ஒரு கிறிஸ்தவ நண்பர் தன்னோடு இணைந்து பணி புரியும் நபரிடம் ஒரு வாசகத்தை கண்டார், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் அல்ல. வாசகத்தில் ஐசுவரியத்திற்கான ஜெபம் இருந்தது. அது என்னவென்றால்; "கர்த்தாவே, எங்கள் பரலோகத் தகப்பனே; நான் உம் பிள்ளை. எனக்கு நிறைவான ஐசுவரியத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்". குழப்பமடைந்த அவர், இந்த ஜெபத்தைப் பற்றி தனது நண்பரிடம் விசாரித்தார். அதற்கு அந்த நபர்; "ஒரு கிறிஸ்தவ வலைத்தளத்தில் இந்த ஜெபம் எனக்கு கிடைத்தது. நான் ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்துகிறேன், அது மட்டுமல்ல, இதை ஒரு நகல் எடுத்து என் வீட்டிலும் அலுவலகத்திலும் சுவற்றில் மாட்டி வைத்து உள்ளேன். இந்த ஜெபம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் விரைவில் நானும் பெரும் பணக்காரன் ஆகிவிடுவேன்"என்றார். பெரிய செல்வந்தராக வேண்டும் என்று ஆசைப்படும் இவருக்கு இந்த ஜெபம் மந்திரம் போன்றது. வருந்தத்தக்கது என்னவெனில், பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் அலையும் இவருக்கு கடவுளைப் பற்றியோ அல்லது நற்செய்தியைப் பற்றியோ அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ எந்த யோசனையும் இல்லை.
1) கடவுளை தெரியாது:
அந்த மனிதன் தனக்கு யாரென்று தெரியாதவரை தகப்பனே என்றழைத்து ஜெபிக்கிறார். மேலும் அவர் சொல்லும் வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று புரியாமலே வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார். கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை அல்லது தனக்கான தேவையைப் பற்றிய அறிவும் இல்லை, ஆனால் பணக்காரராக மட்டும் எதிர்பார்க்கிறார்.
2) எந்த உறவும் இல்லை:
அவர் கடவுளை தகப்பனே என்று அழைத்தாலும், அவருடன் அவருக்கு எந்த உறவும் இல்லை. தனது வாழ்க்கையில் ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாமல், பிதாவை தகப்பனே என்று அழைக்க அவருக்கு உரிமை இல்லை (யோவான் 1:12; ரோமர் 8:15).
3) ஏறெடுக்கும் ஜெபத்தின் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்:
அந்த மனிதனின் கவனம் சில வார்த்தைகளில் தான் இருந்தது, அதாவது ஐசுவரியத்தை அதிசயமாக கொண்டுவருவதற்கான சக்தியாக அல்லது மந்திரத்தின் வார்த்தைகளாக அந்த ஜெபத்தை நினைத்தார்.
4) செல்வத்தின் மீதான கவனம்:
மனிதனின் வாஞ்சை எல்லாம் செல்வம். அவர் கடவுளுடனான உறவுக்காகவோ அல்லது சத்தியத்தை அறியவோ அல்லது நீதியைத் தேடவோ விரும்பவில்லை. அவரைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் நோக்கம் பணக்காரராக வேண்டும், சுகவாசியாக அல்லது ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
இதுபோல தான், கள்ளப் போதகர்கள் தவறான ஜெபத்தை உருவாக்கி விடுகிறார்கள், அதை பலர் தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள் மற்றும் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வருத்தம் என்னவெனில், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் ஏராளமானோர் இந்த மனிதனைப் போலவே உள்ளனர். அவர்கள் தேவனிடம் ஏறெடுக்கும் அர்த்தமுள்ள ஜெபங்களை ஒரு சடங்காக அல்லது மந்திரமாக அல்லது கருவியாக தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக மாற்றியுள்ளனர்.
தேவனுடனான எனது உறவை நான் ஜெபத்தின் வாயிலாக உணர்வோடு கொண்டாடுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran