யோனா ஒரு விசேஷ பணிக்காக தேவனால் அழைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. அவன் முதல் கலப்புப் பண்பாடுசார் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவமான பண்பாடுகளுக்கிடையேயான) மிஷனரி, ஒரு சிறப்பு பணிக்காக எல்லைகளைத் தாண்டிய தீர்க்கதரிசி, "யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மாதிரியாக கூறப்பட்டவன் (மத்தேயு 12:40). சுவாரஸ்யம் என்னவெனில், அவன் தேவனை நன்கு அறிந்திருந்தான், அவருடைய பண்புகள், அவரின் தேவைகள், பிரமாணங்கள் மற்றும் தேவ சத்தத்தைக் கேட்டவனாகவும் இருந்தான். யோப்பா துறைமுகத்திலிருந்து, நினிவேக்குச் செல்வதற்குப் பதிலாக, தர்ஷீசுக்கு செல்லும் ஒரு கப்பலைப் பிடித்தான்; தேவன் யோனாவை கடலில் வீசும்படிக்கு ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டு வந்தார், அவன் வெளியே எறியப்பட்டதும் அங்கு ஒரு மீன் அவனை விழுங்கியது. அவனுடைய ஜெபமும் அர்ப்பணிப்பும் அவனுக்கு நினிவேயை அடைய இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தது. தேவனின் நியாயத்தீர்பைப் பற்றிய அவனின் அக்கினி செய்தி நினிவே ஜனங்களிடம் மனந்திரும்புதலைக் கொண்டு வந்தது, தேவனும் நினிவேயை அழிக்கவில்லை. கோபமான யோனா தேவனிடம் இப்படியாக முறையிட்டான்; "கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்" (யோனா 4:2).
மற்றவர்களுக்கு அல்ல, எனக்கு மாத்திரமே கிருபை:
ஆம், தேவன் கிருபையுள்ளவர் என்பதை யோனா நன்கு அறிவான்; அவருடைய அபரிதமான கிருபையை யோனா அனுபவித்தான். ஆனால் அவனால் மற்றவர்களுடன் தேவ கிருபையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
மற்றவர்களுக்கு அல்ல, என்னிடம் மட்டுமே இரக்கம்:
ஆம், யோனா தேவனின் இரக்கத்தை நன்கு அறிந்திருந்தான். இருப்பினும், இரக்கம் என்பது இஸ்ரவேலின் உரிமை என்பது போலும் (தங்களுக்கு தான் சொந்தம்), தேவன் நினிவே மக்களுக்கு இரங்குவதை யோனாவால் ஏற்க முடியவில்லை.
மற்றவர்களுக்கு அல்ல, என்னிடம் மட்டுமே பொறுமை:
கர்த்தர் கோபப்படுவதில் தாமதம் கொண்டவர் என்று யோனா கூறினான், இருப்பினும் இஸ்ரவேலர் அல்லாதவர்கள் மீது தீர்ப்பை நிறைவேற்றுவதில் தேவன் வேகமாக இருக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான்.
மற்றவர்களுக்கு அல்ல, என்னிடம் மட்டுமே நிலையான உறுதியான அன்பு:
தேவ அன்பு உறுதியானது, வற்றாதது மற்றும் மாற்றமடையாதது. ஆனால் அப்படிப்பட்ட அன்பு யோனாவிற்கும் இஸ்ரவேல் தேசத்திற்கும் மாத்திரமே, மற்றவர்களுக்கு அல்ல.
மற்றவர்களுக்கு அல்ல, என்னை மாத்திரம் அழிவிலிருந்து மீட்டல்:
உண்மையாக மனந்திரும்பி, தேவன் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தி, தங்களைத் தாழ்த்தி பாவத்தை விட்டுவிடுபவர்களை மன்னிக்க தேவன் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை யோனா அறிந்திருந்தான். யோனா நினிவேக்கு மனந்திரும்புவதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் கொடுக்காமல், தேவன் உடனடியாக நினிவேயை அழிக்க வேண்டும் என நினைத்தான்.
இன்றும், பல சீஷர்கள் யோனாவைப் போல் சுயநலவாதிகள்; அவருடைய ஆசீர்வாதங்களுக்காக தேடுகிறார்கள், ஏங்குகிறார்கள், கொண்டாடுகிறார்கள் மற்றும் முன்னுரிமை அளிக்கிறார்கள்; ஆனால் மற்றவர்களுக்குப் பகிரவோ அல்லது அவரைப் பற்றி அறிவிக்கவோ விருப்பம் இருப்பதில்லை.
நான் சுயநலமான ஆவிக்குரிய நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்