சில ஜெபங்கள் அர்த்தமற்றதாகவும், பலனற்றதாகவும் மற்றும் வீண் முயற்சியாகவும் தெரிகிறது. சிலருக்கு இது வெறுமனே ஒரு சடங்கு. மற்றவர்களுக்கு இது மனப்பாடமாக சொல்லக்கூடிய ‘புனிதமான சொற்றொடர்கள்’ அல்லது ஒரு ‘சூத்திரம்’ அல்லது ‘மந்திரம்’. ஆயினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெபம் எவ்வளவு மேன்மையானது என்று கற்பித்தார்; அது என்னவெனில் “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு, அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத்தேயு 6: 6).
1) உடல் ரீதியான பிரிவு:
தேவனுடைய பெரிதான கிருபையின் பிரசன்னத்தில் இருக்க நாம் உலகத்திலிருந்து பிரிக்கப்படுவதே ஜெபம். ஒரு பூட்டிய அறை என்றால் நம் காதுகள், நம் கவனம் மற்றும் நம் மனம் என அனைத்தும் (உடல் புலன்கள்) உலக நிகழ்வுக்கு மூடப்பட்டு, உணர்வுகளும் கவனமும் தேவனிடத்தில் இருக்கும்.
2) ஆவிக்குரிய நெருக்கம்:
ஜெபம் என்பது பிதாவாகிய தேவனுடனான உறவைக் கொண்டாடுவதாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் உயிருள்ள தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்கள். இந்த உறவு இல்லையென்றால் ஜெபங்கள் கேட்கப்படாததாகவும், பதிலளிக்கப்படாததாகவும், கவனிக்கப்படாததாகவும் போகலாம். இப்படி உலகில் பலர் இருக்கிறார்கள், அவரகள் ஜெபிப்பார்கள் ஆனால் அவர்களுக்கும் உண்மையான உயிருள்ள தேவனுக்கும் இடையே எந்த உறவும் இருக்காது. வருந்தத்தக்கது என்னவெனில், அவர்களின் ஜெபங்கள் எந்த பதிலையும் கொண்டு வராது. "உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்கீதம் 65:4).
3) ரகசிய உரையாடல்:
உலக சத்தத்திற்கு மூடும்போது பரலோக வாசல்கள் திறக்கின்றன. தேவன் இதுபோன்ற ஜெபங்களை காண்கிறார். இந்த ஜெபங்கள் ரகசியமாக நடைபெற வேண்டும், அதற்கான பார்வையாளராக தேவன் மாத்திரமே இருப்பார். எந்த மனிதனாலும் அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாமல் இருக்க வேண்டும். "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 6:5) என்பதாக இயேசு கூறியுள்ளார். இரகசிய அறைகளிலிருந்து ஏற்படும் உண்மையான இருதயத்தின் அழுகையை தேவன் கேட்கிறார்.
4) வெகுமதி அளிக்கக்கூடிய முயற்சி:
அத்தகைய ஜெபத்திற்கான பலன் வெளிப்படையானது. மதத் தலைவர்கள் மனிதர்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்து, அவர்களிடமிருந்து அதைப் பெறவும் செய்கிறார்கள். ஆவிக்குரிய மக்களும் தாழ்மையானவர்களும் விசுவாசத்தைப் பயன்படுத்தி வெகுமதிகளை நாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் மற்றும் வேண்டுகோளுக்கும் பதில் அளிக்கப்படும்.
ஜெபம் என்பது ஒரு வெகுமதி அளிக்கக்கூடியது, இனிமையானது, ரகசியமானது மற்றும் மகிமைக்கான முயற்சிக்கு ஏதுவானது.
இதுபோன்ற ஜெப நேரங்களை நான் தினமும் அனுபவிக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்