ஏதாவது இலக்கை நோக்கி நகரும் போது, ஒரு பதட்டம் ஏற்படுகிறது. நாம் இலக்கை அடையும் போது வழியில் உள்ள மைல்கற்களின் எண்ணிக்கை குறைகிறது, அதுமாத்திரமல்ல மறைந்தும் விடுகிறது. வாழ்க்கையை கல்லறையை நோக்கிய பயணம் (முட்டுச்சந்து) என்று எண்ணுபவர்கள் பலர் உள்ளனர். இருப்பினும், கிறிஸ்தவர்கள் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். வாழ்க்கை என்பது பரலோகத்தை நோக்கிய யாத்திரை. வாழ்க்கை என்பது ஆண்டவரும், இரட்சகரும் மற்றும் சிருஷ்டிகரோடும் என்றென்றும் வாழ்வதற்கான ஆயத்தமாகும்.
ஒரு வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்க வேண்டும், பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏனோக் ஒரு சிறந்த உதாரணம். "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்" (ஆதியாகமம் 5:24). இது வாழ்க்கையின் அழகான சுருக்கம். வாழ்க்கைப் பயணத்தில் நாம் தேவனோடு நடந்தால், அவரது நித்திய இல்லத்திற்கு அவராலே அழைத்துச் செல்லப்படுவோம்.
உங்கள் வீட்டை ஒழுங்குபடுத்துங்கள்:
எசேக்கியா ராஜாவிடம் கர்த்தர் ஏசாயா மூலம் பேசினார். அவருடைய மரணம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, ‘அவர் வீட்டுக் காரியத்தை ஒழுங்குப்படுத்த கட்டளையிடப்பட்டார் (2 இராஜாக்கள் 20:1). ஆனால் அதற்கு எசேக்கியா விருப்பப்படாததினால், மேலும் பதினைந்து வருடங்கள் தனது வாழ்நாளை தேவனிடம் மன்றாடி நீட்டித்துக் கொண்டார், துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அவர் யூதாவின் மிகவும் பொல்லாத ராஜாவான மனாசேயைப் பெற்றெடுத்தார். நாம் இவ்வுலகை விட்டு வெளியேறும்போது, பல விஷயங்களை நாம் விட்டுவிட வேண்டும் அல்லது மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கடைசி நிமிடங்கள் வரை தாமதிக்காமல், கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
உங்கள் தேவனை சந்திக்க தயாராகுங்கள்:
ஆமோஸ் இஸ்ரவேல் தேசத்திடம் தேவனை சந்திக்க ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தினார் (ஆமோஸ் 4:12). ஆம், நித்தியத்தில் அவருடன் வசிப்பதற்காக தேவனைச் சந்திப்பதற்கு ஆயத்தமாகுதல் மிக அவசியம். இன்னும் சொல்லப் போனால், தேவனும் நமக்காக ஒரு இடத்தையும் ஆயத்தம் பண்ணுகிறார் அல்லவா (யோவான் 14:1).
முன்னுரிமை:
ஒரு ஓட்டப்பந்தய வீரர் நீண்ட தூர ஓட்டத்தில் இறுதிக் கோட்டை நெருங்கும் போது கடைசி குறுகிய தூரத்தை வேகமாக ஓடி கடக்கிறார் அல்லவா. வாழ்க்கையில், உடல் செயல்பாடுகளின் அடிப்படையில் வேகமாக இயங்குவது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆயினும்கூட, தேவனின் கட்டளையையும் மற்றும் தேவராஜ்ய பணிகளையும் நிறைவேற்ற ஆவிக்குரிய, ஊழியம் மற்றும் அறிவுசார் வளங்களைப் பயன்படுத்துவது நல்லது.
நோக்கமான ஜெபம்:
சரீர மற்றும் வெளிப்புற செயல்பாடுகளுக்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், அதிக ஜெபங்களைச் செய்யலாம்.
கிருபையுடனான முதுமையைப் பெறுவது ஒரு கிறிஸ்தவ நற்பண்பு மற்றும் மதிப்பு.
எனது நித்திய இல்லத்திற்காக நான் கிருபையுடனும் மகிழ்ச்சியோடும் காத்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்