ஒரு நடிகரின் ரசிகரான, சென்னையைச் சார்ந்த பரத் என்ற 19 வயது இளைஞன், தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவருவதைக் குறித்து உற்சாகமாக இருந்தான். தனது நண்பருடன் சேர்ந்து, அவன் படம் பார்த்தான், தெருவில் நண்பர்களோடு இணைந்து ஆடினான், உற்சாகமிகுதியில் அப்போது அங்கிருந்த ஒரு டேங்கர் லாரி மீது ஏறினான். லாரி டிரைவரின் எச்சரிக்கையையும் மீறி, அவனின் கொண்டாட்டம் நிற்கவேயில்லை. லாரியில் இருந்து தவறி விழுந்து முதுகு தண்டு உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பரத்தின் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம், அவனது தாய் வீட்டு வேலை செய்கிறார், அவனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கண்ணீருடன் உறவினர் ஒருவர் கூறினார்; "அவருடைய குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? உங்கள் அம்மா, அப்பா மற்றும் அன்புக்குரியவர்களை நீங்கள் நினைத்தால், எந்த நடிகரும் உங்களுக்கு பெரிதாகத் தோன்ற மாட்டார்கள். உங்கள் தந்தையின் ரசிகராக இருங்கள். உங்கள் தாயை நினைத்துப் பாருங்கள்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜனவரி 12, 2023).
அர்ப்பணிப்பு:
மனிதர்களாகிய நாம் அனைவரும் யாரோ ஒருவருடன் இணைக்கப்பட்டுள்ளோம் மற்றும் இணைக்கப்படவும் விரும்புகிறோம். அந்த அதீத இணைப்பு பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் அல்லது பிரபலங்கள் அல்லது அறிவுஜீவிகள் அல்லது ஒரு விஷயமாக கூட இருக்கலாம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் தேசத்துக்காகவோ, சமுதாய நலனுக்காகவோ அல்லது ஏழைகளின் முன்னேற்றத்திற்காகவோ அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் பரத் என்பவன் ஒரு நடிகனிடம் அதுவும் தன்னை பற்றி அறியாத அல்லது இப்படிப்பட்ட ரசிகன் இருக்கிறானா என்று கூட தெரியாத ஒருவரிடம் அதிக அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தான். மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், பெயர் சொல்லி அழைக்கும் தேவனிடம் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள ஜனங்கள் விரும்புவதில்லை (ஏசாயா 43:1).
அன்பு:
மனிதர்களுக்கு நேசிக்கும் திறன் உள்ளது. அவர்கள் தங்கள் படிப்பு அல்லது தொழில் அல்லது விளையாட்டுகளை விரும்பலாம் அல்லது ஒருவரின் ரசிகராக மாறலாம். தனக்கு பிடித்த நடிகரின் மீது காட்டிய பரத்தின் அன்பு ஒருபோதும் திரும்ப கிடைக்கப் போவதில்லை; ஆம், அங்கு பரஸ்பர அன்பில்லை. ஆனால் வேதம் சொல்கிறது தேவன் முதலில் மனிதர்களை நேசித்தார் (1 யோவான் 4:19). பாவம் நிறைந்த மனித குலத்திற்காக மரிக்க தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார் (யோவான் 3:16). இது அல்லவா மேன்மையான அன்பு.
விசுவாசம்:
ஒருவரிடம் காட்டும் அன்பும் அர்ப்பணிப்பும் விசுவாசத்திற்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் அன்பின் பொருளை கடுமையாக பாதுகாக்கிறார்கள் மற்றும் அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். மாறாக, தேவன் தம்முடைய சீஷர்களுக்கு உண்மையுள்ளவர், அவர்களும் அவருக்கு உண்மையுள்ளவர்கள் (1 தெசலோனிக்கேயர் 5:24)
தியாகம்:
சிலர் முக்கியமான, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ந்ததாக அவர்கள் நம்பும் ஏதாவது அல்லது சில காரணங்களுக்காக இறக்க தயாராக உள்ளனர். சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றும்படி கர்த்தர் தம் சீஷர்களை அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்.
தேவ நோக்கம்:
மனித ஆளுமைகளைப் பின்பற்றுவது மரணத்திற்கும் பேரழிவிற்கும் வழிவகுக்கும். தேவனைப் பின்பற்றுபவர்கள் நித்திய வாழ்வையும் நோக்கத்தையும் அடைவார்கள்.
நான் என் தேவனை உண்மையாய் உள்ளார்ந்த அன்போடு நேசிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்