ஒரு ஊரில், பெரிய மைதானத்தில் நடந்த கண்காட்சி ஒன்றில் தாயோடு வந்திருந்த சிறு பையன் திடீரென்று காணாமல் போய்விட்டான். அச்சிறுவனின் தாய் பதற்றமடைந்தவளாய் மகனை தேடினாள். பையனும் தன் தாயைத் தேடி அழுதுக் கொண்டே அம்மா அம்மா என்றழைத்தவாறு இருந்தான். அப்போது மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தினரின் சத்தங்களுக்கு மத்தியிலும், தாயால் தன் மகனின் குரலைக் கண்டறிய முடிந்தது. அவன் சத்தம் கேட்ட திசை நோக்கி ஓடி வந்து தன் அன்பினால் அரவணைத்தவளாய் தன்னோடு அவனை அழைத்துச் சென்றாள். அச்சிறுவனின் அழுகையின் சத்தம் என்பது அக்கண்காட்சியின் கூட்டத்திற்கு நடுவில் ஒலித்த சத்தங்களில் ஒன்று. ஆனால் அச்சிறுவனின் தாயைப் பொறுத்தவரை, அவளுக்கு கேட்டத்தென்னவோ அவள் பிள்ளையின் குரல் மாத்திரமே. ஒரு தாயின் அன்பினால் ஒரு குழந்தையின் கதறலை அல்லது அழுகையை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கணிக்க முடியும்.
பர்திமேயு என்கிற ஒரு குருடன், திரளான ஜனங்கள் நடமாடும் எரிகோவின் வீதியில் உட்கார்ந்திருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். கர்த்தராகிய இயேசு சீஷர்களுடனும் மற்றவர்களுடனும் அவ்வழியே வந்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய கூட்டம் தன்னை நெருங்கி வருவதைக் குருடன் புரிந்துகொண்டான். அதுமட்டுமன்றி, தன்னருகே இருந்தவர்களிடம் விசாரித்து ஆண்டவராகிய இயேசு வருவதையும் உறுதிபடுத்திக் கொண்டான். இப்போது நல்லதொரு வாய்ப்பு அவனைத் தேடி வருகின்றதை புரிந்தவனாய் "இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" என்று சத்தமிட்டான். ஆம், அவனுக்கு இரக்கம் காட்டும்படி அவரை அழைத்தான். அப்போது அங்கிருந்தவர்கள் பார்வையற்ற பர்திமேயுவை அமைதிப்படுத்த அதட்டினர்; ஆனால் அவனோ இன்னும் அதிகமாய் சத்தமிட்டு அழுதான்; அப்போது *இயேசு நின்று* அவனை அழைத்து வரச் சொன்னதாக மாற்கு எழுதுகிறார் (மாற்கு 10:48-49). எப்படி கண்காட்சிக் கூட்டத்தில் காணாமல் போன சிறுவன் அழுதானோ அப்படிதான் பர்திமேயுவின் அழுகையும், அதுபோல அச்சிறுவனின் தாயைப் போல தான் இயேசுவும் அவன் சத்தத்திற்கு மறுமொழியளித்து அரவணைத்தார்.
1) உணர்வுள்ளவர்:
ஏழைகள், ஒடுக்கப்படுவோர், துன்பப்படுவோர், சுரண்டப்படுவோர் எனப் போன்றோரின் அழைப்புக்கு ஆண்டவர் உணர்திறன் உடையவர். பர்திமேயு தனது இயலாமையால் உடைந்து நொறுக்கப்பட்டவனாய், தனது வாழ்வாதாரத்திற்காக அல்லது இயல்பு வாழ்க்கைக்கு மற்றவர்களைச் சார்ந்து இருந்தான். ஆம், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" (சங்கீதம் 34:18).
2) தயவுள்ளவர்:
தேவையுள்ளோர், அதிலும் குறிப்பாக மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல குழப்பமடைந்து, ஆதரவற்று, அவநம்பிக்கையோடு காணப்படுபவர்களிடம் கர்த்தர் மிகுந்த தயவுள்ளவராய் இருக்கிறார். ஆம், "அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி" என மத்தேயு 9:36ல் வாசிக்கிறோமே.
3) நின்று செவிமடுப்பவர்:
கூட்டத்தினரோடு நடந்து கொண்டிருந்த தேவன் அமைதியாக நின்றார், ஏன் தெரியுமா சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கூர்மையாக கவனிக்க வேண்டுமல்லவா! ஆம், சத்தமிட்ட பர்திமேயுவை நோக்கி தன் கவனத்தை திருப்பினார் (மாற்கு 10:49).
4) முன்னுரிமையளிப்பவர்:
தேவன் விசுவாச சத்தத்திற்கு மறுமொழியளித்தார். அவருடைய போதனைக்காக சீஷர்கள் காத்திருக்கலாம். அவருடன் நடந்து வந்த ஜனங்கள் இன்னும் பயணம் போக வேண்டும் என காத்திருக்கலாம். ஆனால் பர்திமேயு காத்திருப்பதை தேவன் விரும்பவில்லை. ஆம், தேவன் அவனை இரட்சித்தார் (மாற்கு:10:52).
சமூகத்தில் நமது சேவைக்கான (ஊழியத்திற்கான) சரியான அணுகுமுறையையும் முன்னுரிமையையும் ஆண்டவர் இயேசு முன்மாதிரியாகக் காட்டுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தை எனக்கு இருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran