ஒரு குடும்பத்தில் இரண்டு வயதுச் சிறுமி தன் வீட்டின் மேஜையில் இருந்த காலி கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு செல்கிறாள்; பொதுவாக அவள் பெற்றோர்கள் செய்வதைக் கவனித்திருக்கிறாள் போலும். அப்படி எடுத்துக் கொண்டு சென்ற போது, அந்தக் கோப்பை அவள் கையிலிருந்து நழுவி உடைகிறது; சிறுமி பதட்டமாகிறாள், ஆனால் அவளின் தாயோ, அந்தப் பெண்ணைத் தூக்கி முத்தமிடுகிறாள். அப்பெண்ணை அணைத்துக் கொண்டு “பரவாயில்லை மகளே, சில நேரங்களில் இந்த தவறு நடக்கும். ஆனால் காலியான கோப்பையை சமையலறையில் பாத்திரங்கள் சுத்தம் பண்ணும் இடத்தில் கொண்டு வைக்க நீ எடுத்த முயற்சியே பாராட்டுக்குரியது. அந்த வேலையை நீ நன்றாகச் செய்தாய் என்றாள். ஆம், அந்த தாயின் அன்பு குழந்தையின் குறையை அல்லது தவற்றை மறைக்கிறது. இதைதான் தேவனுடைய வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பேதுரு எழுதுகிறார், அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும் (1 பேதுரு 4:8-11).
மறைக்கப்பட்ட பாவங்கள்:
தாயின் அன்பு சிறுமியின் தவற்றை மறைத்தது போல் அன்பு பல பாவங்களை மறைக்கிறது. சிறிய குறைபாடுகள், சிறிய குற்றங்கள், சிறிய முட்டாள்தனம் மற்றும் சின்னச்சின்ன அலட்சியங்கள் ஆகியவற்றை கண்டும் காணாமல் பெரிதுபடுத்தாமல் இருக்கலாம். அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், தேவ ஜனங்கள் மற்றவர்களை தாராளமாகவும் இரக்கத்துடனும் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும்.
விருந்தோம்பல் காட்டுங்கள்:
நித்தியத்தின் வெளிச்சத்தில், விருந்தோம்பல் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பு, பகிர்வு, அக்கறை ஆகியவையே கிறிஸ்தவ ஐக்கியத்தின் சாராம்சம். முணுமுணுக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டும்.
கிருபையும் வரங்களும்:
தேவக்கிருபை விசுவாசிகளுக்கு கிடைத்த ஒரு வரம். தேவக் கிருபையின் உக்கிராணக்காரர்களாக அவர்கள் மட்டுமே இருக்க முடியும். தேவன் இயல்பிலேயே திறமைகள், தாலந்துகள், ஆவிக்குரிய வரங்கள், அறிவு, திறன்கள் மற்றும் வளங்களை கொடுத்துள்ளார். அவை அனைத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய வேண்டும்; அத்துடன் தேவைப்படும் இடங்களில் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.
தேவ வார்த்தைகளைப் பேசுதல்:
கிறிஸ்தவர்களின் பாக்கியம் என்னவென்றால், தேவ வார்த்தையை அறிந்துகொள்வது, இது தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கான புரிதலையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. எனவே, விசுவாசிகள் உலகில் தேவனின் பேச்சாளர்களாகவும், சக கிறிஸ்தவர்களுக்கு ஆலோசகர்களாகவும் மாறுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்களுக்கு வேதம் தெரியாது, எனவே உலகில் ஊமைகளைப் போல இருக்கிறார்கள்.
தேவன் அனுமதித்தபடி ஊழியம் செய்தல்:
தேவனின் ஆசீர்வாதங்கள் ஊழியத்திற்காகவே அன்றி சுயநலத்திற்காக அல்ல. ஒவ்வொரு கிறிஸ்தவனும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நம்முடைய வசதிகளை மற்றும் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, இருப்பதில் திருப்தியடைந்து, மற்றவர்களுக்கு எப்படி ஆசீர்வாதமாக இருக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். மேலும் நம்மை விட பொருளாதாரத்தில் குறைவுள்ளவர்களுக்கு உதவி செய்து அவர்களும் முன்னேற்றம் அடைய உதவ வேண்டும். இருப்பவர்களிடம் பொறாமை கொள்ளாமல், இல்லாதவர்களுக்கு கொடுக்க முன்வர வேண்டும்.
தேவனுடைய வீட்டில் நான் எப்படி நடந்துகொள்கிறேன்? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்