நாத்தான் ஒரு தைரியமான தீர்க்கதரிசி. ஒருமுறை தாவீதைக் கண்டிக்க தேவன் அவரை அனுப்பியபோது ஒரு ராஜாவை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இருந்தது. தாவீது செய்த காரியத்தை, குடும்பத்தில் தன் மகளைப் போல் வளர்ந்த ஒரு ஆடு எப்படி பறி போனது என ஒரு ஏழை மனிதனைப் பற்றிய கதையை நாத்தான் திறமையாகச் சொல்கிறார். பல ஆடுகளை வைத்திருக்கும் ஒரு பணக்கார பக்கத்து வீட்டுக்காரர், வீட்டிற்கு வந்த விருந்தினருக்காக அந்த ஏழையிடமிருந்த ஒரே ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடுங்கி, தனது விருந்தினருக்காக சமையல் பண்ணுவித்தார், கேட்டுக் கொண்டிருந்த தாவீது கோபமடைந்து கத்தினான். அந்த மனிதன் சாக வேண்டும், ஏழைக்கு நான்கு மடங்கு கொடுக்க வேண்டும், ஏனென்றால் அந்த மனிதனுக்கு இரக்கம் இல்லையா என்றெல்லாம் கூறி உணர்ச்சிவசப்பட்டான். நாத்தானோ எளிமையாக, மிக அமைதியாக தாவீதே ‘நீயே அந்த மனுஷன்’ என்றார் (2 சாமுவேல் 12). தாவீதைப் போலவே, தேவ ஜனங்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்கவும் கண்டனம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள், ஆனால் தற்பரிசோதனை செய்ய மறுக்கிறார்கள். அதே கோபம் தங்கள் தவறு மீது இல்லை. சுயநல மனப்பான்மை தன்னைக் கண்டிக்காமல் மற்றவர்களை மட்டுமே கண்டனம் செய்கிறது.
கோபம்:
பணக்காரர் மீது தாவீதின் கோபம் சரியானது மற்றும் நீதியானது. போதுமான அளவு இருந்த பணக்காரன் ஏழையிடமிருந்த ஒரே ஒரு உடைமையைக் கொள்ளையடிக்கவோ அல்லது பறிக்கவோ கூடாது. இது பேராசையின் பாவம், பத்தாவது கட்டளையின் தெளிவான மீறல். அநீதி, சமூகத் தீமை, ஒடுக்குமுறை ஆகியவை விசுவாசிகளை அதிர்ச்சியடையச் செய்து உலுக்க வேண்டும். இருப்பினும், மற்றவர்களிடம் கோபப்படுவதற்கு முன்பு தற்பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.
மீட்பு மற்றும் திருப்பிச் செலுத்துதல்:
பணக்காரன் ஒரு பகல் கொள்ளை செய்தான். அவன் திருடியது தனக்கு உணவளித்து கொள்ளவும் அல்ல, அவன் பசியினால் வாடவும் இல்லை. அவனைப் பொறுத்தவரை, தாராளமான விருந்தோம்பல் கொண்ட ஒரு சிறந்த விருந்தளிப்போன் என்ற அவனது நற்பெயர் முக்கியமானது. உண்மையில், அவன் தனது சுயத்தில் பசியுடன் இருந்தான், மேலும் அவனைப் பார்ப்பவர்கள் பெருமையாக பேச நினைத்தான். அவனது சுயம் மற்றவர்களின் உரிமைகள், உடைமைகள் மற்றும் விலையேறப்பெற்ற உரிமையை மிதிக்கக்கூடும். ஆகாப் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் திருடி அவனைக் கொன்றது போல, தாவீது உரியாவின் மனைவியைத் திருடி அவனைக் கொன்றான் (1 இராஜாக்கள் 21). ஒரு திருடன் பிடிபட்டால், அவன் நான்கு மடங்கு திரும்ப கொடுக்க வேண்டும் (யாத்திராகமம் 22:2; லேவியராகமம் 5:16). தாவீது நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்திருந்தான், ஆனால் தாவீது அதை தனக்குப் பொருத்தவில்லை. உரியா இறந்ததால் தாவீது நான்கு மடங்கு திரும்ப அளிக்க முடியவில்லை, தாவீதின் நான்கு மகன்கள் மரணத்தை எதிர்கொள்ள தேவன் அனுமதித்தார்: பத்சேபாளின் மகன், அப்சலோம், அம்னோன் மற்றும் அதோனியா.
வருத்தம் இல்லை:
தாவீது செல்வந்தனுக்கு இரக்கம் இல்லையா அல்லது கருணை இல்லையா என்றான், அது தாவீதுக்கும் இல்லையே.
நான் மற்றவர்களை கண்டிப்பதில் விரைந்து செயல்படுகிறேனா அல்லது தற்பரிசோதனை செய்து கொண்டு மாற்றம் அடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்