ஒரு குடும்பத்தில் ஒரு மகன் பிறந்தான். அப்போது நாட்டில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களால் தந்தை தொழிலை இழந்தார். பிறந்த மகன் தான் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக கூறி தந்தை மிகவும் கோபமடைந்தார். பிறந்ததிலிருந்தே, அந்த மகன் நேசிக்கப்படாமல், கவனிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டான். அவனது மூத்த சகோதரர்கள் நல்ல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர், ஆனால் இந்த பையனுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாகுபாடு நிலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒருநாள் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டான். வேதாகமத்தில் ஒரு சம்பவத்தைக் காண்கிறோம்; சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதாவது சவுலின் கீழ்ப்படியாமை மற்றும் கலகத்திற்காக ராஜாவாக இருந்த அவனை தேவன் நிராகரித்தார். இப்போது, அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் முடிவு செய்தார். ஈசாயின் வீட்டை அடைந்ததும், அவர் தன் ஏழு மகன்களையும் அழைத்து சாமுவேலிடம் காண்பித்தார். ஆனால் தேவன் அவர்களில் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. பிறகு சாமுவேல்; இவர்கள் மாத்திரம் தான் உனக்குப் பிள்ளைகளா? எனக் கேட்டார். அப்போது ஈசாய், தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை நினைவு கூர்ந்தார் (1 சாமுவேல் 16:6-13). பின்பு தாவீதை அபிஷேகம் செய்யும்படி சாமுவேலுக்கு தேவன் கட்டளையிட்டார்.
பெற்றோர்களால் மறக்கப்படுதல்:
சாமுவேல் ஈசாயின் வீட்டிற்கு வந்து அவருடைய குடும்பத்தாரை தேவனுக்கு பலி செலுத்த அழைத்தார். புகழ்பெற்ற தீர்க்கதரிசி அவர்களின் வீட்டிற்குச் சென்றது ஒரு முக்கியமான நிகழ்வு. உற்சாகமாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் பலி செலுத்த தயாராகினர். மூத்த ஏழு பிள்ளைகளையும் அவர்கள் பலி செலுத்தும் குறிப்பிடத்தக்க நிகழ்விற்கு தயார் செய்தனர். ஒரு கணம் கூட, அவர்கள் தாவீதைப் பற்றி சிந்திக்கவில்லை, சாமுவேலை பலி செலுத்த அழைத்தனர். மற்றொரு மகனைப் பற்றி ஈசாய் குறிப்பிடவில்லை.
சகோதரர்களால் மறக்கப்படுதல்:
ஏழு சகோதரர்களும் தங்கள் இளைய சகோதரர் தாவீது தங்களோடு இல்லையே என்று நினைக்கவில்லை. தாவீதை அழைக்க வேலையாட்களை அனுப்பும்படி அவர்கள் தங்கள் தகப்பனாரை நினைவூட்டியிருக்கலாமே.
தேவனால் நினைவுகூரப்படல்:
ஒருவேளை, தாவீது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பயனற்றவராக அல்லது பலி செலுத்தும் இடத்தில் ஒரு பகுதியாக இருக்க மிகவும் சிறியவராக கருதப்பட்டிருக்கலாம். அங்கிருந்த ஏழு மகன்களும் நிராகரிக்கப்பட்டதால் சாமுவேல் சோர்வடைந்தார். பிறகு சாமுவேல் ஈசாயிடம் இன்னும் பிள்ளைகள் உண்டா என கேள்வி எழுப்பினார்; சாமுவேல் மூலம் தேவன் நினைவுபடுத்திய பிறகுதான், தாவீதை ஈசாய் நினைவு கூர்ந்தார்.
தேவனால் அபிஷேகம் செய்யப்படல்:
மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட தாவீதை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார், மேலும் மேசியா அவருடைய சந்ததியாக இருப்பார் என்றும் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுவார் என்றும் அவருடன் உடன்படிக்கை செய்தார்.
தேவன் என்னை நினைவு கூர்ந்து ஆசீர்வதித்துள்ளாரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்