Swiggy என்பது ஒரு உணவு சேவை வழங்குநர். அந்த செயலியை நீங்கள் பயன்படுத்துவராக இருந்தால் அதிலிருந்து உங்களுக்கு தொடர்ந்து பல செய்திகள் கிடைக்கும். அதாவது பசியை தூண்டுவதாக அல்லது ஆபர் உள்ளது என செய்திகள் வருவதுண்டு. நாமும் அதில் ஈர்க்கப்பட்டு விடுவோம், இப்படியாக அவர்கள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.
ஆதாமும் ஏவாளும்:
அவர்கள் ஏசாவைப் போல மிகவும் பசியுடன் இருக்கவில்லை அல்லது இஸ்ரவேலரைப் போல ஒரே மாதிரியான உணவையும் உண்ணவில்லை. தேவனைப் போல் ஆவீர்கள் என்று சொன்னவுடன் அந்த வார்த்தை அவர்களால் தவிர்க்க முடியாததாக இருந்தது. உணவு உட்கொள்ள வேண்டும் அவ்வளவு தான், அதுவும் எவ்வித கடின உழைப்பும் இல்லாமல் உண்பது எளிதான வழி. உண்மைதான் பழம் பார்க்க நன்றாக இருந்திருக்கும்; ஒருவேளை நல்ல வாசனையாகவும் இருந்திருக்கலாம். அப்புறமென்ன முயற்சி செய்வதில் எந்தத் தீங்கும் இல்லையே. ஆனால் வருத்தம் என்னவெனில் அவர்கள் பொய்யானவனின் வாக்குறுதியை நம்பினர்; ஆனால் அன்பையும் சத்தியத்தையும் உருவாக்கிய தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்பதை தேர்ந்தெடுக்கவில்லை.
ஏசா:
அவனது பசி அல்லது உணவுக்கான ஏக்கம் அவனது பரம்பரை, குடும்ப ஆசீர்வாதம், உடன்படிக்கை ஆசீர்வாதம் மற்றும் தலைமைத்துவ அழைப்பு ஆகியவற்றை விட பெரிதாக இருந்தது. இந்த ஆசை அவனை மிகவும் முட்டாள் ஆக்கியது, வாழ்க்கையிலும் நித்தியத்திலும் பல ஆசீர்வாதங்களை விட ஒரு உணவு மதிப்புமிக்கதானது.
இஸ்ரவேல்:
மன்னா என்பது தேவதூதர்களின் உணவு (சங்கீதம் 78:25). எனினும், இஸ்ரவேலர் மன்னாவை சலிப்பூட்டும் உணவாகக் கண்டார்கள். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த நாட்களை நினைத்து அசைவ உணவுக்காக ஏங்கினர் (எண்ணாகமம்: 11:4).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறைந்தது இரண்டு முறை சாப்பிட மறுத்தார். தேவ வார்த்தை மற்றும் தேவ சித்தம் என்பது அழிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் உணவைக் காட்டிலும் மிக முக்கியமானது என இயேசு கிறிஸ்து போதித்தார்.
தேவ வார்த்தை:
நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு வனாந்தரத்தில் பசியுடன் இருந்தார். சாத்தான், கர்த்தரை சோதிக்க, ஒரு சுவாரஸ்யமான ஆலோசனையை கொடுத்தான். "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்" (மத்தேயு 4:4).
தேவ சித்தம்:
சமாரியப் பெண்ணுடனான ஆண்டவரின் உரையாடலுக்குப் பிறகு சீஷர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சாப்பிடும்படி வேண்டினார்கள். அதற்கு அவர் சீஷர்களிடம் நீங்கள் அறியாத ஒரு போஜனம் என்னிடம் உண்டு என்றார்; மேலும் அது என்னவென்றால் "நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்றார் (யோவான் 4:31-34).
சரியான பசி:
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6).
அவருடைய வார்த்தையை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் அவருடைய சித்தத்தைச் செய்வதிலும் நான் பசியாக இருக்கிறேனா அல்லது நிறைவுடன் (திருப்தியாக) இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara