தேவனின் பணியைச் செய்யும் ஒருவர் இருக்கிறார், அவர் தாழ்மையானவர், எளிமையானவர், ஆனால் கர்த்தருடைய பணியில் சிரத்தையுடன் இருந்தார். “நான் ஆண்டவர் பணி செய்கிறேன்; அவர் எனக்கு ஊதியம் கொடுக்க வேண்டும்" என்பதாக அவர் எப்போதும் கூறுவார். தேவன் அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார், ஆனால் பல அமைப்புகளும் தலைவர்களும் அவரின் உழைப்பை சுரண்டினர்; அது மட்டுமல்லாது ஏமாற்றவும் செய்தனர். இப்படியாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவரின் வருமானம் வெறுமனே கைக்கும் வாய்க்குமே இருந்தது. இந்த சூழலில் ஒரு அமைப்பு ஊழியப்பணி செய்ய அவரை அழைத்தது, அவரிடம் நீங்கள் சம்பளமாக என்ன பெற விரும்புகிறீர்கள் என்றும் கேட்டது. அவரது பதிலோ வெறும் மௌனம் மாத்திரமே. ஆனால் அவர்கள் இவருக்கு நிர்ணயித்த சம்பளம் அவரின் எதிர்பார்ப்புக்கும் அல்லது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அவருடைய விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் அற்புதமாகப் பதிலளிக்கப்பட்டன. இருபது வருஷ நிலுவைத் தொகையை செலுத்துவது போல் இருந்தது. ஆம், தேவன் நம் ஜெபங்களுக்கு பிரசித்தமான விதத்தில் பதில்களைக் கொடுக்க முடியும். தேவன் மனிதர்கள் சொல்வதைக் கேட்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியமான உண்மையல்லவா.
1) கூக்குரல்:
இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்து முதலாளிகளின் கொடுங்கோன்மையால் புலம்பினார்கள், கதறினார்கள். அது ஒரு கசப்பான அடிமைத்தனம்; தேவன் இஸ்ரவேலரின் கூக்குரலைக் கேட்டார் (யாத்திராகமம் 2:24).
2) பெருமூச்சு:
மக்கள் துயரத்தில் இருக்கும்போது ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிட்டு தங்கள் வேதனையை அல்லது தவிப்பை வெளிப்படுத்துகிறார்கள் (சங்கீதம் 38:9). கர்த்தர் இத்தகைய வேதனையை அல்லது ஏக்கங்களைக் கேட்கிறார்.
3) உள்ளக்குமுறல்:
நாம் ஒரு ஜெபத்தை உச்சரிப்பதற்கு அல்லது சொல்வதற்கு முன்பே, கர்த்தர் அறிவார் என்று சங்கீதக்காரன் கூறுகிறான். "என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" (சங்கீதம் 139:4). இவை வெறும் எண்ணங்கள் அல்ல, ஆனால் வார்த்தைகளாக செயலாக்கப்படும் எண்ணங்கள். உள்ளத்தின் குமுறலில் இருந்து கூட தேவனால் உணர்ந்து அதை செயல்படுத்த முடியும்.
4) அழுகை:
ஆன்மாவின் கசப்பினால் மக்கள் அழலாம். இத்தகைய உடைந்த இதயத்தின் அழுகைகளை அல்லது வருத்தத்தை தேவன் கவனிக்கிறார் (யாத்திராகமம் 3:7).
5) வார்த்தைகள்:
தேவன் நம் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறார். அவர் நம் வார்த்தைகளில் (ஜெபங்களில்) சரியான சொற்களஞ்சியம், இலக்கணம் அல்லது அலங்காரமான சொற்றொடர்களைத் தேடுவதில்லை, ஆனால் நேர்மையான ஜெபங்களில் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறார் (எபேசியர் 3:20).
6) எண்ணங்கள்:
நாம் நினைப்பதை விட அற்புதமான விதத்தில் தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்று பவுல் எழுதுகிறார். மனித புத்திசாலித்தனத்தால் தேவன் ஜெபத்திற்கு அளிக்கும் பதிலின் ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது.
7) கற்பனை:
பலர் தங்கள் பதில்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கற்பனை செய்து பார்க்க முடியும். இருப்பினும், தேவன் அத்தகைய எதிர்பார்ப்புகளைக் கூட மீறுகிறார். மகத்தான மாட்சிமையான தேவன் நம் ஜெபங்களுக்கு உணர்திறன் உடையவர் மற்றும் கிருபையுடன் பதிலளிக்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய ராஜாவுக்கு நான் எவ்வளவு மதிப்புமிக்கவன்? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்