சமீபத்திய காலங்களில், குற்றவாளிகள் தாங்கள் செய்த கொடூரமான குற்றங்களுக்கு எந்த வருத்தத்தையும் காண்பிக்காமல் இருக்கும் புகைப்படங்களை நம்மால் நினைவுக்கு கொண்டு வர முடிகிறது. வாலிப வயதினர் வங்கிகளை கைப்பற்றுவதும் அதைக் கொள்ளையடிப்பதும் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக சிறுமிகளை தவறான வழிக்கு ஈர்த்து பாலியல் பலாத்காரங்கள் செய்வதும் அல்லது எவ்வித பாதுகாப்பும் இல்லாத தனிநபர்களை கொல்வதும் அல்லது குழுக்களாக இணைந்து தங்கள் எதிரிகளை கொன்று குவிப்பதுமாக இருக்கிறார்கள். இதைதான் செப்பனியா தீர்க்கத்தரிசி இவ்வாறு கூறுகிறார்: "அநியாயக்காரனோ வெட்கம் அறியான்" (செப்பனியா 3: 5).
1) தேவனிடத்தில் பயமில்லை:
இந்த குற்றவாளிகளுக்கு 'கர்த்தரிடத்தில் பயமே' இல்லை. வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது; அதாவது “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு" (நீதிமொழிகள் 9:10). கர்த்தரிடத்திலிருந்து ஞானம் இல்லையென்றால், அத்தகையவர்களுக்கு ‘நீதி’ எது அல்லது ‘சரியானது’ எது என்று எதுவும் தெரியாது. அவர்கள் அறிவில்லாதவர்களாகிறார்கள்.
2) பின் விளைவுகள் குறித்த பயமில்லை:
இந்த மாதிரியான குற்றங்களைச் செய்பவர்கள் தங்கள் செயல்களின் பின் விளைவுகளுக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களின் மனதில், அவர்களை கேள்வி கேட்கவோ அல்லது இவர்கள் யாருக்கேனும் கணக்கு ஒப்பிக்கவோ தேவையில்லை என்று நினைக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதனால், அவர்களுக்கு அவர்கள் வைத்ததே சட்டம். அதாவது சட்டம், ஒழுங்குமுறைகள், விதிமுறைகள், சிறந்த நடைமுறைகள், கலாச்சார கட்டுப்பாடுகள் அல்லது தார்மீகக் கொள்கைகள் என எல்லாம் ஒன்றுமே இல்லை அல்லது அவற்றை அவர்கள் கருத்தில் கொள்வதோ அல்லது மதிப்பதோ இல்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல்துறை அல்லது நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் என அனைவரும் இவர்களுக்கு கோமாளிகள் போலக் காணப்படுகின்றனர்.
3) மற்றவர்களுக்கு எந்த ‘உரிமைகளும்’ இல்லை:
மற்ற நபர்களின் உரிமைகள் அவர்களுக்கு முக்கியமற்றவை என்பதால், அவர்கள் மற்றவர்களை ‘ஏதோ கூட வாழும் மனிதர்கள்’ அல்லது 'தன்னைவிட குறைந்தவர்கள்' அல்லது 'எந்த இரக்கமும் காட்ட தகுதியற்றவர்கள்' என்று கருதுகிறார்கள், மேலும் அவர்களின் ‘உரிமைகளையும்' பறிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கான ‘உரிமைகளை’ காத்து கொள்வதும் அதனோடே தங்களுக்கான ‘சலுகைகளையும்’ சேர்த்துக் கொள்கிறார்கள்.
4) வெட்கம் இல்லை:
அவர்களைப் பொறுத்தவரை வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் தங்களை கடவுளை போலவும் நீதிபதியைப்போலவும் பாவிக்கிறார்கள். அவர்கள் செய்வது தான் ‘சரியானது’, 'தார்மீகமானது' மற்றும் 'ஒழுங்கானது' என நினைப்பதால் வெட்கப்பட அவசியமில்லையே என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்களைப் குறித்து வெட்கப்படுவதும் இல்லை அல்லது அவர்களது குடும்பங்களைக் குறித்த அக்கறையும் இல்லை அல்லது சமூகத்தைப் பற்றிய கவலையும் இல்லை.
பள்ளிகள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான நுட்பங்களை மட்டுமே கற்பிக்கின்றன; ஊடகங்கள் மக்களை முட்டாள்களாகவும் புத்தியற்றவர்களாகவும் ஆக்குகின்றன, குற்றவாளிகளை ஹீரோக்களாக ஆக்குகின்றன; அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்கள் அவர்கள் நல் முன் உதாரணங்களாகவும் அல்ல; மதத் தலைவர்கள் ‘ஒழுக்கக்கேடான’ மற்றும் ‘சட்டவிரோத’ செயல்களை நியாயப்படுத்துகிறார்கள்; எல்லா இடங்களிலும் வெட்கமே இல்லாத குற்றவாளிகள் பரவிக் கிடப்பதே இந்த சமுதாயத்தின் சான்று.
என்னால் கவரப்பட்ட மக்களுக்கு நான் 'கர்த்தருக்கு பயப்படும் பயத்தை கற்பிக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்