“வாழ்க்கை என்பது ரோஜா மலர் படுக்கையல்ல” என்பர் மூத்தோர் முதுமொழி. வாழ்க்கைப் பயணத்தில் கண்ணீரின் பாதையிலும் நடக்க வேண்டி வரலாம். அந்த சமயங்களில் கண்ணீரிலேயே மூழ்கி விடாமல் கடவுளைத் துதிக்க வேண்டும். ஏனென்றால் நமது நன்மைக்காகவே அந்தப் பாதையில் பயணம்.
உயர்த்தப்பட:
முற்பிதாவாகிய யாக்கோபின் செல்லமகன் யோசேப்பு, கடவுள் பக்தியுடையவனாக இருந்தான். சேஷ்ட புத்திரனுக்குத் தரவேண்டிய பல வண்ண அங்கியை,யாக்கோபு யோசேப்புக்குத் தந்தார். எனவே சகோதரர்கள் அவன் மீது பொறாமை கொண்டனர். தன் சகோதரர் தவறுகளை தகப்பனிடம் யோசேப்பு கூறுவதால், சகோதரர்கள் அவனை வெறுத்தனர். யோசேப்பு இரு கனவுகள் கண்டான். ஒரு கனவில் வயலில் யோசேப்பும், அவன் சகோதரர்களும் அறுத்த அரிகளைக் கட்டிக் கொண்டிருந்தனர். யோசேப்பின் அரிக்கட்டு நிமிர்ந்து நிற்க, மற்றவர்களுடைய அரிக்கட்டுகள், யோசேப்பின் அரிக்கட்டை சுற்றி வணங்கி நின்றன. அடுத்த கனவில் சூரியனும், சந்திரனும், 11 நட்சத்திரங்களும் அவனை வணங்கியதாகக் கண்டான். கனவுகளைக் கேட்ட சகோதரர்கள் யோசேப்பை மிகவும் பகைத்தனர்.
ஆடு மேய்க்கச் சென்ற அண்ணன்மார்களை தன் தந்தையின் கட்டளைப்படி பார்க்கச் சென்றான், யோசேப்பு. அவர்கள் இவனைப் பிடித்து பாழுங்குழியில் போட்டார்கள். பின் எகிப்திற்குச் சென்ற இஸ்மவேல் வியாபாரிகளிடம் 20 வெள்ளிக்காசுக்கு விற்றார்கள். எகிப்தில் பார்வோனின் அதிகாரிகளில் ஒருவனும் மெய்க்காப்பாளர்களின் தலைவனுமான போத்திப்பார் வீட்டில் அடிமையாக விற்கப்பட்டான், யோசேப்பு. வீட்டில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவன், அன்புத் தந்தையைப் பிரிந்து, அந்நிய நாட்டில் அடிமையாக இருக்கிறான். அழகான, அறிவு மிகுந்த வாலிபனான யோசேப்பை போத்திபாரின் மனைவி விரும்பினாள்.
அவனோடு தவறான வாழ்வு நடத்த அவனை அழைத்தாள். அவனோ…”தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய மாட்டேன்.” என்று கூறி மறுத்தான். விளைவு…. பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். செய்யாத குற்றத்திற்குச் சிறை. அவன் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். வேதம் சொல்லுகிறது. “அவன் கால்களை விலங்கு போட்டு ஒடுக்கினார்கள். அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது” என்று.
அரசனுக்கு அப்பம் சுடுவோரின் தலைவனும், திராட்சரசம் பரிமாறுவோரின் தலைவனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் ஒரே நாளில் வௌ;வேறு பொருள் தரும் கனவுகளைக் கண்டனர். அவர்களுடைய கனவுகளுக்கு யோசேப்பு விளக்கம் கூறினான். அதன்படியே நடந்தது. திராட்சரசம் பரிமாறுவோன் விடுதலை செய்யப்பட்டு தன் பதவியில் அமர்ந்தான். இரு ஆண்டுகளுக்குப் பின் எகிப்திய அரசன் கனவு கண்;டான். கனவிற்குப் பொருள் கூற ஒருவராலும் இயலவில்லை. திராட்சரசம் பரிமாறுவோரின் தலைவன் மூலம் யோசேப்பைப் பற்றி அறிந்து, யோயேசப்பை சிறையிலிருந்து வரவழைத்தார்கள். கர்த்தருடைய கிருபையால் யோசேப்பு கனவிற்கு விளக்கம் கூறினான். வளமான 7 ஆண்டுகள் வரும். அதன் பின் வறட்சியான 7 ஆண்டுகள் வந்து தேசத்தைப் பாழாக்கும் என்று கூறியதோடு, வளமான ஆண்டின் விளைச்சலை எப்படிப் பாதுகாத்தால் வறட்சியின் ஆண்டுகளில் பயன்படுத்தலாம் என ஆலோசனையையும் கூறினான். “தேவ ஆவியைப் பெற்ற இவனைப் போல வேறு யாரும் உண்டோ?” என்று கூறி யோசேப்பை எகிப்து நாடு முழுமைக்கும் அதிகாரியாக்கினான் பார்வோன். யோசேப்பின் ஆணைப்படி எகிப்துநாட்டில் அனைவரும் நடந்தனர்.
பஞ்ச காலத்தில் தானியம் வாங்க வந்த 10 அண்ணன்மார்களையும் சோதித்துப் பார்த்தான். அவர்கள் மனம் மாறி இருந்ததை அறிந்ததும், அவர்களுக்குதம் தன்னை வெளிப்படுத்தி, தன் தகப்பன் குடும்பம் முழுவதையும் எகிப்துக்கு வரவழைத்து அவர்களை கோசேன் நாட்டில் வைத்து பராமரித்தான். ஆதியாகமம் 37-50 வரையுள்ள அதிகாரங்களில் இந்த அழகிய வரலாற்றைக் காணலாம்.
யோசேப்பு அடிமையாக எகிப்த்திற்குச் செல்லாவிட்டால் அவன் எகிப்தின் அதிபதியாக உயர்ததப்பட முடியாது. அவன் நடந்து வந்த கண்ணீரின் பாதை, அவன் மட்டுமல்ல அவன் தகப்பன் குடும்பம் முழுதும், எகிப்து நாடு முழுமையும், மற்றதேசத்தார்களும் வளமுடன் வாழ வழிவகுத்தது. கஷ்ட நேரத்திலும் கடவுளுடைய பிள்ளையாக வாழ்ந்த அவன் உயர்ததப்பட்ட போது, கர்த்தரை துதித்து, துதித்து மகிழ்ந்திருப்பான்.
உத்தமம் வெளிப்பட:
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தார். 10 பிள்ளைகளுடன் சீரும், சிறப்புமாய் சமுதாயத்திலே கனம் பெற்ற கண்ணியவானாய், தலைவனாய் வாழ்ந்து வந்தார். அவரைக் குறித்து உத்தமனும், சன்மார்க்கனும், தேவனக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனாகிய அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை, என தேவனே சாட்சி கொடுத்தார். சாத்தான் சவால்விட்டான், “யோபுவையும், அவனுக்குரிய யாவற்றையும் சுற்றி வேலியடைத்திருக்கிறீர். அதை எடுத்துப் போடும் அவன் உம்மை தூஷிப்பான்.” என்று.
“அவனுக்குரியவைகள் எல்லாம் உன் கையில், அவனை மட்டும் தொடாதே” என ஆண்டவர் சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். சபேயர் யோவுவின் வேலைக்காரர்களைக் கொன்று போட்டு, எருதுகளையும், கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு போனார்கள். (யோபு 1:14,15) வானத்திலிருந்து அக்கினி இறங்கி ஆடுகளையும், வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்டது. (1:16) கல்தேயர் 3 கூட்டமாய் வந்து வேலைக்காரர்களை வெட்டிப் போட்டு, ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு போனார்கள். (1:17) உடமைகள் அனைத்தையும் இழந்தார் யோபு. மூத்த சகோதரர் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது, வனாந்திர வழியாய் வந்த பெருங்காற்று, வீட்டின் 4 மூலைகளிலும் அடிக்க வீடு விழுந்து அனைவரும் மடிந்தனர். (1:18,19) உறவுகளை இழந்தார் யோபு.
ஆண்டவர் சாத்தானிடம் யோபு உத்தமத்தில் உறுதியாய் இருப்பதை சுட்டிக் காட்டினார். சாத்தானோ, யோபுவின் சரீரத்தைத் தொட்டால், அவன் கர்த்தரை தூஷிப்பான் என சவால் விட்டான். யோபுவின் சரீரத்தை தொட சாத்தானுக்கு அனுமதி தந்தார். சாத்தான் யோபுவின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் வாதித்தான். ஒரு ஓட்டை எடுத்து, தன்னை சுரண்டிக் கொண்டு சாம்பவில் உட்காந்தார். சுகத்தை இழந்தார் யோபு, அவருடைய மனைவி அவரைப் பார்த்து “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் இருக்கிறீரோ? தேவனை தூஷீத்து, ஜீவனை விடும்.” என்றான். அவன் மூலம் சாத்தான் யோபுவைத் தற்கொலைக்குத் தூண்டினான் எனலாம். ஆம் தன் மனைவியின் அன்பையும் இழந்தார். அவருடைய நண்பர்களான தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும் யோபுவைப் பார்க்க வந்து, அவருடைய கொடிய துக்கத்தைக் கண்டு சத்தமி;ட்டு அழுது, தங்கள் சால்வையைக் கிழித்து தங்கள் தலைகளில் புழுதியைத் தூற்றிக் கொண்டு, ஏழு நாட்கள் அவரோடு கூட தரையில் உட்காந்தார்கள்.
பின் எலிப்பாஸ் அனுபவ அறிவைக் கொண்டும், பில்தாத் பாரம்பரியத்தின் மூலமும், சோப்பார் ஒழுக்கச் சட்டத்தின் மூலமும் தங்கள் சுய அறிவைக் கொண்டு யோபுவைக் குற்றப்படுத்திப் பேசுகின்றனர். ஆறுதல் படுத்த வேண்டியவர்கள் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தினர். நண்பர்களையும் இழந்தார் யோபு. அனைத்தையும் இழந்தவர் ஆண்டவரை மட்டுமே நோக்கிப் பார்த்தார். ஒரு அரசனைப் போல வாழ்ந்தவர், ஆண்டியாய், அநாதையாய், நோயில் உருக்குலைந்து இருந்தபோதும் உத்தமனாய் சன்மார்க்கனாய் விளங்கினார்.
யோபுவின் உத்தமத்தை அவர் வாயின் வார்த்தைகள் மூலமாகப் பார்ப்போம். உடமைகளை, உறவுகளை இழந்த போது,
“நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.” (1:21) என்று கூறினார்.
மனைவி கசந்து பேசிய போது,
“நீ பைத்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய். தேவன் கையினால் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ?” என்றார்.
இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. தொடர்ந்து அவர் பேசுவதைக் கேட்போம்.
“அவர் (கர்த்தர்) என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (13:15)
“அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.” (23:10)
“என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன்.”(27:5)
“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும். 19:25-27 எப்பேற்பட்ட விசுவாசம்!
இறுதியில் யோபு இழந்த அனைத்தையும் இரு மடங்காய்ப் பெற்றார். 7 குமாரர்களும் 3 குமாரத்திகளும் பிறந்தனர். பிள்ளைகள் மட்டும் 10. ஏன்? விண்ணில் 10 பிள்ளைகள். மண்ணில் 10 பிள்ளைகள். இந்நிகழ்வுக்குப் பின் 140 ஆண்டுகள் யோபு சீரும் சிறப்புமாய் வாழ்நது 4 தலைமுறைகளாக தன் சந்ததியைக் கண்டு மகிழ்ந்தார்.
யோபுவின் கண்ணீரின் பாதை அவரின் உத்தம குணத்தை உலகிற்குக் காட்டியது. உயர்ந்த ஆசீர்வாதங்களைத் தந்தது. இதற்காக நாம் தேவனைத் துதிக்க வேண்டாமா?
உன்னதர் மகிமையடைய:
லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் 8ஆம் அதிகாரம் 41,49-56 ஆகிய வசனங்களில் ஜெப ஆலயத் தலைவனாகிய யவீருவை சந்திக்கிறோம். ஜெப ஆலயத் தலைவருக்கு 12 வயது நிரம்பிய ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் சாகுந்தருவாயில் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எப்படித் துடித்திருப்பார்கள்.? 12 வயது வரை செல்லமாக வளர்த்த ஒரே ஒரு மகள். கண்ணீரின் வாழ்க்கை. சரியான முடிவெடுக்கிறார். யவீரு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடினார். இயேசுவின் பாதத்தில் விழுந்து, தன் வீட்டிற்கு வந்து தன் மகளை சுகப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். யவீருவின் தாழ்மை குணத்தை இங்கு நாம் பார்க்கிறோம். இயேசுவோடு வீட்டிற்குப் போகும் வழியில் யவீருவின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள். போதகரை வருத்தப்படுத்த வேண்டாம்.” என்றான். யவீரு எப்படி துடித்துப் போயிருப்பார்.? இயேசு அதைக் கேட்டு, யவீருவைப் பார்த்து, “பயப்படாதே: விசுவாசமுள்ளவனாய் இரு. அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்.” என்றார். மகள் மரித்துப் போனாள் என்ற செய்தி வந்தும் கூட, கர்த்தரின் வாக்கின் மேல் விசுவாசமாய் இருந்தார். வீட்டிற்கு வந்தார்கள். அங்கு எல்லாரும் அழுது துக்கங்கொண்டாடுவதைக் கண்டு, “அழாதேயுங்கள். அவள் மரித்துப் போகவில்லை. நித்திரையாயிருக்கிறாள். என்று இயேசு கூறினார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அவர்கள் எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு “பிள்ளையின் கையைப் பிடித்து, “சிறு பெண்ணே எழுந்திரு” என்றார். அவள் உயிர் பெற்று எழுந்தாள். தேவ நாமம் மகிமைப்பட்டது. யவீரு குடும்பம் மகிழ் கொண்டாடியது.
கண்ணீரின் பாதை, நாம் உயத்தப்பட, நம்முடைய உத்தம குணம் வெளிப்பட, உன்னதர் நாமம் மகிமையடைய. எனவே நாம் துதிப்போம். துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நம் ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்று ஆனந்திப்போம்.
Author: Sis. Vanaja Paulraj