மனிதனின் சரீரங்களை நோய் அல்லது தொற்று வந்து தாக்கும் போது விரைவாக அதாவது சரீரம் தானாகவே அல்லது சுயநினைவு இல்லாவிட்டாலும் அதற்கான எதிர்வினை அளிக்கும்படியே கர்த்தர் படைத்துள்ளார். சிறிதாக வெட்டுப்பட்டாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ நம்மால் அந்த வலியை உடனே உணர முடிகிறது. இதயம் அதிக இரத்தத்தை செலுத்துகிறது மற்றும் எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராட வெள்ளை அணுக்கள் தங்களை நிலைநிறுத்துகின்றன, உடல் உடனடியாக சேதமடைந்த செல்களை குணப்படுத்தும் அல்லது சரிசெய்யும் செயல்முறையைத் தொடங்குகிறது.
சரீரம் இப்படியாக இருப்பினும், மனித மனம் வித்தியாசமானது. சில எண்ணங்கள் மனதில் பிறக்கும் அல்லது பெறும் எண்ணங்களை மதிப்பீடு செய்யும் அதற்குப் பின்னர் அதற்கான பதிலை அளிக்க முற்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு கற்பித்தார்: "எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15: 19, 20). நோய்கள் சரீரத்தை ஆக்கிரமித்தவுடன் நம் உடல் உடனடியாக எதிர்வினையாற்றும் ஆனால் மனம் அத்தகைய பதிலை அளிக்காது.
மாறாக, இந்த தீய ஊடுருவல்களை அழிக்க நம்முடைய ‘சுய விருப்பத்தையும் முடிவெடுக்கும் திறனையும்' எதிர்க்கப் பயன்படுத்த வேண்டும். இதற்கு நான்கு படி முறைகள் உள்ளன. முதலில், சரியானது எது தவறானது எது என கண்டறிய வேண்டும். ஒருவேளை எண்ணங்கள் சாதாரணமாகவும், அநியாயமானவைகளாகவும், மோசமாகவும் இருக்கலாம். முதலில் தேவனை மதிக்காத எண்ணங்கள் நம்மிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இதில் வேதாகம புரிதல் ஆவிக்குரிய விவேகத்தை வழங்குகிறது. சத்தியத்தை அறிவது என்பது பொய்யை அடையாளம் காண உதவுகிறது.
இரண்டாவதாக, அத்தகைய எண்ணங்களை இரக்கமின்றி, உடனடியாக வெளியேற்ற முடிவு செய்ய வேண்டும்.வில்லியம் பார்க்லே என்பவர் வேதாகமத்தை வியாக்கியானம் செய்பவர், அவர் இப்படியாக சொல்வார்; "பறவை தலைக்கு மேல் பறப்பதை நம்மால் தடுக்க முடியாது ஆனால் அவைகள் நம் தலைமேல் கூடு கட்டுவதை தடுக்கலாம்". நமக்கு மோசமான எண்ணங்கள் வரக்கூடும், ஆனால் அதற்கு நம் மனதில் அரண்மனையைக் கட்டி தங்கியிருக்க இடமளிக்கலாமா கூடாதா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
மூன்றாவதாக, அந்த எண்ணங்கள் மீண்டும் மீண்டும் உருவாகாதபடிக்கு ‘மனதின்' ஆழத்திலிருந்தே நீக்க வேண்டும். இத்தகைய எண்ணங்கள் தவறானவை, கறை நிறைந்தவை மற்றும் ஆபத்தானவை. அவற்றை நம் உள்ளத்திற்குள் போடுவது அத்தகைய எண்ணங்களுக்கு குளிரூட்டுவது போலாகும்.
நான்காவதாக, சாத்தானை உங்கள் மனதில் காலடி எடுத்து வைக்காதவாறு தோற்கடிக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியது போல; இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை (யோவான் 14:30). அதேபோல், நாமும் சாத்தானை நம்மிடம் வர அனுமதிக்கக் கூடாது.
என் வாழ்க்கையில் சாத்தானிய ஊடுருவல்களுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுகிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்