ஏசாயா தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேல் தேசத்திற்கு தேவன் கட்டளையிட்டார், கண்டித்தார் அல்லது எச்சரித்தார் எனலாம். அது என்னவெனில்; “இனி வீண் காணிக்கைகளைக் கொண்டு வர வேண்டாம்" (ஏசாயா 1:13). இந்த கண்டிப்பு காணிக்கையைப் பற்றியதல்ல, காணிக்கை கொடுப்பவர்களின் மனப்பான்மையைப் பற்றியது.
முதலாவதாக, தியாகத்தைப் பற்றி:
காணிக்கையாக வழங்க முடியாத சில பொருள்கள் உள்ளன, மேலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. தேவன் மல்கியா மூலம் பேசியது என்னவெனில்; “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே. அதை உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ" என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார் (மல்கியா 1:8). அப்படி கர்த்தருக்காக பலியிடப்படும் விலங்குகள் எந்தவித கறைதிரை இல்லாமல் இருக்க வேண்டும், ஆம், நேர்த்தியானது மட்டுமே கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இரண்டாவதாக தியாகம் செய்யும் நபரைப் பற்றி:
கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு நல்ல பொருள் - அப்பொருள் மிக நேர்த்தியானதாக இருந்தாலும் அதையளிப்பவரின் நோக்கம் கர்த்தரின் பார்வையில் சரியாக இல்லாவிட்டால் பலியாக அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ‘வீண் காணிக்கையாக’ மாறக்கூடும். காணிக்கையின் மூலம் புகழோ, ஈர்ப்போ மற்றும் மனிதர்களிடம் இருந்து பாராட்டைப் பெறுமானால் அது வீணான காணிக்கையாக மாறி விடுகிறது. ‘நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத்தேயு 6:3) என்பதே தேவனின் அறிவுரை.
காயீனின் காணிக்கை நிராகரிக்கப்பட்டது, ஆபேலின் காணிக்கை சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது; அது ஏனெனில், காயீனின் ‘அவிசுவாசம்’ அவனின் காணிக்கையை வீணாக்கியது (எபிரேயர் 11: 4). அனனியா மற்றும் சப்பீராள் ஆகியோர் பெரிய நன்கொடையாளர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு புகழ் பெற விரும்பினர், ஆனால் தங்களுக்கென சிலவற்றை ஒளித்து வைத்துக் கொண்டதால் அது தேவனை ஏமாற்றுவதாக தான் கருதப்பட்டது, மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக இழந்தனர் (அப்போஸ்தலர் 5: 1-11)
‘வீண் காணிக்கை’ ஒருவேளை ஏற்றுக்கொள்ளக்கூடிய காணிக்கையாக மாற்றப்படலாம். அது எப்படியென்று தேவன் அழகாக நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். ஒரு நபர் பலிபீடத்திற்கு வந்து தன் காணிக்கையைச் செலுத்தும்போது அந்நபர் செய்த பாவங்கள் நினைவிற்கு வந்ததும் அப்பலிபீடத்தில் அப்படியே காணிக்கையை விட்டுவிட்டு (அதைத் திரும்ப எடுக்க முடியாது) தன் பாவங்களைச் சரிசெய்துக் கொண்டு திரும்ப பலிபீடம் வந்து அவனுடைய காணிக்கையை செலுத்தலாம் (மத்தேயு 5: 23,24). ஆகவே, மனந்திரும்புதல், நல்லிணக்கமாகுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை காணிக்கையைப் பரிசுத்தப்படுத்தக்கூடும், பலிபீடத்தை அல்ல.
புதிய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதே, நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர் 12:1).
என்னை நான் ஒரு 'தியாகப்பலியாக' ஒப்புக் கொடுத்துள்ளேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்