தொடர் - 1
காலைக் கதிரவன் மெல்ல மெல்ல எழுந்தான். கீழ் வானம் செம்பொன் நிறமாகியது. செங்கதிரோன் வரவை புல்லினங்கள் . பாடிப்பறந்தன. அந்த நீண்ட சாலையைக் கிழித்துக்கொண்டு நீந்தி வந்த அந்தப் பேருந்து சாலையூர் என்ற பெயர்ப் பலகையையும் கடந்து சிறிது தாரம் சென்று, நின்றது. கீழே இறங்கினார் ஜெபசிங். காலையிளந்தென்றல் சில்லென்று வீசியது.
“சார்! இன்னும் 15 நிமிடத்தில் நீங்க போக வேண்டிய பஸ் வந்துவிடும். இல்லையின்னா இதே ரோடுதான் சார் (நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையை சுட்டிக்காட்டினர்) நேராய் போங்க. மூணு மைல் நடந்தா நீங்க போக வேண்டிய “வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி” வந்திடும் சார். அதுதான் பசுஞ்சோலை! ரைட்” குரல் கொடுத்தார் பேருந்து நடத்துநர். பஸ் ஓசை எழுப்பியபடி பறந்தது. எங்கு பார்த்தாலும் சூரியகாந்தி பயிரிட்டிருந்தனர். பச்சைநிற இலைகளும், மஞ்சள் வண்ணப் பூக்களும் மிக அழகாகக் காட்சியளித்தன. கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கருகில் அமைந்திருந்த அந்த இடத்திற்கு பசுஞ்சோலை என்ற பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. உயர்ந்து நின்ற மலை முகட்டில் வெண்மேகங்கள் தவழ்ந்து சென்றன. ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் வெள்ளை வெளேரென வீழ்ந்து கொண்டிருந்தது. மெல்லிய புன்முறுவல் ஜெபசிங்கின் வதனத்தில் படர்ந்தது. ஓர் அழகிய கவிதை அவர் நெஞ்சத்தில் எழுந்தது.
“தலை நிமிர்ந்த குன்றிலே
தவழ்ந்து வரும் முகிலினம் -
தடம் புரண்டு உருண்டதுவோ
மடமடவென்று விழுமருவி!
நீல வண்ண வானமதில்
நீந்தி வரும் கதிரவனின்
பொன்னிறக் கரந் தீண்ட
புத்துலக வாழ்வு கண்ட
பச்சைப் பட்டுடுத்த
பாவையவள் நிலமகளும்
மஞ்சள் முகங் காட்டி
மயங்கிடவே சிரிக்கின்றாள்!
எங்கே இறைவன்?
என்று சிலர் கேட்கின்றார்
இங்கே இறைவன்!
என்று யான் செப்புகின்றேன்!".
ஏட்டிலே கவிதை வடித்தவர் “இவ்வழகிய காட்சிகளைக் கண்டு கொண்டே நடந்துவிடுவோம்' என தீர்மானித்தவராய் நடக்கலானார்.
தனது இடது கரத்திலே ஓலைச் சுவடியையும், தன் வலக்கரத்திலே எழுத்தாணியையும் பிடித்தபடி ஜடாமுடியும் மீசையும் தாடியுமாய் அமர்ந்திருந்த வள்ளுவர் சிலையைத் தாங்கியபடி பள்ளிக்கட்டிடம் நிமிர்ந்து நின்றது. “வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி” என்ற வளைவின் இருபுறமும் வண்ணக் காகித மலர்கள் கொண்ட கொடிகள் பூத்துக் குலுங்கின. வளைவினுள் நுழைந்து நடந்தார் ஜெபசிங். நிமிர்ந்த நடையுடன், ஒளிவீசும் விழிகளுடன் தும்பை மலா் போன்ற வெண்ணிற வேஷ்டியும், வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்து நடந்து வந்த ஜெபசிங்கை மாணவ மாணவியர் குழாம் பார்த்தது! தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டது. பணிந்து போகும் பண்பு இருப்பினும் எதிலும் நேர்மையுடன். நடப்பேன் என அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது போல் வளைந்த கேசங்கள் நேர்வகிடு எடுத்து வாரிவிடப்பட்டிருந்தன.
நடைபாதையின் இருபுறமும் குட்டைத் தென்னை பயிரிடப்பட்டிருந்தது. நடைபாதையின் வலதுபுறம் தோட்டம் காணப்பட்டது. பலவகை மரங்களும், செடிகளும் செழிப்பாக வளர்ந்திருந்தன. இடதுபுறம் வாகனங்கள் நிறுத்துமிடம் காணப்பட்டது. தொடர்ந்து நடந்து படிகளில் ஏறினார். “பார்வையாளர்கள்' என்ற பெயர்ப்பலகை தாங்கிய அறையினுள் நுழைந்தார். நவநாகரீக நங்கை ஒருத்தியும், இளைஞர்கள் இருவரும் வீற்றிருந்தனர்.
அவர்களது உரையாடலிலிருந்து தன்னைப் போல் அவர்களும் தமிழாசிரியர் தேர்வுக்கு வந்திருப்பதாக அறிந்தார். இருவரில் ஒருவன் தன் சட்டைப்பையில் நீட்டிக்கொண்டிருந்த கவரை அடிக்கடித் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிபாரிசு கடிதம் வாங்கி வந்திருக்குமிடம் மிகப்பெரிய இடமானதால் தனக்கு வேலை கிடைப்பது அதிக நிச்சயம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்தவனோ ,தனது முதல் தரமான மதிப்பெண்களையும், போட்டிகளில் தான் பெற்ற பரிசுகளையும் கூறி தனக்குக் கிடைப்பதே நீதி என பேசிக் கொண்டிருந்தான். நவநாகரீக நங்கை அலட்சியமான புன்சிரிப்பை உதிர்த்தாள். தன் அழகிற்கு முன் அவர்கள் தகுதி குப்பை. தனக்குத்தான் வேலை கிடைக்கும் என்று கூறாமல் கூறியது அவளது அலட்சியப் பார்வை. மணியோசை ஒலித்தது.
இறை வணக்கத்திற்கு மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் அணி வகுத்தனர். ஜெபசிங் அறையை விட்டு வெளியே வந்து கவனிக்கலானார். இறைவணக்கம் பாடினர். திருக்குறளின்
முதல் அதிகாரம் சொல்லப்பட்டது. உறுதிமொழி எடுத்தபின் மாணவ மாணவியர் கலைந்தனர். இதுவரை கிறிஸ்தவ பள்ளி, கல்லூரி என்று பயின்று வந்த ஜெபசிங் திகைத்தார்.
எம்பெருமான் இயேசுவின் அருள் வேண்டி பாமாலை பாடி, பின் அன்றைய தினத்தை இறைவன் பாதத்தில் அர்ப்பணிக்க ஜெபித்து, பின் உறுதிமொழி எடுத்தபின் வகுப்பறைக்குச் சென்றே பழக்கப்பட்ட அவருக்கு, இத்தகைய இறைவணக்கம் வெறுமையாகத் தோன்றியது. “நேர்முகத் தேர்வில் கூட கலந்துகொள்ளாமல் ஊருக்குப் போய் விடலாம்!” என எண்ணினார்
ஜெபசிங். அவர் உள்மனம் அவரோடு வாதாடியது.
ஜெபா! வறுமை, விரும்பாத சடங்காச்சாரம், மூடநம்பிக்கை இவற்றில் மூழ்கிக் கிடந்த நம் பாரதத்தைக் கண்டு பயந்து, வெறுத்து மேல்நாட்டு மிஷனெரிகள் திரும்பி ஓடியிருந்தால் இந்தியா இயேசுவை அறிந்திருக்குமா? நீ இங்கிருப்பது இயேசுவின் சித்தமென்றால் அதைப் புறக்கணிக்க உனக்கென்ன உரிமை? “கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது” என்று வேதம் கூறுவதை மறந்து விட்டாயா?
இதன் தொடர்ச்சி நேர்முகத் தேர்வு என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.