விரோதமாக இருக்கும் பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் முன்னிலையில் சீஷர்களுக்கு ஆண்டவர் கற்பித்த காணாமற்போன ஆடுகளின் உவமை ஒரு நல்ல மேய்ப்பனின் இதயத்தை கவனிக்க வைக்கிறது (லூக்கா 15:1-7). கர்த்தராகிய இயேசுவே நல்ல மேய்ப்பன், மாபெரும் மேய்ப்பன், பிரதான மேய்ப்பன் மற்றும் மந்தையின் ஒரே மேய்ப்பன் (எபிரெயர் 11:20; யோவான் 10:14, 16; 1 பேதுரு 5:1-4). சங்கீதக்காரரான தாவீது, தேவன் தன் மேய்ப்பராக இருந்த அனுபவத்தைப் பற்றி எழுதுகிறான், அதை சங்கீதம் 23ல் காணலாம். மாலையில் ஆடுகளை தொழுவத்தில் கொண்டு சேர்த்த பின்பு மேய்ப்பர்கள் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணுகிறார்கள். ஒரு ஆடு காணவில்லை என்றால் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும், உதவியாளர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு அந்த தலைமை மேய்ப்பன் காணாமல் போன அந்த ஒற்றை ஆட்டை தேடிக் கொண்டு வரச் செல்கிறான்.
அன்பான தேடல்:
மேய்ப்பன் முடிவெடுக்க தயங்குவதில்லை, உதவிக்கு யாரையும் அழைப்பதில்லை, யாராவது வந்து தன்னோடு இணைய வேண்டும் என காத்திருக்கவில்லை, மேய்ப்பன் தன் சார்பாக உதவியாளரை அனுப்பவில்லை, மேய்ப்பன் தன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது போல், கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியை தம்மீது ஏற்றுக்கொண்டார். மீட்பின் திட்டத்தை மற்றொருவரை வைத்து செய்ய முடியாது.
தனிமையான தேடல்:
மேய்ப்பன் தனியே செல்ல வேண்டியிருந்தது. ஒரு குழம்பை நிறைய சமையல்காரர்கள் சேர்ந்து வைத்தால் அது சரியாக வராது. ஆம், உலகத்தின் பாவத்தை ஆண்டவர் இயேசு மட்டுமே சுமக்க வேண்டியிருந்தது. கெத்செமனே தோட்டத்தில், அப்பாத்திரத்தை தன்னிடமிருந்து எடுக்க முடியுமா என்று இயேசு கெஞ்சினார். இருப்பினும், துன்பம், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் என தனித்து அனுபவிக்க அப்பாதையை ஏற்றுக் கொண்டார்.
ஆபத்தான தேடல்:
இரவில், முழு இருளில் தேடுவது எளிதான காரியம் அல்ல. மேய்ப்பன் எச்சரிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். காட்டு விலங்குகள் மேய்ப்பனை தாக்கலாம். தேவன் தனது மகனை மரிக்க அனுப்பினார், இது ஒரு எதிர்பார்க்கப்பட்ட ஆபத்து. நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்க வந்தார்.
கவனமான தேடல்:
மேய்ப்பன் ஆடுகளை சிரத்தையுடன் தேடுகிறான். தேடுதல் பணியை யோசித்து திட்டமிட வேண்டும், விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துக் கொண்டு, தூக்கம், ஓய்வு இல்லாமல் நடக்க வேண்டும். ஊழியமும் அருட்பணியும் சிரத்தையைக் கோருகின்றன, இது சோம்பேறிகளுக்கானது அல்ல.
அவசர தேடல்:
தேடுதல் வேகமாக நடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. தாமதம் ஆபத்தை அதிகரிக்கிறது, ஆம், ஆடுகள் இறக்கக்கூடுமே.
முழு தேடுதல்:
காணாமல் போன ஆட்டோடு மேய்ப்பன் திரும்பி வருவதால் தேடல் முடிவடைகிறது.
நான் நல்ல மேய்ப்பனைப் பின்பற்றுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்