ஒரு சிறிய நாணயம் கடல் மணலில் நழுவி விழுந்து விடுகிறது, சிறிது நேர தேடலுக்குப் பிறகு அதை தவற விட்ட நபர் இனி தேடுவது பிரயோஜனமற்றது மற்றும் நேரமும் வீண் என்று முடிவு செய்கிறார். "உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?" (சங்கீதம் 8:3-4) என்கிறான் தாவீது. முழு பிரபஞ்சத்தின் சூழலில், ஒரு நபர் கடவுளைத் தேடத் தகுதியற்றவன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் சொல்வது என்னவென்றால் "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10). ஒவ்வொரு நபரும் தனக்கான கண்ணியம் என்பது குறைந்தது என்றும் அல்லது கடைநிலையானது என்றும் அல்லது இழந்ததாகவும் எண்ணும் போதே தேவனின் அன்புக்கு தகுதியானவர் ஆகின்றார்.
குறைத்து மதிப்பிடப்படுபவர்கள்:
தேவன் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறார்; அதிலும் தன்னை யார் நான் குறைவானவன் அல்லது குறைவானவள் என எண்ணுகிறார்களோ அவர்களை மிகவும் நேசிக்கிறார். பிறந்த குழந்தைக்கு எவ்வித சக்தியும் இருக்காது; சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் விற்கப்படுகிற நிலைமையும் அல்லது கொல்லப்படுகிற நிலைமையும் காணப்படுகிறது. சில குழந்தைகள் இச்சையினால் உண்டாகி பின்பு கொல்லப்படுகின்றன. அதிலும் பரிதாபம் அனாதைகள்; அவர்கள் பாதுகாப்பற்றவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், பல நேரங்களில் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் மற்றும் ஒடுக்கப்படுகிறார்கள். ஏழைகள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், வீடற்றோர், விதவைகள், கைதிகள், இடம்பெயர்ந்த மக்கள் சமூகத்தின் விளிம்புநிலைகளில் வாழ்கின்றனர்; அவர்கள் மீது தேவனின் அன்பு மறுக்க முடியாதது.
கடைநிலையில் இருப்பவர்கள்:
மிகக் குறைந்த வருமானத்தில் இருப்பவர்கள் அல்லது படிநிலையின் சமூக ஏணிகளில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். சமூகங்கள், தேசங்கள், நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் கடைசி இடத்தை ஒதுக்க முடியும், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை அப்படிப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்துகிறார்.
தொலைந்து போனவர்கள்:
எல்லாரும் பாவம் செய்தார்கள் அதனால் அனைவரும் பாவிகள் என்று வேதாகமம் சொல்கிறது (ரோமர் 3:23). அவர்கள் பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலும் தொலைந்து விடுகிறார்கள்; அதைத் தொடர்ந்து விரக்தியில் மூழ்குகிறார்கள். ஆனால் தேவன் அவர்களை தூக்கியெடுத்து கன்மலையின்மேல் உயர்த்துகிறார் (சங்கீதம் 40:2). லூக்கா நற்செய்தி 15வது அதிகாரத்தில் நான்கு வகையான தொலைந்து போன மனிதர்கள் உள்ளனர் (லூக்கா 15). தொலைந்து போன நாணயங்களைப் போன்றவர்கள் தொலைந்து போனவர்களைப் போன்றவர்கள் ஆனால் அவர்கள் தாங்கள் தொலைந்து போனதை அறியார்கள் அல்லது அதன் உரிமையாளர்கள் அறியார்கள். காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள், தாங்கள் தொலைந்துவிட்டதை உணர்ந்தாலும் திரும்பி வரும் வழியை அறியாதவர்கள் அல்லது மேய்ப்பனை கண்டடைய முடியாதவர்கள். இளைய மகன் தொலைந்து போனான், அவன் தொலைந்து போனதை உணரவில்லை, ஆனால் நெருக்கடி அவனை உணர வைத்தது. மூத்த மகன் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து வீட்டிலேயே தொலைந்து போனான்.
தொலைந்ததைப் பற்றிய கவலை என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்