ராஜாக்கள், மன்னர்கள், பேரரசர்கள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்ற பல நாடுகளின் தலைவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து விலகி காணப்படுகின்றனர் மற்றும் மக்களின் அவலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. பட்டினியால் வாடும் விவசாயிகளிடம் பரிவு காட்டாத பிரான்சின் பதினாறாம் லூயினுடைய ஆட்சிக் காலத்தின்போது, அவருடைய அரசி மாரி அன்டோநெட்; "அவர்களுக்கு சாப்பிட ரொட்டி இல்லையென்றால், அவர்கள் கேக் சாப்பிடட்டும்" என்றாள். தம் மக்களைப் போகவிடு என்று மோசே மூலம் தேவன் கட்டளையிட்டபோது; அவரது சத்தத்தைக் கேட்க பார்வோன் விரும்பவில்லை. நைல் நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றிய முதல் வாதைக்கு பார்வோன் எதை பற்றியும் சிந்தியாமல், கொஞ்சமும் கவலைப்படாமல் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் (யாத்திராகமம் 7:23).
எகிப்தின் உயிர்நாடி:
நைல் நதி 6600 கிமீ பாய்கிறது, இன்றும் 95 சதவீத எகிப்தியர்கள் நைலில் இருந்து சில கிலோமீட்டர்களுக்குள் வாழ்கின்றனர். குடிநீருக்கும், விவசாயத்துக்கும், போக்குவரத்துக்கும் இந்த நதி நீரை வழங்கியது. வருடாந்தர வெள்ளம் அந்த பகுதியை வளமானதாக மாற்றிய வண்டல் மண்ணை கொண்டு வந்தது.
முதல் வாதை:
நைல் நதி, மரத்திலான பாத்திரம் மற்றும் கற்களால் ஆன பாத்திரம் உட்பட இருந்த எல்லா நீர்நிலைகளையும் தேவன் அடித்தார், அது இரத்தமாக மாறியது. செந்நிறத்தில் நதியின் தோற்றமே பயங்கரமாக இருந்திருக்கும். மற்ற நதியைப் போலவே, நைல் நதியும் நீர்வாழ் உயிரினங்களால் நிறைந்திருந்தது. அனைத்து மீன்களும் ஆற்றில் செத்து மிதந்தது. அழுகிய மீன்களின் துர்நாற்றமும், மரணத்தின் வாசனையும் நாடு முழுவதும் பரவியது. குடிக்க முடியவில்லை: மக்கள் குடிக்க முடியாமல், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் தவித்தனர் (யாத்திராகமம் 7:17-21).
தேவ வல்லமை:
பார்வோன் தன்னை தெய்வீகமாகக் கருதியதால், தேவ வல்லமையை அங்கீகரிக்க மறுத்துவிட்டான். எகிப்தின் உயிர்நாடியை மாசுபடுத்திய தேவ வல்லமை, பார்வோனை சிந்திக்க வைக்கவில்லை.
கவலையற்ற நிலை:
அவன் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களுக்கு உணவாக இருந்த மீன்களின் இழப்பு, முடங்கிய போக்குவரத்து, குடிநீர் பற்றாக்குறை, ஆற்றில் இருந்து வரும் துர்நாற்றம் என எதுவுமே அவனை அசைக்கவில்லை; மக்கள் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தவில்லை, இழப்பைக் குறித்த உணர்வும் இல்லை.
தவறுக்காகச் சிறிதும் வருந்தாதவன்:
பார்வோன் தாழ்மையுடன் இல்லை, ஆனால் அகங்காரம் கொண்டவனாய் எதிர்த்தான். அவன் வானத்திற்கும் பூமிக்கும் தேவனானவருக்கு செவிகொடுக்க மறுத்துவிட்டான்.
தீர்ப்பு:
பார்வோன் தன் மீதும் தன் பேரரசு மீதும் தீர்ப்பை வருவித்துக் கொண்டான். பத்து வாதைகள் எகிப்தை அழித்து, இனி ஒரு வல்லரசாக இருக்க வாய்ப்பு இல்லாதபடி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.
நான் தேவ சத்தத்தை உணர்கிறேனா, மற்றவர்களுக்காக அக்கறை கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்