மில்ட்ரெட் ஹானர், அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தார். ஒரு மாணவன் எப்பொழுதும் தனது தாயார் கேட்கும் வகையில் பியானோ வாசிக்க விரும்புவதாகக் கூறுவான். ஆனால், சில நாட்களாக மாணவன் ராபி வகுப்பிற்கு வரவே இல்லை, விசாரித்த போது தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தான். பள்ளி ஒரு இசை நிகழ்ச்சிக்குத் தயாரானபோது, மாணவன் பியானோ வாசிக்க அனுமதி கோரி எழுதினான். மில்ட்ரெட், தயக்கம் காட்டினாலும், நிகழ்ச்சியின் இறுதியில் வாசிக்க அவனுக்கு இடமளித்தார், மேலும் நிகழ்வும் குறைவின்றி நடக்கும் என்று நம்பினார். அந்நிகழ்ச்சியில் மாணவன் ராபி மிகச் சிறப்பாக பியானோ வாசித்ததில், மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைத்தட்டியது. பையனிடம் கேட்டபோது, 'ஆசிரியரே,, என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று நான் சொன்னது நினைவிருக்கிறதா? என் தாயார் புற்று நோயால் கஷ்டப்பட்டு வந்தார், இன்று காலை காலமானார் மற்றும் என் தாயார் காது கேளாதவள், அதனால் இன்றிரவு தான் நான் வாசிப்பதை முதன்முதலில் கேட்டிருப்பாள், அதை நான் சிறப்பாக மாற்ற விரும்பினேன்' என்றான். ராபி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1995 இல் ஓக்லஹோமா நகரத்தில் உள்ள ஆல்ஃபிரட் பி. முர்ரா ஃபெடரல் கட்டிடத்தின் மீதான வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டார்.
நம்பிக்கை:
சிறுவனாக இருந்தாலும், மரணத்திற்குப் பின்னான வாழ்வில் உறுதியாக இருந்தான். அவனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நித்திய நம்பிக்கையைக் கொண்டிருந்தான். அவனது நோய்வாய்ப்பட்ட தாயின் வேதனையான துன்பம் தேவனை விசுவாசிப்பதில் இருந்து அவனை தடுக்கவில்லை, மேலும் தேவனை நேசிப்பவர்களுக்கு எல்லாமே நன்மைக்கு ஏதுவாக தான் நடக்கிறது என்பதை உணர்ந்திருத்தான் (ரோமர் 8:28). ராபி மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், அவனுடைய இரட்சகர் தன்னுடன் இருப்பதை அறிந்திருந்தான் (சங்கீதம் 23:4).
உயிர்த்தெழுந்த சரீரம்:
இதில் ராபி உயிர்த்தெழுதல் மற்றும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைப் புரிந்துகொண்டது வியப்பானதே. பரலோகத்தில் கண்ணீர், வலி, துன்பம் அல்லது மரணம் இல்லை. நோயினால் இறந்தவர்கள், இனி நோயைத் தாங்க வேண்டியதில்லை. பூமியில் உடல் ஊனமாக இருந்தாலும் பரலோகத்தில் அப்படி இல்லை. தேவனின் குரல், பரலோக பாடகர்களின் இசை, தூதர்களின் பாடல்கள் மற்றும் நிச்சயமாக, அவளது மகன் வாசித்த பியானோ என ராபி தனது காதுகேளாத தாய் பரலோகத்தில் காது கேட்பவளாக இருந்து அனைத்தையும் கேட்டிருக்க முடியும் என்று சரியாக நம்பினான்.
களிகூருங்கள்:
உலகில் அனாதையாக, ஆனால் விசுவாசத்தில் பணக்காரனாக இருக்கும் தன் மகனின் சாதனையைப் பற்றிக் கேட்டு அவனது தாய் மகிழ்ச்சியடைவார் என்பதையும் ராபி அறிந்திருந்தான்.
எனக்கு இந்த சிறுவனைப் போல விசுவாசம் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்