கூகுள் சமூக ஊடக தளங்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாரி பேஜ் இவ்வாறாக கூறினார்: “நீங்கள் இதுவரை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது அனுபவித்த அனைத்தும் தேடக்கூடியதாக மாறும். உங்கள் முழு வாழ்க்கையும் தேடக்கூடியதாக இருக்கும்”. டிஜிட்டல் சகாப்தத்தில், ஏராளமான தரவுகள் உருவாக்கப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன, மேலும் நல்ல மற்றும் தீய நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. கேமராக்கள் மலிவானவை, பாதுகாப்பு பெட்டகம் (storage) மலிவானது, மேலும் மக்கள் மலிவாகவும் தானாக முன்வந்தும் தகவல்களை வெளியிடுகிறார்கள். மனிதர்கள் ஒருவரைப் பற்றிய எல்லாத் தகவலையும் மீட்டெடுக்க முடியும் என்றால், எவ்வளவு எளிதாக தேவனால் செய்ய முடியும்?
மறைக்க முடியாது:
ஒரு நபர் மறைக்கக்கூடிய ஒரு ரகசிய அறை இருக்கிறதா? இல்லையே. சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம். ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும். ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!” என்று கர்த்தர் இவற்றைச் சொன்னார் (எரேமியா 23:24). தாவீது எழுதுவது போல் தேவனை விட்டு ஓடுவது சாத்தியமில்லை. தாவீது மாத்திரமல்ல, யாராலும் அவருடைய ஆவி, அவருடைய பிரசன்னத்திலிருந்து எங்கு செல்ல முடியும்? அது பரலோகமோ அல்லது பாதாளமோ அல்லது ஆழ்கடலோ, தேவ பிரசன்னம் அங்கேயும் இருக்கிறது (சங்கீதம் 139:7-9). துன்மார்க்கர்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து “எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள் (வெளிப்படுத்துதல் 6:16; லூக்கா 23:30) என்பார்கள். ஆனால் இது சாத்தியமா?!
இருள்:
கடவுள் ஒளியாக இருப்பதால் ஆழமான, மறைவான, இருளில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்துகிறார் (தானியேல் 2:22). இரவு நேரக் கண்ணாடிகளைப் பயன்படுத்தும் ராணுவ வீரர்களைக் காட்டிலும் கடவுளால் இருளில் பார்க்க முடியும்.
கண்ணுக்கு தெரியாத விஷயங்கள்:
மனிதர்களைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது அல்லது எந்த வடிவமும் இல்லை. எண்ணங்கள் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள், ஆனால் கடவுள் மனித எண்ணங்களையும் இதயத்தின் நோக்கங்களையும் எடைபோடுகிறார் (நீதிமொழிகள் 21:2-3).
கடவுளின் கண்கள்:
கர்த்தருடைய கண்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன, அவர்களுடைய வழிகளையெல்லாம் ஆராய்ந்து பாருங்கள், அவைகள் அவருக்கு மறைந்திருக்கவில்லை, அவருடைய கண்களிலிருந்து எந்தப் பாவத்தையும் மறைக்கவோ, ஒளிக்கவோ, மூடவோ முடியாது (நீதிமொழிகள் 15:3; எரேமியா 16:17).
வலுவான ஆதரவு:
கடவுளுடைய கண்கள், மௌனமாகப் பார்த்துப் பதிவு செய்யும் சிசிடிவி கேமராக்களைப் போல இல்லை. தேவன் ஒரு நோக்கம், அர்த்தம் மற்றும் செயலுடன் பார்க்கிறார். குற்றமற்றவர்களுக்கு அவர் வெகுமதி அளித்து ஆதரிக்கிறார் (2 நாளாகமம் 16:9). அவர் குற்றவாளிகளை நியாயந்தீர்க்கிறார்.
கணக்கு கொடுக்க வேண்டும்:
எல்லா மனிதர்களும் தங்கள் வார்த்தைகள், எண்ணங்கள், நோக்கங்கள், அணுகுமுறைகள், உறவுகள், நடத்தை, செயல்கள் என எல்லாவற்றிற்கும் கணக்கு கொடுக்க வேண்டும். தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும் (எபிரெயர் 4:13). எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டது, தேடக்கூடியவை, திரும்பப் பெறக்கூடியவை , ஆகையால் யாரும் எதையும் மறுக்க முடியாது, சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியாது.
என் வாழ்க்கைக்குள் நுழைந்து, அதனைத் தூய்மைப்படுத்த தேவனை நான் அனுமதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்