நீலகண்டன் என்பவர் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பிராமணர் மற்றும் தாயார் பிராமணர்களுக்கு அடுத்ததாகக் கருதப்படும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாய்வழி மரபின்படி, அவரது தாயின் சாதி அவரோடு இணைத்து அழைக்கப்பட்டது. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், ராணுவ வீரராக பயிற்சி பெற்றவர். பத்மநாபபுரம் நீலகந்தசுவாமி கோவிலில் அதிகாரியாக பணியாற்றினார். பின்பதாக, அவர் 27 வயதில் உதயகிரி கோட்டையில் மன்னருக்கு சேவை செய்ய சேர்ந்தார். அவருக்கு மேக்கோடு பார்கவி அம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது.
1741 இல் குளச்சல் துறைமுகத்தில் நடந்த போரின் போது மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் சிறைபிடிக்கப்பட்ட ஒரு டச்சு இராணுவ அதிகாரியான பெனடிக்டுஸ் தே டிலனாய்யை நீலகண்டன் சந்தித்தார். இருவரும் நல்ல நண்பர்களானார்கள். ஒருநாள் நீலகண்டன் மிகுந்த கவலையில் இருந்ததைக் கண்ட டிலனாய் அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு நீலகண்டன், தமது குடும்பத்துக்கு சொந்தமான கால் நடைகள் இறந்து போவதும், பயிர்கள் நாசம் அடைவதும் தொடர்கதையாகி பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்தார். அப்போது டிலனாய் பழைய ஏற்பாட்டில் உள்ள யோபின் கதையைப் பகிர்ந்து கொண்டார்; அது நீலகண்டனை வெகுவாக கவர்ந்தது. ஜெஸ்யூட்டு (ஏசுசங்கத்தார்) மிஷனரியான ஜியோவானி பாப்டிஸ்டா புட்டாரி இன்னும் மேற்கொண்டு அவருக்கு அறிவுறுத்தி 1745 மே 14 அன்று ஞானஸ்நானம் பெற்றார். நீலகண்டன் தேவசகாயம் ஆனார். உடனடியாக, அவர் தனது புதிய விசுவாசத்தை தனது மனைவி உட்பட மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் தனது சாதியின் அடையாளங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு மக்களாக கலந்தார்; ஒன்றாக இணைந்து சாப்பிட்டார், தேவன் அனைவரையும் சமமாகப் படைத்தார் என்ற சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
உயர் சாதி மக்கள் அவரை எதிர்த்தனர் மற்றும் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டினர்; அதாவது கடவுளை அவமதித்தல் (தெய்வத் துரோகம்); சாதி விதிகளை மீறுதல் (குல துரோகம்) மற்றும் அரச சிம்மாசனத்திற்கு துரோகம் (ராஜ துரோகம்). பிப்ரவரி 23, 1749 இல் அவர் ஒரு சிறையில்
அடைக்கப்பட்டார். அவர் பல வழிகளில் சித்திரவதை செய்யப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, எருமை மாட்டின் மீது அமர்த்தி உடல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டு. அவமானச் சின்னமாக எருக்கு மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பல கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 14-15 ஜனவரி 1752 இல், அவர் ஒரு இரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் மண்டியிட்டு ஜெபம் செய்யும்போது ஐந்து ஈய தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் காட்டு விலங்குகளிடம் வீசப்பட்டது. இருப்பினும், அப்பகுதி கத்தோலிக்க கிறித்தவர்கள், தேவசகாயம் பிள்ளையின் கிடைத்த உடல் பகுதிகளை எடுத்துச் சென்று நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் (தற்போதைய கதீட்ரலாக இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம்) ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர். அவர் சமூக சமத்துவத்திற்கான புனிதராகக் கருதப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபை அவரை 15 மே 2022 அன்று பரிசுத்தவானாக அறிவித்தது (இந்திய நடப்புகள், 16-22 மே 2022).
நான் கிறிஸ்துவுக்கு சத்திய/ உண்மையுள்ள சாட்சியா? (அப்போஸ்தலர் 1:8)
Author: Rev. Dr. J .N. மனோகரன்