தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்யும் தீயவர்கள் உள்ளனர். அத்தகைய குற்றங்களில் ஒன்று பணையத் தீநிரல் (Ransomware) அதாவது கணினிகளை செயலிழக்கச் செய்யும் நிரல்கள் ஆகும். இந்த மென்பொருள் எந்தவொரு கணினியிலும் ஊடுருவி, அதன் சொந்த கணினியின் பயன்பாட்டைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். கணினித் திரையை உபயோகப்படுதத முடியாமல் செய்யலாம் அல்லது கோப்புகளை முடக்கலாம். பின்னர் பணம் செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி அனுப்பப்படும். பணம் செலுத்தப்பட்டால் மட்டுமே, கணினியைத் திறக்க மறைவிலக்கு செய்ய கடவுச்சொல்லை (decryption key) அனுப்புவார்கள். கணினி மற்றும் அனைத்து ஆவணங்களும் அதாவது Word files, புகைப்படங்கள், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள், தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் என ஒரு நபருக்கு சட்டப்பூர்வமாகச் சொந்தமானது வெளியாரால் முடக்கப்பட்டு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றன. பெரும்பாலும் பணம் பறிப்பதே நோக்கம். அண்ட அனாதைகளாக ஆவதற்கு தேவனுக்குச் சொந்தமான ஆதாம் மற்றும் ஏவாளைத் தாக்க சாத்தான் பாவத்தை பணையத் தீநிரல் (ransomware) ஆகவும் பயன்படுத்தினான். ஆம், "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான் 10:10).
1) குருட்டு கண்கள்:
ஆதாம் மற்றும் ஏவாளின் கண்கள் திறக்கப்படும் என்று சாத்தான் வாக்குறுதி அளித்தான், ஆனால் உண்மை நிலை என்ன அவர்களைக் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4). மனிதர்களால் தேவனின் மகிமையைக் காணவோ, அவருடைய பண்புகளை உணரவோ முடியாது.
2) அநீதியின் ஆயுதங்கள்:
ransomware ஐ உருவாக்குபவர்கள் பாதிக்கப்பட்டவரின் தரவை தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது போல, சாத்தான் பாவிகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவித்து அக்கிரமத்தையும் அநீதியையும் பரப்புகிறான் (ரோமர் 6:13).
3) அடிமைகள்:
சுதந்திரமான ஆதாமையும் ஏவாளையும் பாவத்தின் அடிமைகளாகவும் அவனுடைய அடிமையாகவும் சாத்தான் தரம் தாழ்த்தினான். சாத்தானின் கொடுங்கோன்மையின் கீழ் மனிதர்கள் அடிமைகளாகவும் மற்றும் கைதிகளாகவும் மரித்து விட்டார்கள் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 2:1-3).
4) பிணைத்தொகை (விலைக்கிரயம்):
இருப்பினும், தேவன் மனிதர்களை அந்த நிலையிலேயே விட்டு விடவில்லை. தேவன் தம்முடைய அன்பு, இரக்கம் மற்றும் கிருபையின் காரணமாக, மனிதகுலத்தை இரட்சிக்க அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவ மன்னிப்புக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தினார், மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மரித்தோரிலிருந்து எழுந்தார் (எபிரெயர் 9:22). விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் விலையில் வாங்கப்படுகிறார்கள், அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் அல்ல (எபேசியர் 1:7; 1பேதுரு 1:18).
5) மீட்பு:
சாத்தான் சட்டவிரோதமாக மனிதர்களை தன் வசப்படுத்தியுள்ளான். ஒரு நபர் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது, மீண்டும் தேவனால் விலையேறப்பெற்ற மீட்கப்பட்ட மக்களாகச் சொந்தம் கொள்கிறார்.
நம் தேவனால் விலைக்கிரயம் கொடுத்து மீட்கப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்