்கொரு குழந்தையைக் கொடுக்கவில்லை. நாடாத மருத்துவமில்லை. தேடாத சிகிச்சையும் இல்லை. குழந்தைச் செல்வம் அவளுக்கு இல்லையென மருத்துவர் மறுமொழி கொடுத்ததும் குழந்தைப் பற்றுடைய இருவரும், ஏக்கப் பெருமூச்சுகளைச் சொரிந்தனர்.
இதேபோல் தான் கிறிஸ்மஸ்க்கு 6தினங்களுக்கு முன் “நீ ஆவலோடு எதிர்பார்க்கும் கிறிஸ்துமஸ் பரிசு நீங்கள் இருவரும் வந்தால் கிடைக்கும்” என்று அவளுடைய தோழி செல் போனில் தெரிவித்தாள். யாராவது மேல்நாட்டு மருத்துவர் அங்கு வந்திருப்பாரோ? என அவர் உள்ளம் துடியாய் துடித்தது. டேனியலும், சாந்தாவும் உடனே பயணமாகினர்.
அன்றலர்ந்த தாமரை போல் அழகாகப் படுத்திருந்த அந்தப் பச்சிளம் பாலகனையே பார்த்தாள் சாந்தா. “யார் பெற்ற குழந்தையோ?” என உள்ளம் நினைத்தது. அழ ஆரம்பித்தது குழந்தை. அவளை அறியாமலேயே அக்குழந்தையை தூக்கினாள் சாந்தா. அழுகை நின்றது. அவளையே பார்த்தது அக்குழந்தை. அதன் விழிகள் எதையோ அவளிடம் கேட்டன. பிஞ்சுக்கரம் அவள் சேலையை பற்றியது. பட்டாம் பூச்சியென இமைகள் சிறகடிக்க இதழ் விரித்து சிரித்தது குழந்தை. தன்னை மறந்தாள் சாந்தா. கண்களை ஆனந்தக் கண்ணீர் மறக்க, குழந்தையை முத்தமிட்டாள்.
“அன்னை காப்பகம்” என்ற அனாதை விடுதியிலிருந்த குழந்தை, டேனியேல் பங்களாவில் ராஜேஷ் என்ற பெயருடன் பவனிவர ஆரம்பித்தது. சாந்தாவிற்குத் திருமணமான பின் இது ஆறாவது கிறிஸ்மஸ். அன்று குழந்தைக்கு ஞானஸ்நானம். உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துரைக்க, மாபெரும் விழாவைக் கொண்டாடித் தங்கள் கிறிஸ்மஸ் பரிசாக அக்குழந்தையை ஏற்றனர் டேனியல் தம்பதியினர்.
வெறுமையாகத் தோன்றிய அந்த இல்லத்தில் நிறைவின் சாயை! குறு குறு என நடந்து, சிறு கை நீட்டி, இட்டும், தொட்டும் கெளவியும் துழந்தும் நெய்யுடையடிசிலை மெய்பட விதித்தும், அவன் உண்ணும் அழகில் தன்னை மறந்தாள் சாந்தா. கொஞ்சு மொழி பேசி, அவள் உள்மனதைக் கொள்ளைக் கொண்டான். துறுதுறு வென நடக்க ஆரம்பித்தான். மாடிப்படிகளில் மடமடவென்று ஓடி, ஜன்னல்களில் ஏறி, அவன் தன் சேட்டைகளால் அவளை அச்சுறுத்துவான். “என்னைக் கூட மறந்து விடுவாய் போலிருக்கிறதே” என்று டேனியேல் கூறுமளவிற்கு ராஜேஷ் ஒருவனே அவளுக்கு உலகமானான்.
நாட்களுக்குத்தான் எவ்வளவு வேகம்? வருடங்கள் உருண்டோடின. அழகின் பிம்பமாய், அறிவின் சிகரமாய் அன்பின் பெட்டகமாய்த் திகழ்ந்தான். ராஜேஷ் அரும்பு மீசைக் கோடிட மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ள இளங்காளை. தெளிந்த நீரோடையென ஆனந்த மயமாகச் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் மீண்டும் புயல். ஒரு மாதத்திற்கு முன் கல்லூரியிலிருந்து வந்த ராஜேஷ். சோகமே உருவாக இருந்தான். காரணம் சொல்ல மறுத்து விட்டான். யாருடனும் சரியாகப் பேசுவதுமில்லை. சரியாகச் சாப்பிடுவதும் இல்லை. தாயின் கெஞ்சல்கள், தடம்புரண்ட வண்டியாயின. துடித்தாள் பேதை!
“அம்மா, அம்மா” என்று தன்னையே வட்டமிடும் தன் மகன் ஏன் இப்படி மாறினான்? அவளுக்குப் புரியாத புதிராகவும் இருந்தது. “யாரும் எதுவும் சொல்லி இருப்பார்களோ?” என்ற
வினாவும் உள்ளத்தில் எழுந்தது. குழம்பினாள்! தவித்தாள்!
டக்... டக் காலணி ஒலி கேட்டுத் திரும்பினாள். ராஜேஷின் பள்ளித் தோழன் விஜயன் நின்றான். “வாப்பா, விஜய்!” உற்சாகமின்றி வரவேற்றாள்.
“ஆன்டி!” அவளை ஊடுருவிப் பார்த்தவன்.” கவலைப்படாதீர்கள். கடவுளை நம்பி வாழும் அன்பான உங்கள் உள்ளத்திற்கு ஒரு குறைவும் வராது.” என்று அழுத்தமாக கூறியவன் மாடிப்படியில் ஏறினான்.
“ஹலோ, ராஜேஷ்! என்று உற்சாகமாக அழைத்தபடி அவனருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான் விஜயன்.
“ஓ! விஜெய்யா! வா!” என்றான் சுருதியிழந்த பாடலாக.
சுணையிலே பிணைமான் நீர் அருந்த அதன் துணைமான் கம்பீரமாக நிற்கும் காட்சி, அழகிய மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. மேஜை மேல் அந்த கலைப் பொருளைக்
கண்ணுற்ற விஜய் உற்சாகமாய் பேச ஆரம்பித்தான்.
“ராஜேஷ் இந்தக் கலைப் பொருளை எங்கேடா வாங்கினாய்? மிக அற்புதமாக இருக்குடா. எந்த மரத்தினால் செய்யப்பட்டதோ? மண் எப்படி பட்டதோ?' வண்டல் மண் படிந்ததோ?” தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்தான் ராஜேஷ்.
“டேய் நிறுத்துடா” சாதாரண மரத்துண்டை இப்படி ஒரு அழகிய கலைப் பொருளாய் மாற்றியிருக்கும் கைவினைஞனைப் புகழாமல், அந்த திறமையை அவனுக்கு ஈந்த கடவுளின் மகத்துவத்தை புகழாமல். அந்த மரம்: இருந்த மண்ணைப் புகழ்கிறாயே மடையா” உரிமையோடு கேலி பண்ணிச் சிரித்தான் ராஜேஷ்.
“அப்படியானால் மண்ணைத் தேடும் மடையன் நீதாண்டா” என்றான் ஆணித்தரமாக. “என்ன சொல்ற?” குழப்பத்தோடு அவனைப் பார்த்தான் ராஜேஷ்.
“உன்னை பாராட்டி, சீராட்டிப் பக்குவமாய் வளர்த்தது யாருடா? எங்கம்மா சொல்வாங்க. “ராஜேஷை சாந்தா வளர்த்த மாதிரி யாருமே வளர்த்திருக்க மாட்டாங்கன்னு” ஒரு ஆயா கையில் உன்னைக் கொடுத்து வளர்க்க கூட அவங்க மனசு சம்மதிக்கவில்லை. தானே எல்லாம் செய்வாங்களாம். பொழுது போக்கு... கிளப்... அது... இது... எங்கும் போக மாட்டாங்களாம். பாசத்தை உன் மீது கொட்டி வரும் அந்த தாயை எவனோ ஒருத்தன் உளறினான் என்று தள்றேயேடா?” நிறுத்தினான் விஜய்.
ராஜேஸின் மனக்கண் முன் இளமைப் பருவ நிகழ்ச்சிகள் படமாயின. உணவருந்த மறுக்கும் தன்னைக் கெஞ்சி கொஞ்சி ஊட்டும் தாயின் முகம் எழுந்தது. இரவிலே வேதாகம நிகழ்ச்சிகளை கூறி, பாடலாகப் பாடி தன்னை உற்றுக் கவனிக்கும் நினைவு எழுந்தது. ஒரு முறை அம்மையாலும், பின் டை..பாய்டு ஜீரத்தாலும் பாதிக்கப்பட்டபோது, 'இரவு பகலாய்க் கண் விழித்து ஊன் மறந்து, உறக்கம் இழந்து வேளா வேலைக்கு மருந்து கொடுத்துக் கவனித்தாளே! ஜெபம், வேத வாசிப்பு அவசியம் என்பதை உணர்த்தி, பக்தி உள்ளவனாய் வளர்த்தாளே, அது திரைப்படமாய் அவன் விழித்திரையில் விரிந்தது, பள்ளிப் பாடங்களில் முதல் தரமாய் தோச்சி பெறவும், இலக்கிய மன்றங்களிலும், விழாக்களிலும் பங்கு பெற ஊக்குவித்து, அவனது திறைமைகளை வளர்க்க என்ன பாடடெல்லாம் பாடுவாள். தவறு செய்யும் போது கடிந்துரைத்ததும். பின் அவனுக்கு அவன் தவறினை உணர்த்தி நல்வழிப்படுத்துவாளே.... அந்த நினைவு எல்லாம் சுழன்று சுழன்று வந்தது.
“ராஜேஷ் உன்னை ஈன்றவள் யாரோ? உயிருடன் இருக்கிறார்களோ இல்லையோ. அதைத் தேடி அலைவதோ, ஏங்குவதோ வீண். கலைப் பொருளை உருவாக்கிய சிற்பியைப் போல நீ பக்தியிலும் பண்பிலும், அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்க உருவாக்கிய தாயைப் போற்று. நன்றியுள்ளவனாக இரு. கலைஞனுக்குத் திறமையளித்த கடவுளைப் புகழச் சொன்னாய். அதே போல் உன்னை இப்படிப்பட்ட அன்னையிடம் ஒப்படைத்த ஒப்பற்ற தேவனைப் புகழ்ந்து போற்று! நன்றி சொல்லு!” விஜய் மட மடவென்று பேசினான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். “ராஜேஷ் அந்தக் கலைஞனுக்கு கலைப்பொருளை செய்வதற்குப் பொருளும், புகழும் கிடைத்திருக்கும். ஆனால் உன்னை வளர்த்த அந்த உத்தமி எதிர்பார்ப்பதெல்லாம் “அம்மா, அம்மா” என்று நீ காட்டும் அன்புதாண்டா!.” விஜயின் குரல் நெகிழ்ந்து. அவன் விழிகளில் நீர் நிறைந்தது. மீண்டும் பேசத் தொடங்கினான். “கடவுள் தன் ஏக புதல்வனை நமக்களித்தது தாண்டா கிறிஸ்மஸ். யோசேப்பு இறைமகன் இயேசுவின் வளர்ப்பு தந்த தானே. ஆனாலும் எவ்வளவு கண்ணும் கருத்துமாகத் தன் பொறுப்பை நிறைவேற்றினார். இறைமைந்தன் இயேசுவும் தன் தந்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்தார். இவையெல்லாம் நீ அறியாததா, என்ன? உறவுகள் மலர்வது அன்பிலே தாண்டா. அதனால் தான் பவுல் அப்போஸ்தலர் அன்பிற்கு (1கொரி.13) தனி அதிகாரமே கொடுத்து உள்ளார். இயேசு பெருமானும் “உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு. ஆன்மாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கொள்வாயாக. இது முக்கியமானதும், முதன்மையானதுமான திருக்கட்டளை. இதை ஒத்திருக்கிற இரண்டாம் கட்டளை நீ உன்னிடம் அன்பு கொள்வது போல அடுத்தவரிடமும் அன்பு கொள்வாயாக என்று கூறியுள்ளார். நீதிச்சட்டமே இதில் அடங்கியுள்ளது. ராஜேஷ் “மகனே” மகனே” எனத் துடிக்கும் அந்த அன்னைக்கு அன்பைக் காட்டாமல் அவர்களை கொன்னுடாதடா” விஜயின் குரல் கெஞ்சியது.
“விஜய்” கத்தியவன் அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டான். “என் கண்களை திறந்து விட்டாயடா!” தேம்பினான் ராஜேஷ். அவன் விழிகளினின்று கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. விஜய் மனநிறைவோடு விடைபெற்றான். “அம்மா” குரல் கேட்டுத் திரும்பினாள் சாந்தா! என் அம்மா! நீங்கள் தான் அம்மா!” உணர்ச்சிக் கொந்தளிப்பில் வார்த்தைகள் வெளிவந்தன, அவள் மடியில் முகம் புதைத்தான்.
துன்பமேகம் கரைந்து கண்ணீர் மழையாக இருவர் விழிகளின்றும் கொட்டியது, “ராஜேஷ்! மகனே! அவள் விரல்கள் அவனது சுருண்ட கேசத்தைக் கோதியது. பெருமழைக்குப்பின் தோன்றும் நிர்மலமான வானமென இருவர் உள்ளங்களும் அமைதி அடைந்திருந்தன. “யாரும் எதுவும் சொல்லிவிட்டால்” என்ற பயம் அவளை விட்டு அறவே ஒழிய, நிறைவான மகிழ்வின் பரிசாகத் தன் மகனை ஏற்றாள் அந்த அன்னை!
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.