மூன்று செயல்கள்

பவுல் கொலோசிய விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் மூன்று செயல்களைச் செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறார்; முதலாவது கடுமையான நடவடிக்கை, அதாவது சில விஷயங்களைக் அழித்துப் போட வேண்டும், இரண்டாவது சில விஷயங்களைத் தள்ளி வைக்க வேண்டும் அல்லது விட்டு விட வேண்டும், மூன்றாவது சில விஷயங்களை அணிந்து கொள்ள வேண்டும் அல்லது தரித்துக் கொள்ள வேண்டும் (கொலோசெயர் 3:5-14).

முதல் செயல்:
அழித்துப் போடுங்கள்;  பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் நல்வாழ்வைக் கெடுக்கிற மாம்ச அவயவங்களை அழித்துப்போடுங்கள் என பவுல் கட்டளையிடுகிறார்.  மரணம் என்றால் அழித்தல் அல்லது நிர்மூலமாக்குதல் அல்லது பூண்டோடொழித்தல் ஆகும்.  அதில் அவர் ஐந்து விஷயங்களை பட்டியலிடுகிறார், ஒரு விசுவாசிக்கு விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை போன்றவற்றில் எந்த தொடர்பும் இல்லை, அது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இவற்றை முற்றிலுமாய் அழித்துப் போட வேண்டும். 

இரண்டாவது செயல்:
தள்ளிப் போடுங்கள் என்றால் விட்டு விடுவது, ஒதுக்கி வைப்பது அல்லது இந்த விஷயங்களில் இருந்து விலகி இருப்பது என்பதாகும்.  இவை மற்றவர்களுடனான உறவைப் பாதிக்கின்றன.  இத்தகைய விஷயங்கள் குடும்பங்கள், சமூகங்கள், உள்ளூர் சபைகள் மற்றும் சமூகத்தை பாதிக்கலாம்.  கோபம் மற்றும் மூர்க்கம் ஆபத்தானது, அது கொலையாக மாறி வன்முறையில் முடியும்.  தீமை மற்றும் அவதூறு ஒருவரின் நற்பெயரை அழிக்கக்கூடும்.  ஆபாசமான பேச்சு தேவனை அவமதிக்கிறது.  ஒருவருடன் ஒருவர் பொய் பேசுவது நம்பிக்கையை சிதைக்கிறது. ஆம், பழைய சுயம் அல்லது உள் ஆளுமை துண்டிக்கப்பட வேண்டும்.

 மூன்றாவது செயல்:
 அணியுங்கள்:  தேர்ந்தெடுக்கப்பட்ட, பிரியமான, பரிசுத்தமான விசுவாசிகளுக்கு; புதிய சுயத்தை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அல்லது ஒரு புதிய படைப்பாக மாற வேண்டும் என்றும் பவுல் கட்டளையிடுகிறார். இது தேவனைப் பற்றிய அறிவில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, அவருடைய சாயலின் படி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், விசுவாசிகள் உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து  மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆம், ஒருவரையொருவர் சகித்துக்கொள்வது அவசியம் அது கணவன் மனைவிக்கு இடையேயான வேறுபாடுகளாக இருக்கலாம்;  பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே இருக்கும் விரிசல்களாக இருக்கலாம்;  அண்டை வீட்டாரோடு இருக்கலாம்;  சகோதரர்கள் மற்றும் பலரோடு என்ன பிரச்சினைகள் காணப்பட்டாலும் அதை சகித்து கொள்ள வேண்டும்; ஆனால் மற்றவர்களை மன்னிக்காமல் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ள முடியாது.  தேவன் நம்மை மன்னித்து கிருபை அளித்துள்ளாரே என்ற நன்றியுணர்வுடன் மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும்.‌ முடிவில், எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்கும் அன்பை அணிந்து கொள்ளுமாறு பவுல் கட்டளையிடுகிறார்.  இசைக்குழுவில் இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு இசைக்கருவியைப் போலவே, ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள், ஆனால் ஒன்றாக அவர்கள் ஒரு சிறந்த இசையை உருவாக்குகிறார்கள்.  "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்" (எபேசியர் 6: 10-18) என பவுல் நமக்குக் கட்டளையிடுகிறார். 

 ஆவிக்குரிய வளர்ச்சிக்காக இந்த மூன்று செயல்களையும் செய்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download