தாவீது எல்லா பக்கங்களிலும் விரட்டப்பட்டார். அவருக்கு செல்ல இடம் இல்லை. சவுல் அவரைக் கொல்லக் காத்திருந்ததால் அவரால் தன் சொந்த வீட்டுக்குப் போக முடியவில்லை. சவுலின் மகன் யோனத்தானிடம் செல்வதும் ஆபத்தானது. சாமுவேலிடம் செல்வது அவருக்கும் சாமுவேலுக்கும் சேர்த்தே பாதிப்பை ஏற்படுத்தும். தாவீது எங்கு தஞ்சம் அடைவது என்று தெரியவில்லை, தாவீதும் அவரது ஆட்களும் அதுல்லாம் கெபிக்குச் சென்றனர் (1 சாமுவேல் 22:1). இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அதுல்லாம் என்ற வார்த்தைக்கு அடைக்கலம் என்று பொருள். இருப்பினும், தாவீது நிஜமாக அடைக்கலம் புக வேண்டிய இடம் எங்கே என தேவன் அங்கிருந்த போது கற்பித்தார், ஆம், ஒரு கோட்டைக்குள்ளோ அல்லது குகைக்குள்ளோ அல்ல. அதுல்லாம் கெபியில் இருக்கும் போது, தாவீது குறைந்தது இரண்டு சங்கீதங்களை எழுதினார்; அது 57 மற்றும் 142.
தாழ்மையான இருதயம்:
தாவீது தாழ்மையுடன் தேவனின் இரக்கத்திற்காக மன்றாடினார் (சங்கீதம் 57:1). தாவீது தேவனிடம் நெருங்கி வந்தார், முழுவதுமாக தன்னை அர்ப்பணித்தார். தேவன் தன் இரக்கத்தை அவர் வாழ்வில் காட்டினார்.
கூக்குரலும் வருந்திய இருதயம்:
தாவீது தனக்காக எல்லாவற்றையும் செய்யும்போது அல்லது முடிக்கும்போது தேவனிடம் கூக்குரலிடுவேன் அல்லது ஜெபிப்பேன் என்று கூறுகிறார் (சங்கீதம் 57:2). ஜெபம் என்பது மனந்திரும்புவதற்கும், அவருடைய சமூகத்தில் நம் இருதயத்தை ஊற்றுவதற்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும். அன்னாள் செய்தது போல், தாவீது தன் இருதயத்தை ஊற்றினார்.
பயந்த இருதயம்:
தாவீது தனது சூழல் அல்லது உண்மைகளைப் பற்றி தேவனிடம் வேண்டுகோள் விடுத்தார். சிங்கங்களைப் போன்ற எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். அவரைப் பிடிக்க பொறி அல்லது வலையைத் தயார் செய்துள்ளனர் (சங்கீதம் 57:4-6). தாவீது தனது எதிரிகளின் பல சதிகளால் பயந்தார், ஆனால் தன் பயத்தை நேர்மையாக தேவனிடம் வெளிப்படுத்தினார்.
ஆராதிக்கும் இருதயம்:
தாவீது தனது நம்பிக்கையையும் நன்றியையும் துதிகளாக வெளிப்படுத்தினார். எல்லா தேசங்களும் தன்னுடைய தேவன் யார் என அறிந்துகொள்ளும் வகையில் பகிரங்கமாகப் புகழ்வேன், கீர்த்தனம் பண்ணுவேன் என்று கூறினார் (சங்கீதம் 57:5,9,11). யோபுவைப் போலவே, தாவீதும் தனது விரோதமான மற்றும் பாதகமான சூழலுக்கு மத்தியிலும் தேவனை துதித்தார். “தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக” என ஆனந்தமாய் தேவனை உயர்த்தி துதித்துப் பாடினார்.
மாற்றம் பெற்ற இருதயம்:
தாவீது அதுல்லாம் குகையில் பெரும் மாற்றத்திற்கு உள்ளானார், பின்னர் தேவன் அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தார். தாவீதைப் போலவே, ஒரு சீஷனின் இருதயம் மாற்றப்பட வேண்டும், தேசங்களுக்கு சாட்சியாகவும் ஆசீர்வாதமாகவும் மாற வேண்டும். தேவனோடு போராடி விட்டு இஸ்ரவேலாக வெளியே வந்த யாக்கோபைப் போல; தாவீதும் குகையை விட்டு வெளியே வந்தபோது ஒரு மாறுப்பட்ட மனிதராக இருந்தார்.
நானும் இதுபோன்ற இக்கட்டான காலங்களில் அடைக்கலம் தேடி எங்கே போக வேண்டும் என்பதைக் கற்பேனா?
ஆம், நான் உபத்திரவப்பட்டது நல்லது, உம்முடைய பிரமாணங்களைக் கற்றுக் கொண்டேன்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்