அறிக்கையிடுதல் (ஒப்புக் கொள்ளுதல்) பற்றி நிறைய போதனைகள் மக்களைக் குழப்புகின்றன. ஒரு சாரார், எப்போதும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளவும், புதைக்கப்பட்ட பாவங்களை நினைவுபடுத்தவும், அறிக்கையிடவும் கற்பிக்கப்படுகிறார்கள். மறுசாரார், அனைவரும் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருப்பதால் பாவங்களை ஒப்புக் கொள்வதை விடுத்து உங்கள் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள்... போன்றவற்றை அறிக்கையிடுங்கள் என்கிறார்கள்
1) பாவங்களை அறிக்கையிடுதல்:
பாவிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் குற்ற உணர்வு அடைகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, மன்னிப்பைப் பெற தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, நீதிமான்களாகவும் தேவ பிள்ளைகளாகவும் ஆக வேண்டும் என யோவான் வலியுறுத்துகிறார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9). நாம் விழுந்துபோன உலகில் வாழும்போது, தவறு செய்ய தூண்டும் சோதனைகள் உள்ளன. குறிப்பாக நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதன் மூலம் நாம் அனைவரும் பாவம் செய்யலாம். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16).
2) விசுவாசத்தை அறிக்கையிடுதல்:
விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட அல்லது வெளிப்படுத்த சபைகளில் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் மற்றும் நைசீன் விசுவாசப்பிரமாணம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விசுவாசி தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய வேதத்தின் சரியான கோட்பாடுகளை இது முக்கியமாகக் குறிக்கிறது. இது விசுவாசிகள் கள்ளப் போதகர்களிடமிருந்தும் கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்தும் தப்பிக்க உதவுகிறது.
3) கனவுகளின் அறிக்கையா:
ஆசைகள், கனவுகள் மற்றும் கோரிக்கைகள் என அறிக்கைகளுக்கு ஒரு புதிய போக்கு வந்துள்ளது. அதாவது விசுவாசிகள் இதுபோன்ற ஒன்றை அறிக்கையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்; "நான் தேவனின் பிள்ளை. எந்த நோயும் என்னை நெருங்க முடியாது. கோடிக்கணக்கில் புதிய வீடு வாங்குவேன். எனக்கென்று சொந்த ஜெட் விமானம் இருக்கும். என் பிள்ளைகள் நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருப்பார்கள்...” புதுமை தேடுபவர்கள் இப்படி அறிக்கையிட விசித்திர போதகர்களால் கற்பிக்கப்படுகிறார்கள். அறிக்கையிடுதலுக்கு வல்லமை இருப்பதாகவும், அவர்கள் அதைப் பெறுவார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது ஆபத்தானது. தேவன் இறையாண்மை கொண்டவர் அல்லது அவருடைய சித்தம் என்பதை அறியாமல் மக்கள் விரும்பும்போது, அவர்கள் முட்டாள்தனமான விஷயங்களை விரும்பலாம். இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் தங்கள் அறிக்கையைத் தேவனை விட சக்திவாய்ந்ததாக நினைக்கிறார்கள். தேவனின் நோக்கத்தை அறியாத போது விருப்பங்கள் சுயநலமாகவும், தன்னல சேவையாகவும், உலகப்பிரகாரமாகவும், மாம்சமாகவும் இருக்கலாம்.
தேவ மகிமைக்காக நான் என் பாவங்களையும் விசுவாசத்தையும் அறிக்கையிடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்