அழகிய அந்த பங்களாவின் தோட்டத்தில் அமர்ந்திருந்த டாக்ட தினகரனின் மனம் நிர்மலமான வானம் போலிருந்தது. அவர் ஒரு புகழ்பெற்ற மருத்துவர். ஓய்வு கிடைப்பதே அரிதாக இருப்பினும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிவரை தனது தோட்டத்தில் அமர்ந்து இயற்கையின் எழிலை அள்ளிப்பருக ஒரு போதும் தவறமாட்டார். அந்த வேளை அவர் மனம் இறைவனின் அற்புதப் படைப்புகளில் தன்னை மறப்பது மட்டுமல்லாது, இறைவனைப்பற்றி தியானிக்கும் இனிய நேரமாகவும் அமையும்.
“கீரிச்” கேட் திறக்கப்படும் ஓசையை அடுத்து ஒரு இளம் மங்கை உள்ளே வந்தாள். “நிமிர்ந்த நன்னடை! நேர் கொண்ட பார்வை” என்று பாரதி பாடினாரே, அதைப் போன்றதொரு தோற்றம். நேராக நடந்து வந்தவள்.
“டாக்டர் தினகரனைப் பார்க்க வேண்டும்” என்றாள் கம்பீரமான குரலில்
“டாக்டரைத் தேடி மருத்துமனைக்குப் போக வேண்டியது தானே! இங்கு வந்தால்...”
“நான் அவருடன் தனிமையில் பேச வேண்டும்!” நறுக்குத் தெறித்தாற்போலிருந்தது பேச்சு.
அப்படியா? நான் தான் தினகர் நீ யார் என்ன விஷயம்? அப்படி உட்கார்” எதிரிலிருந்த இருக்கையைச் சுட்டிக் காட்டினார். அவரை ஏற இறங்க ஆழமாகப் பார்த்தவள், இருக்கையில் அமர்ந்தாள்.
“என் பெயா் மலர்க்கொடி தாங்கள் அமெரிக்கா, ஜப்பான் என்று மேலை நாடூகளுக்கு எல்லாம் சென்று கற்று வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என அறிந்தேன். எனவேதான் தங்களைத் தேடி வந்துள்ளேன்!... “செந்தமிழ் அவள் நாவில் நடம் புரிந்தது.
“நான் ஆணாக மாறவேண்டும்” அறுவை சிகிச்சை செய்து என்னை ஆணாக மாற்றமுடியமா?” ஆத்திரமாக கேட்டவள், கண் இமைக்காமல் அவரையே பார்த்தாள். நெற்றிப்பொட்டில் அறைந்தார்போல் துணுக்குற்றார் தினகர். அவளை நிமிர்ந்து பார்த்தார். ஆண்மைக்குரிய கம்பீரம் அவளிடம் மிளிர்ந்தது.
“ஏன்? பெண்ணாகப் பூமியில் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று தானே பாவேந்தர் பாடியுள்ளார். அவள் இல்லையேல் அவனியே இல்லை என்றல்லவா கவிஞர் கூறிச் சென்றுள்ளார்” என்றவரை இடைமறித்தாள்.
“சார் அவை அனைத்தும் ஏட்டிலே தானே இருக்கிறது. பெண்ணாக பூமிதனில் பிறந்து விட்டால் பெரும் பிழை இருக்குதடி தங்கமே தங்கம். இது தான் சார் நாட்டிலும், வீட்டிலும் நடப்பது, ஒரு டிவி வாங்க வேண்டுமென வைத்துக் கொள்வோம். சிறந்ததைத் தோ்ந்தெடுக்கிறான். அதற்குரிய விலையைக் கொடுத்து அதை வாங்குகிறான். தனி கவனம் செலுத்தி அதைப் பாதுகாக்கிறான். ஆனால் அவனே ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, அனைத்திலும் சிறந்தவளாக, அழகு, படிப்பு, வேலை எனப் பலவகைத் தகுதிகளையும் உரியவளாகத் தேர்ந்தெடுக்கிறான். பணம் கொடுத்து வாங்கவில்லை. அவளே அள்ளிக்கொண்டு வந்து கொட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறான். தன் உடல், பொருள், இன்பம் அனைத்தையும் அவனுக்கே உரிமையாக்கி சந்தனமாய், ஊதுபத்தியாய், மெழுகுவர்த்தியாய் கரைந்து உருகும் பெண் இனத்திற்கு ஆண் இனம் தரும் மதிப்பைப் பார்த்தீர்களா?” உணர்ச்சிப் பிளம்பாய் நின்றாள்.
“வேதனையான விஷயந்தான்! தமிழலக்கிபங்களில் பார்ப்போமென்றால் வேங்கையை வேட்டையாடி, அதன் பல்லைத் திருமாங்கல்யமாகப் பெண்ணிற்கு அணிவித்து திருமணம் முடித்தான் அன்றைய தமிழ் மகன்! அவள் வளர்த்து வரும் முரட்டுக் காளையை அடக்கி மங்கையின் கழுத்திலே மாங்கல்யம் தரிப்பித்தான் அன்றைய காளை!”
“சார்! இன்று அவளுக்கு உணவு, உடை, இவற்றிற்காக அவள் வேலை பார்ப்பது மட்டும் போதாது என்று வரதட்சணை என்ற பெயரில் அவளிடம் பணத்தைக் கறந்து தன்னையே விற்று விடுகிறான். இன்றைய கோழை!” ஏளனச் சிரிப்பு அவள் இதழ்களில் மிளிர்ந்தது.
“மலர்! உன்னைப் பார்த்தால் வசதி படைததவர் மகள் போல் தோன்றுகிறது. உனது திருமணம் வரதட்சனையில் தடைபடுவதற்கு மார்க்கமில்லை என்று எண்ணுகிறேன். என் யூகம் சரிதானா?”
“நிச்சயமாக! எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் கொடுப்பதற்கேற்ற வசதி, சக்தி என் தந்தையிடம் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. என் சிந்தனையோ இந்த சமுதாயத்தில் சீரழியும் பெண் குலத்தை நோக்கிப் பாய்கிறது. வட இந்தியாவிலே கருவிலே வளரும் குழந்தை எதுவென கண்டு பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொலை செய்து விடுகிறார்கள். கிராமப் புறங்களிலே பச்சிளம் சிசுவின் வாயில் நெல்லைத் திணித்தும், கொதிக்கும் மீன் குழம்பை ஊற்றியும், பெற்ற தாயே குழந்தையைக் கொல்லும் கொடுமை. ஏன் இந்த இழிநிலை. “படிதாண்டா பத்தினிகள்” என இல்லத்தின் சிறையில் அந்தப்புரத்தில் அடைபட்டு வாழ்ந்த காலமே நீ வாழ்க என வாழ்த்திடும் அளவிற்கு மோசமாகிவிட்டது இன்று படிக்கின்றாள், பட்டம் பெறுகின்றாள், பதவி வகிக்கின்றாள். பெற்றோர் கொட்டிக் கொடுக்கும் பணத்தில் வாழ்வையும் அமைத்து அலுவலகத்திலும், வீட்டிலுமென உழைத்து மடிகின்றாள். சார்! இயந்திரத்திற்குகூட ஓய்வு உண்டு. இந்தப்பெண் ஜென்மங்களுக்கு அதுவும் இல்லை. கேவலம் ஒரு சைக்கிளைக் கூட பராமரித்து பழுது பார்க்கும் மனிதன், தன் மனைவியின் நலனில் அக்கறை காட்டுகிறானா?” ஆவேசமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.
“அனைவரையும் அப்படிக் கூறமுடியாது மலர்”
* 60 “சதவீதத்திற்கு மேல் அப்படிதான் இருக்கிறது டாக்டர்!”
“இதனால் நீ ஆணாக மாறிட முடிவு செய்துவிட்டாயா?”
“நான் ஆணாக மாறினால் சமுதாயச் சீர்கெட்டு நெருப்பில் மலராமலேயே கருகும் ஒரு மலருக்கு வாழ்வளிக்கலாம் அல்லவா?”
“ஒரு பெண்ணுக்கு வாழ்வளிப்பதற்காக ஆணாக மாற விரும்புகிறாயா? உன்னைப் பெண்ணாகப் படைத்த ஆண்டவன் தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறாயா? நீ ஆணாக மாறி ஒரு பெண்ணுக்கு வாழ்வளிப்பதைவிட பெண் சமுதாயத்தையே வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் உன்னைப் பெண்ணாகப் படைத்திருக்கிறார், இறைவன்!”
“நீங்க என்ன சொல்லுகிறீர்கள் டாக்டர்?”
“திருமறையில்... தெபோராள் பெண் தான். இஸ்வரலேன் நியாயாதிபதியாக வாழவில்லையா? பாரக்கோடு போர் முனைக்குச் செல்லவில்லையா? அவளால் இஸ்ரவேல் தேசம் 40ஆண்டுகள் அமைதியாயிருந்ததே! ஜான்ஸிராணி இலஷ்மிபாய், ராணி மங்கம்மாள். இந்திராகாந்தி எனப் பெண்குலத்திற்கு பெருமை சேர்த்தவர்களின் வரிசையில் நீயும் இடம் பெற வேண்டும். தேவன் உனக்குத் தந்த ஞானமும், தைரியமும் குடத்துக்குள் இட்ட விளக்காகத் திகழ அல்ல! குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திற்கே ஒளி தரத்தான்! அநேக இதழ்களுக்குக் கதை, கட்டுரை, கவிதை எழுது, உனக்கு அந்தத் , திறமை உண்டு என உன் பேச்சிலே எனக்குத் தெரிகிறது. மாதர் சங்கத்துடன் இணைந்து பெண் இன முன்னேற்றத்திற்குப் பாடுபடு. எடுத்துக்காட்டாக வாழந்து காட்டு! கண் இருந்தும் கபோதியாக வாழும் இச்சமுதாயத்தின் கண் உன் மூலமாகச் சிறிதாவது திறக்கட்டும்!”
டாக்டர் பேசப்பேச அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்! அவள் விழிகளில் கதிரவனை ஒத்த ஒளிக்கிரகணங்கள் பாய்ந்து வந்தன.
“தங்கள் ஆலோசனைக்கு நன்றி!” கரம் குவித்தாள் திரும்பி நடந்தாள். அதே நிமிர்ந்த நடை!
“காரிருளைக் கிழித்திட ஒரு கதிரவன் உதிக்கப் போகின்றான்!” டாக்டர் தினகரின் இதழ்கள் இசைத்தன.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.