தாவீதும் அவனுடைய ஆட்களும் சவுலிடம் இருந்து மறைந்திருந்த பகுதியில் ஒழுங்கையும் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும் அளித்தனர். அந்தக் காலகட்டத்தில் நாபால் தாவீதுக்கு கொடுக்க வேண்டிய ஒரு வகையான வரி என்று எடுத்துக் கொள்வோம், நாபால் அதைக் கொடுக்க மறுத்தான். இதை அறிந்த தாவீதுக்கு உண்மையாகவே கடுமையான கோபம் ஏற்பட்டது. நாபாலையும் அவனுடைய வீட்டாரையும் தண்டிக்கத் தயாராக இருந்தான். ஒரு வேலைக்காரன் புத்திசாலித்தனமாக நாபாலின் மனைவியான அபிகாயிலுக்கு தகவல் கொடுத்தான், அவள் அந்த நிலைமையைத் தணிக்க முன்முயற்சி எடுத்தாள் (1 சாமுவேல் 25).
செயலூக்கமான பெண்:
நீதிமொழிகளில் விவரிக்கப்பட்டுள்ள குணசாலியான பெண்ணைப் போலவே, அபிகாயிலும் உடனடியாக படைப்பாற்றலுடனும், தாராள மனப்பான்மையுடனும் மற்றும் ஞானத்துடனும் நெருக்கடிக்கு எதிர் வினையாற்றினாள்.
அபிகாயிலும் தாவீதும்:
அபிகாயில் தன் வேலையாட்கள் மற்றும் பரிசுகளுடன் மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக அணிவகுத்துச் சென்றாள். தாவீது மறைந்திருந்து குழுவைப் பார்க்கக்கூடும், ஆனால் அபிகாயிலால் முடியவில்லை. அவள் அருகில் வந்தபோது, பரிசுகளுடன் கூடிய ஒரு பெரிய ஊர்வலத்தையும் ஒரு அழகான பெண் அதை வழிநடத்துவதையும் பார்த்து தாவீது ஆச்சரியப்பட்டான்.
குற்றத்தை ஏற்றுக் கொள்ளல்:
அபிகாயில் தன் கணவனின் தவறு என்றாலும், தன் மீது பழி சுமத்தி உரையாடலைத் தொடங்கினாள்.
அனுமதி:
பிறகு தான் பேச அனுமதி கேட்டாள். அவளது காரணத்தை வெளிப்படுத்த இது ஒரு கண்ணியமான வழியாகும்.
சாதகமான பேச்சு:
கர்த்தர் தாவீதை தேவையற்ற இரத்தப் பலியிலிருந்து தடுத்துள்ளார் என்று அவள் புத்திசாலித்தனமாக எடுத்துரைத்தாள்.
தற்போதைய நிலை:
தான் கொண்டு வந்த உணவும் பரிசுகளும் தாவீதைப் பின்தொடர்ந்து வரும் இளைஞர்களுக்காக என்று அபிகாயில் கூறினார். அபிகாயில் அது அவருக்கு என்று குறிப்பிடவில்லை, அது அவரை பண ஆசை கொண்டவராகவோ அல்லது அவரது புண்படுத்தப்பட்ட கண்ணியமாகவோ, பணத்தைக் கொண்டு சமரசம் செய்வது போல் காட்டிவிடும்.
மன்னிப்பு:
அவள் தாவீதை மன்னிக்கும்படி கேட்டாள். இது ஒரு நேரடியான, பணிவான வேண்டுகோள்.
தாவீதைப் போற்றுதல்:
தாவீது நாபாலைத் தாக்குவது சரியல்ல என்றாலும், கர்த்தருடைய யுத்தங்களை செய்ய தேவன் அவனைத் தேர்ந்தெடுத்தார் என்றும், அவனுடைய நாட்களில் அவனில் தீமை காணப்படவில்லை என்றும் அபிகாயில் அவனுக்கு நினைவூட்டினாள்.
தீர்க்கதரிசன நுண்ணறிவு:
அபிகாயில் தாவீதிடம் தாவீதின் சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் கூறினாள், பிற்காலத்தில் அது நாத்தானால் உறுதிப்படுத்தப்பட்டது (2 சாமுவேல் 7:16).
அறிவுரை:
தாவீது பின்னர் நினைத்து வருத்தப்பட வேண்டிய ஒரு காரியத்தைச் செய்யாதபடி அபிகாயில் கனிவாக எச்சரித்தார். பழிவாங்குவது தேவனின் தனியுரிமை (மேதகு உரிமை) என்பதால், எதிரிகளைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி அவள் கேட்டாள்.
தாவீதைப் போல ஆலோசனைகளைப் பெறவும், அபிகாயிலைப் போல அறிவுரை கூறவும் நான் தயாராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்