ஓர் இரண்டாம் வாய்ப்பு

தேவ திட்டத்திலிருந்து விலகியோடிய தீர்க்கதரிசி யோனா, மீனின் வாயிலிருந்து வாந்தியாக வந்து விழுந்த கதை நமக்குத் தெரிந்த ஒன்றுதான். யோனாவின் நூல், அவனுடைய கீழ்ப்படியாமையை விவரிக்கும் நூலன்று, மாறாக, தேவ கிருபையைப் படம்பிடித்துக் காட்டும் நூலாகும். சுருங்கச் சொன்னால், இறுதிவரை மனந்திரும்பாத ஒரு மனிதனைக் கொண்டு ஒரு நகரத்தையே மனந்திரும்பச் செய்த தேவ கிருபையின் வரிவடிவம்.

வாந்தியாக வந்து விழுந்த

உண்மையற்ற ஓர் ஊழியனுக்கு உன்னதர் தந்த இன்னொரு வாய்ப்பு - இரண்டாம் வாய்ப்பு!

"இரண்டாம்தரம் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி.. " (யோனா 3: 1) 

1)  அதே பணி* *Same Mission*

"எழுந்து நினிவேக்குப் போ" (யோனா 3:2)

அந்த அருட்பணி

a) ரத்துசெய்ய முடியாதது. 

(Can't be withdrawn)

இவ்வுலகில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு எதிர்ப்புகள் எழும்பியதும் ரத்து செய்யப்படுவதுபோல

தேவனுடைய ஊழியம் என்பது திரும்பப் பெற்றுக் கொள்ளப்படக்கூடியதோ ரத்து செய்யப்படக் கூடியதோ அல்ல. அவர் நம்மைக்கொண்டு செய்ய திட்டமிட்டதை நம்மைக்கொண்டே நடத்திக் காட்டுவார்.  அதிலிருந்து விலகியோடுவதால் நமக்குத்தான் வேதனை!

b) நிறுத்திவைக்க முடியாதது

Can't be withheld

தேவனுடைய ஊழியம் நிறுத்திவைக்கப்படக்கூடியதும் அன்று. அது அதற்குரிய காலத்தில் மிகச் சரியாக நடந்தேறும். இவ்வுலகின் சில பணிகள் மனித குழப்பங்கள் அல்லது பொருளாதார பற்றாக்குறை போன்ற ஏதோ சில காரணங்களால் சில காலம் கிடப்பில் போடப்படலாம். ஆனால் தேவனுடைய ஊழியம் அப்படி இல்லை.

அவர் அனைத்தையும் அதனதன் காலத்தில் அழகாய்ச் செய்பவர். மனிதனுடைய பின்வாங்கல் தேவனுடைய முன்னெடுப்பைத் தடுத்துவிடாது!

c) கைவிடப்பட முடியாதது

Can't be waived

மனிதன் திட்டமிட்ட எத்தனையோ பணிகள் காலதாமதத்தினாலோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ தேவையற்றுப் போய் கைவிடப்படுவதுபோல தேவனுடைய ஊழியம் தேவையற்றுப் போவது கிடையாது. தேவையற்ற எதையும் அவர் திட்டமிடுவதுமில்லை, திட்டமிட்ட எதையும் விட்டுவிடுவதுமில்லை!

எந்த ஊழியத்தை யோனாவுக்குக் கொடுத்தாரோ அதே ஊழியம் (Same Mission) எவ்விதத் தடையுமின்றி நடந்தது.

யோனாவின் குளறுபடிகளால் அந்த ஊழியம் பாதிக்கப்படவில்லை, கொஞ்சம் காலதாமதமானதுபோல் நமக்குத் தோன்றுகிறது.  சர்வ வல்ல கர்த்தர் அதைச் சிறப்பாகக் கையாண்டார்

2)  அதே செய்தி THE SAME MESSAGE*

"... நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் " (யோனா 3: 4) (3: 4-7) 

என்பதே அந்தச் செய்தி!  அந்தச் செய்தியும் மாறவில்லை! யோனாவுக்கு கிடைத்த வாய்ப்புதான் இரண்டாம் முறையே தவிர அந்தச் செய்தி முதல்முறை கொடுக்கப்பட்ட அதே செய்திதான். அதில் மாற்றமேதுமில்லை. 

அச்செய்தி

a) தேவனால் பிறப்பிக்கப்பட்டது

(Pronounced by the LORD)

அவர் ஒருமுறை சொன்னதை மாற்றிக்கொள்கிறவர் அல்லர். அவருடைய வாக்கும் மாறாதது, வாக்குத்தத்தங்களும் மாறாதவை.

b) தீர்க்கதரிசியால் பிரசங்கிக்கப்பட்டது

 (Preached by the Prophet)

தேவ உச்சரிப்பில் பிறந்த அச் செய்தி, தீர்க்க தரிசியால் - _ஆம், பிரசங்கிக்க மறுத்த அதே தீர்க்க தரிசியால்!_ - பிரசங்கிக்கப்பட்டது.

c) அரசனால் பிரகடனப்படுத்தப்பட்டது

(Proclaimed by the King)

அது அரண்மனையில் எதிரொலித்து அரசனை எட்டியபோது அரசன் தானும் அதற்குக் கீழ்ப்படிந்ததுடன் அவன்தன் நாட்டு மக்களுக்கும் அதைப் பிரகடனப்படுத்தினான் (Proclaimed). அதன்பின் அது அரச ஆணையாக (G.O) மாறியது.

நாம் சுமக்கும் சுவிசேஷமும் இப்படிப்பட்டதுதான். அது அதிகார அரியணைகளையும் அசைக்கும் வல்லமைபெற்றது.

நம் பணி,  அதை உண்மையுடன் பிரசங்கிப்பதே!

3) அதே மனிதன் THE SAME MAN*

எந்த மனிதனைக் கொண்டு இதை அறிவிக்க திட்டமிட்டாரோ, அதே மனிதன். எந்த மனிதன் இதைச் செய்ய மறுத்து ஓடினானோ அதே மனிதன்! இது தேவ வல்லமைக்கு மட்டுமல்ல, தேவ இரக்கத்திற்கும் சான்றாகும்.

அந்த மனிதன்

a) விசுவாசமற்ற மனிதன் 

The Faithless Man

தேவ குணத்தை அறிந்தும் அதற்கு இசைய மறுத்து அவரிடம் உண்மையற்றவனாக நடந்துகொண்டவன். ஆனால், கர்த்தரோ உண்மையுள்ளவர்!

b) தோற்றுப்போன மனிதன்

The Failed Man

தேவ ஊழியத்தை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதிலும் தோற்றுவிட்டான்.

c) வீழ்ச்சியுற்ற மனிதன் The Fallen Man

தேவனுடைய ஊழியன் என்று அவன் தன்னைச் சொல்லிக்கொண்டாலும் அந்தத் தரநிலையிலிருந்து வீழ்ந்துவிட்டான். கர்த்தரோ அவனை மீண்டும் தூக்கி அதே நிலையில் நிறுத்தினார்.

மூன்று நாள் கழித்து மீனின் வாந்தியாக வந்து கரையில் விழுந்தான். அந்த வாந்தியிடம் கர்த்தர் பேசினார்.

முடிவுரை:

நாம் முன்னுரையிலேயே கண்டவாறு, யோனா நூல் யோனாவின் முழு வரலாற்றையோ, அவனது கீழ்ப்படியாமையையோ விளக்கிக் கூறும் நூலன்று. நம் தேவனுடைய மிகுந்த இரக்கத்தை அழகாகப் படம்பிடித்துக் கூறும் நூல். இதற்குப் பின்பும் யோனா எப்படி நடந்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். ஆயினும் தேவன் எப்படி நடந்துகொண்டார் என்பதே யோனா நூலின் செய்தி. 

நம்முடைய வீழ்ச்சியிலிருந்து நம்மை எழுப்பி மீண்டும் பயன்படுத்த விரும்புகிறார். அவன் உண்மையற்றவனாக இருந்திருக்கலாம். ஆனால் கர்த்தரோ உண்மையுள்ளவர். அதனால்தான்  அதே மனிதனைக் கொண்டு அதே செய்தியை உரைத்து அதே ஊழியத்தை நிறைவேற்றினார்.

இறுதிவரை மனந்திரும்பாத ஒருவனைக் கொண்டு ஒரு நகரத்தையே மனந்திரும்பச் செய்தார்.

ஒருவேளை நீங்களும் அந்த யோனாவைப்போல உணருகிறீர்களா, கர்த்தரிடம் திரும்பினால் உங்களுக்கும் கிடைக்கலாம் ஓர் இரண்டாம் வாய்ப்பு!

Author: Pon VA Kalaidasan



Topics: bible study Pon Va. Kalaidasan Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download