ஷெகினா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், தேவ சமூகம் வாசம் செய்யும் அல்லது புகலிடம் அல்லது மேகமாக அல்லது அக்கினி போன்று தோன்றுதல் என்பதாகும்.
வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு:
இஸ்ரவேலர் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது, ஷெக்கினா பகலில் மேகஸ்தம்பமாகவும், இரவில் அக்கினிஸ்தம்பமாகவும் இருந்தது (யாத்திராகமம் 13:21-22).
தேவ சமூகம்:
தேவன் இஸ்ரவேலுக்கு தோன்றினார், தேவ மகிமை சீனாய் மலையின் மேல் கார்மேகம் போல் மூடியது (யாத்திராகமம் 19:16). தேவன் இஸ்ரவேல் தேசத்துடன் ஒரு உடன்படிக்கை செய்தார்.
ஆலயத்தில் தேவமகிமை:
சாலொமோன் ராஜா எருசலேமில் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பலிகளையிட்ட போது, தேவனுடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று (2 நாளாகமம் 7:1). மகிமை சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தது.
மோசேக்கு சிறப்பாக தோன்றுதல்:
தேவன் மோசேக்கு தோன்றி, ஒரு நண்பருடன் பேசுவது போல் மோசேயோடே பேசினார். "உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்" என்ற மோசேயின் விண்ணப்பத்தை கன்மலையின் வெடிப்பில் வைத்து ஒரு பகுதியை மட்டுமே காண்பித்து மோசேயின் கோரிக்கையை அவர் நிறைவேற்றினார். "என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்; பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்" (யாத்திராகமம் 33:22-23).
நிழலிடப்பட்ட மரியாள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருத்தரிப்பில் கன்னி மரியாளை தேவனின் மகிமை மறைத்தது அல்லது நிரம்பியது எனலாம் (லூக்கா 1:35).
நற்செய்தி:
இயேசு பெத்லகேமில் பிறந்தபோது தேவதூதர்கள், கர்த்தருடைய மகிமையின் மத்தியில் தோன்றி மேய்ப்பர்களுக்கு நற்செய்தியை அறிவித்தனர் (லூக்கா 2:9).
மறுரூபம்:
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீஷர்களுக்கு முன்பாக ஆண்டவராகிய இயேசு மறுரூபமடைந்தார். அந்த நேரத்தில் தேவனுடைய மகிமை காணப்பட்டது, மேலும் மோசேயும் எலியாவும் தோன்றி கர்த்தராகிய இயேசுவோடு பேசினார்கள் (லூக்கா 9:34-35).
இரண்டாம் வருகை:
கர்த்தராகிய இயேசு தேவதூதர்களுடனும் பரிசுத்தவான்களுடனும் ஷெக்கினா மகிமையுடன் மீண்டும் வருவார் (வெளிப்படுத்துதல் 1:7).
அறிவிக்க அழைக்கப்பட்டது:
தேசங்களுக்குள்ளே தம்முடைய மகிமையையும், எல்லா ஜனங்களுக்குள்ளும் அவருடைய அற்புதச் செயல்களையும் அறிவிக்கும்படி தேவன் தம்முடைய மக்களை அழைத்திருக்கிறார் "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் (நம்) இருதயங்களிலே பிரகாசித்தார்" (2 கொரிந்தியர் 4:6).
பரிசுத்த ஆவியின் ஆலயம்:
புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கும் பாக்கியம் உள்ளது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியிடம் வாசம் செய்கிறார்கள் (1 கொரிந்தியர் 6:19). எனவே, தேவ மகிமை அதாவது ஷெக்கினா, தேவனுடைய பிள்ளைகளால் அனுபவிக்கப்படுகிறது.
நான் தேவ சமூகத்தில் உணர்வுள்ள ஒரு நபராக வாழ்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்