செலூக்கியப் பேரரசின் கீழ் சிரியா மற்றும் இஸ்ரவேலை ஆண்ட நான்காம் ஆண்டியோகஸ் எப்பிஃபேனஸ் என்பவன் சின்னதான ஒரு கொம்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது (தானியேல் 8:9-12). அவன் இரக்கமற்றவன் மற்றும் கொடூரமானவன்; மேலும் சிங்காசனத்தைப் பெற தன் சகோதரனைக் கொன்றவன்; தேசங்களைப் பெறுவதற்காக மற்ற ஆட்சியாளர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஒரு லட்சம் யூதர்களைக் கடுமையாக துன்புறுத்திக் கொன்றவன். அவன் எருசலேமை கைப்பற்றி, ஆலயத்தையும் அதனுடைய பலிபீடத்தின் தெய்வீகத் தன்மையையும் அவமதிப்புச் செய்தான். மேலும் அவன் ஆட்சியில் இஸ்ரவேல் மீது கடுமையான துன்புறுத்தல் இருந்தது. கிரேக்க கலாச்சாரத்தை அவர்கள் மீது திணிக்க விரும்பினான்; கிமு 168 இல் அலெக்ஸாண்டிரியாவில் தோல்வியடைந்து திரும்பிய ஆண்டியோகஸ், ஓய்வுநாளில் எருசலேமைத் தாக்கும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டான். அவன் யூப்பித்தர் சிலையை வைத்து ஒரு பன்றியை பலியிட்டான். ஆண்டியோகஸ் எப்படி யூதர்களை துன்புறுத்தினான், அவன் தூஷணங்கள், விருத்தசேதனம் செய்யும் சடங்குகள், தோராவை கற்பது மற்றும் கஸ்ருத்தை கடைபிடிப்பதற்கான (யூத உணவு சட்டங்கள்) தடை போன்றவையெல்லாம் மக்கபேயர் ஆகமம் விவரிக்கிறது. ஆண்டியோகஸ், அந்திக்கிறிஸ்துவின் முன்னோடி, அக்கிரமக்காரன் (2 தெசலோனிக்கேயர் 2:1-12).
1) வெறுப்பு:
ஒரு வலுவான உந்து சக்தி வெறுப்பு, இது அன்பிற்கு மாறுபட்டது. பெரும்பாலான இயக்கங்கள் வெறுப்பால் தூண்டப்படுகின்றன, சபை மாத்திரமே கிறிஸ்துவின் அன்பினால் இயங்குகிறது. ஆண்டியோகஸ் அனைவரையும் வெறுத்தான் மற்றும் கொடுமையில் ஈடுபட்டான்.
2) கொடுமை:
பிறரை வதைப்பதும், கொலை செய்வதும், சித்திரவதை செய்வதும் அவனுடைய குணமாகவும் மற்றும் ஆட்சி முறையாகவும் இருந்தது.
3) நிந்தனைகள்:
தேவனுக்கு எதிராகப் பேசி, காலங்களையும் நேரங்களையும் மாற்ற முயல்கின்றனர். இன்றும் கூட, பல அரசியல் தலைவர்கள் தங்களை உயர்த்தி மற்றவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் தூஷிக்கிறார்கள்.
4) தடைசெய்யப்பட்ட யூத மதம்:
ஆண்டியோகஸ் இஸ்ரவேலில் யூத மதத்தை தடை செய்தான்; அந்திக்கிறிஸ்து தனது லட்சியத்துடன் பொருந்தாத கிறிஸ்தவ நம்பிக்கையை உலகளவில் தடை செய்வான்.
5) தடை செய்யப்பட்ட வேதம்:
ஆண்டியோகஸ் தோராவை வாசிப்பதை தடை செய்தான். அந்திக்கிறிஸ்துவும் வேதத்திற்கு எதிரானவன்; அவன் வேதாகமத்தை தடை செய்வான்; தேவனுடைய வார்த்தைக்கு பஞ்சம் ஏற்படும்.
6) தடை செய்யப்பட்ட விருத்தசேதனம்:
யூதர்கள் யெகோவாவுடன் உடன்படிக்கை செய்த உறவு விருத்தசேதனத்தின் அடையாளத்தால் வெளிப்படுத்தப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த அடையாளமும் அதாவது ஞானஸ்நானம் அல்லது சிலுவை தடைசெய்யப்படும்.
7) தடை செய்யப்பட்ட கஸ்ருத்:
மோசே நியாயப்பிரமாண உணவு முறைகளை யூதர்கள் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை. அந்திக்கிறிஸ்து அனைத்து விசுவாசிகளின் கூட்டங்களையும், கொண்டாட்டங்களையும் மற்றும் எந்த வகையான ஐக்கியங்களையும் தடை செய்வான்.
அந்திக்கிறிஸ்து ஆவி வேலை செய்வதை என்னால் பகுத்தறிய முடிகிறதா? (1 யோவான் 2:18)
Author: Rev. Dr. J .N. மனோகரன்