“முத்துச்சிற்பி”... வங்கக் கடலன்னையின் அலை கரங்கள் தொட்டு விளையாடும் சிற்றூர்.
மாலை மயங்கும் அந்த வேளையில் தமக்கே உரித்தான சுறுசுறுப்போடு திகழ்ந்தது முத்துச்சிற்பி. கடலன்னையின் மடியிலிருந்து செல்வங்களை அள்ளிக்கொண்டு கரையேறும் மீனவர்கள் அவர்களை வரவேற்கும் உறவினர்கள், வணிகர் என வழக்கம் போல் கடற்கரை கலகலத்தது.
ஆனால் இரு ஜோடி இளங்கண்கள் மட்டும் கடலை ஏக்கத்தோடு பார்த்து நின்றன. அவர்கள் 10வயது சிறுமி அம்முவும், அவள் இடுப்பில் அமர்ந்திருந்த ஒன்றரை வயது பாலாவும் தான்!
திடீரென வானம் இருண்டது. மின்னல்கள் வெட்டின. இடி இடித்தது. மழை பொழிய ஆரம்பித்தது. கூட்டம் கரைந்தது. அம்முவும் ஓடினாள், தன் குடிசையை நோக்கிக் கண்களில் கண்ணீர் வழிய,
குடிசையில் படுத்திருந்த முத்தரசன், “அம்மா வரலையா?” என்று வினவ, “இல்லை” என தலையசைத்த அம்முவின் முகம் பயத்தால் வெளுத்திருந்தது.
முத்தரசன் திடுக்கிட்டான். மெதுவாக நகர்ந்து குடிசையின் வாயிலை அடைந்தான். மழைநீர் குடிசைக்குள்ளும் அழையா விருந்தாளியாய் உட்புகுந்தது வெளியே ஓடிக் கொண்டிருந்த மனிதரைப் பார்த்துக் கேட்டான். “அண்ணே! மீனா வரலையா”?
திரும்பிப்பார்த்தவர். “எங்களோட வரலை. ஆழத்திலே போய் மீன் பிடிக்கப்போகிறேன் என்று போனாள். இன்னும் வரலையா முத்து?” கேட்டுவிட்டு ஓடிவிட்டார். முத்துவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. “ஐயோ! மீனா என்ன ஆனாள்?. ஒரு வேளை....” அதற்கு மேல் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வேதனையில் அவன் உள்ளம் துடித்தது!
முத்தரசன் சுகமில்லாமல் படுத்து ஒன்பது மாதங்கள் உருண்டோடி விட்டன. மீனாவும் தன்னிடம் உள்ளதை எல்லாம் விற்று மருத்துவம் பார்த்தாள். செல்வங்கள் சென்றன. சுகமோ கிடைக்கவில்லை. அண்டை அயலார் உதவியும் குறைந்தது. உப்பில்லாக் கஞ்சிக்கும் வழியில்லை. மீனா வலையையும், படகையும் எடுத்துக்கொண்டு கடலன்னையிடம் கையேந்திச் சென்றுவிட்டாள்.
குடிசைக்குள் விம்மல் வெடித்தது. முழங்காலில் நின்றிருந்தாள் சிறுமி அம்மு. “சாமி! இயேசப்பா! நீ கேட்டதெல்லாம் கொடுப்பன்னு அம்மா சொன்னாங்களே! எங்க அம்மாவை பத்திரமா கூட்டிக்கிட்டு வாப்பா” திரும்பத் திரும்ப அதே வாசகத்தையே சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மு.
முத்தரசனின் இதயத்தில் சம்மட்டி கொண்டு அடிப்பது போல் இருந்தது. அதுவரை அவன் வாழ்வில் ஒரு நாள் கூட கடவுளை வணங்கியது கிடையாது. முத்தரசன் நல்ல குணமுடையவன் தான். ஏழைக்கு உதவும் கருணை நெஞ்சன்! நல்லவனான அவன் நெஞ்சத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாது போனதற்குக் கரணம்.... கடவுளைக் காண்பதை விடுவித்து இறையடியார்களையே கண்டான் அதில் ஒரு சிலரின் வாழ்க்கை அவனுக்கு இடறலாக இருந்தது.
“மந்தைக்கு இடறலற்றவர்களாய் வாழ வேண்டும்” என்பதை மேய்ப்பர்களும், மேய்ப்பர்களும் மனிதா்கள் தான். தவற வழியுண்டு” என்பதை மந்தையும் மறந்து விடுகிறது. அதன் விளைவு நாத்திகத்தின் உதயம். ஆலயம் செல்ல, வேதம் வாசிக்க, ஜெபம் செய்ய அவனை மீனா அழைக்கும் போதெல்லாம் “நான் நல்வனாக வாழ்ந்தால் . போதும். உன்னை நான் தடுக்கவில்லை. அதே போல் என்னை நீ வற்புறுத்தாதே” என்று கூறிவிடுவான்.
மீனா அவனுக்காக அனுதினமும் தேவனை வேண்டி வந்தாள். இந்நிலையில் சுகவீனமானான் முத்தரசன். மருந்துகள் பலன் அளிக்கவில்லை. மீனா சுகம் வேண்டி ஜெபிக்கச் சொன்னால்...
“யாருக்கும் எந்தத் தீமையும் செய்யாத எனக்கு ஏன் இந்த வியாதி? கொள்ளையடிப்பவனும், கொலை செய்பவனும் கோமகனாக மகிழ்ந்திருக்கும் போது.... எனக்கு ஏன் இந்த துன்பம்?கடவுள் என்று ஒருத்தர் இருந்தால்.... இப்படி நடக்குமா? நீ தான் இரவும் பகலும் கண்ணீரோடு கேட்கிறாயே உனக்காகவாவது எனக்கு சுகம் தரக்கூடாதா?
நான் கும்பிட வேண்டும் என்று என்னை இப்படிக் கஷ்டப்படுத்துகிறார் என்றால் அப்படிப்பட்ட ஒரு கொடுமையான தெய்வத்தை நான் வணங்க மாட்டேன்” என்று வெறுப்போடு கூறுவான். பாவம் மீனா என்ன செய்வாள்? ஆனால் இன்று அவன் தவறு செய்துவிட்டது போல் மனசாட்சி அவனைக் கடித்து கொள்ளத் தொடங்கியது. “அவனை தன் உயிருக்கு மேலாக நேசிக்கிறாளே மீனா... அவளுக்காகவாவது”........
அவன் கண்கள் கண்ணீர் மழையைப் பொழிந்தன. முழங்கால்கள் மடங்கின! கரங்கள்
குவிந்தன! “என் தேவனே! என்னை மன்னியும்! ஆண்டவரே! என் மனைவியை எனக்கு கொடுங்கப்பா!! இதழ்கள் இசைந்தன.
நொறுங்குண்ட இதயமான அந்தப் பலியை ஆண்டவன் ஏற்றார். காணாமற் போன ஆட்டைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி பரலோகத்தில் வானுலகில் தூதர்கள் மகிழ்ந்து பாடிய கானத்தின் தொனி மண்ணுலகில் எதிரொலித்தது.
வானம் சிரித்தது! விண்மீன்கள் கண் சிமிட்டின. நிலவு உருண்டோடி வந்தது. இது என்ன அற்புதம்? ஆண்டவர் கரம் அசைத்தால் அற்புதம் நடைபெறாதா என்ன? சிறிது நேரத்தில் “அம்மு” என்ற குரலுடன் மீனா உள்ளே புகுந்தாள். “அம்மா” என்று ஓடி வந்த அம்மு அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“மீனா வந்துட்டாயா? இயேசப்பா... நீ உயிரோடு இருக்கப்பா! ஸ்தோத்திரம் அப்பா...ஸ்தோத்திரம்” உணர்ச்சிப் பெருக்கில் கூறிக் கொண்டே வேகமாக எழுந்து மீனாவை நோக்கி வந்தான் முத்தரசன்.
மீனாவின் விழிகள் வியப்பால் விரிந்தன. எழுந்து நிற்கவே தடூமாறும் தன் கணவர் எப்படி இவ்வளவு வேகமாக நடந்து வருகிறார்? அது மட்டுமா? “இயேசப்பா ஸ்தோத்திரம்” என்றல்லவா கூறுகிறார் என எண்ணியவள் “நீங்க என்ன சொன்னீங்க?” தன் காதுகளை நம்ப முடியாமல் கேட்டாள் மீனா.
“இயேசப்பா... ஸ்தோத்திரம்னேன்! மீனா ஆச்சரியமாக இருக்கா? இயேசு சாமி தான் உன்னைக் காப்பாற்றிக் கூட்டிக்கிட்டு வந்திருக்கிறார். நம்ம அம்முதான் என் கண்ணைத் திறந்து விட்டாள். எப்படி வந்த மீனா?” ஆவலோடு கேட்டான் முத்தரசன்
மேகம் கூடவும் “இசேப்பா காப்பாத்துன்னு” சொன்னேன். கொஞ்ச தூரத்திலே ஒரு மீன்பிடி கப்பல் வந்துகிட்டு இருந்தது. அதை நோக்கி நானும் படகை செலுத்தினேன். மழை பொழிய ஆரம்பிக்கவும் மீன் பிடி கப்பலை என் படகு நெருங்கவும் சரியாக இருந்தது.
என்னையும் தங்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டார்கள் அந்த நல்லவர்கள். அது மாத்திரமல்ல படகையும், நான் பிடித்த நிறைய மீன்களையும் காப்பாற்றி தாங்களே நல்ல விலைக்கு மீன்களை எடுத்துக்கொண்டார்கள். இதோ... தன் மடியில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் காட்டினாள். “முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” என்று இறைவன் இயம்பியது பொய்க்குமா? “என்னை, நம்ம ஊர் கரையோரமாக சிறிது தூரத்தில் கொண்டுவந்துவிட்டார்கள். நான் படகில் ஏறி வந்து விட்டேன்” மகிழ்ச்சி பொங்கக் கூறியவள்” ஆமா நீங்க எப்படி நடந்தீங்க?” ஆச்சரியத்தோடு கேட்டாள்.
அப்பொழுது தான் தன்னைக் கவனித்தான் முத்தரசன்! அவனுக்கும் ஆச்சரியமே! “ஆமா மீனா! நான் எப்படி நடந்தேன்? என் உடலில் பலவீனம் தெரியவில்லை. ஏதோ புது இரத்தம் ஓடுவது போல் தெரிகிறது. இந்த அற்புத தெய்வத்தை இவ்வளவு நாள் புறக்கணித்தேனே! என்னை மன்னியும் அப்பா” மீனா! நான் சீக்கிரம் சுகமாகிவிடுவேன். வேலைக்குப் போய் உன்னையும். குழந்தைகளையும் காப்பாத்துவேன்!! மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.
“நான் இயேசு அப்பாவை ௯ப்பிட்டேன்! சாமி என் ஜெபத்தைக் கேட்டார்” ஆனந்தமாகக் கூறினாள் அம்மு.
“ஆமாம்மா! உன் ஜெபத்தைக் கேட்டார்” என்று மகிழ்வோடு கூறினர் முத்தரசனும், மீனாவும். சிறுமி பாலவும் தனக்கும் புரிந்தது போல் கை தட்டிச் சிரித்தாள்.
மூவரும் முழங்காற் படியிட்டனர். இறைவனுக்கு நன்றிக் காணிக்கை படைக்க. ஆழ்கடல் சென்றவள் முத்தெடுத்துத் திரும்பியது போல் மகிழ்ந்தாள்.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.