பல நேரங்களில், பரிசுத்த ஆவியானவர் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக, பலர் ஆவி என்ற சொல்லைப் புரிந்து கொள்ளவில்லை, எனவே கண்ணுக்குத் தெரியாத ஆவிக்குரிய மண்டலத்தைப் பற்றிய குழப்பமான புரிதல் உள்ளது. லூசிபர் ஒரு வீழ்ந்த பிரதான தூதனாகிய சாத்தான். அவருடன் சில தேவதூதர்களும் சேர்ந்து பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விழுந்த தூதர்கள் தீய ஆவிகள் அல்லது பிசாசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சாத்தான்:
ஏதேன் தோட்டத்தில், சாத்தான் ஒரு பாம்பாக மாறுவேடமிட்டான் (ஆதியாகமம் 3:14-15). பிசாசு பிடித்த மனிதன் குணமடைந்தபோது, அந்த அசுத்த ஆவிகள் பன்றிகளுக்குள் நுழைய ஆண்டவரிடம் அனுமதி கேட்டன, இரண்டாயிரம் பன்றிகள் கடலில் அமிழ்ந்து மாண்டன (மாற்கு 5:13).
பூதம்:
மத்திய கிழக்கு உலகின் பல கதைகளில், பூதம் (Jinn) பற்றி ஒரு கட்டுக்கதை உண்டு, அதாவது பூதத்தைப் பிடித்து சில மந்திரவாதிகள் ஒரு பாட்டிலில் அடைத்து விடுவார்கள். அந்த ஜின்களை யாரோ ஒருவர் விடுவித்தால் அந்த விடுவித்தவருக்கு அடிமையாகிவிடும், அதற்கு பின்பு அந்த புதிய எஜமானருக்கு விருப்பப்பட்ட எல்லா பொருட்களையும் பெறுவதற்கும், தன் எஜமானரின் எதிரிகளுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் மகத்தான சக்தி இருப்பதாக கூறப்பட்டது.
கண்கட்டி வித்தை:
ஜோசியம் அல்லது சூனியம் செய்பவர்கள் எலுமிச்சம்பழம் அல்லது துடைப்பம் போன்றவற்றால் அசுத்த ஆவிகளை சிறைபிடிக்கலாம் என்பதாக நம்புகிறார்கள்.
தவறான விளக்கம்:
இந்த கலாச்சார புரிதலுடன், பலர் வேதாகமத்தைப் படித்து பரிசுத்த ஆவியைப் பற்றி விளக்குகிறார்கள். இன்றைய பிரசங்கத்தில் பல மோசமான உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, சிம்சோனின் முடி, மோசேயின் தடி, தாவீதின் கவண் முதலியன, பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கின்றன என்பது அபத்தமானது.
பரிசுத்த ஆவி:
திரித்துவத்தின் மூன்றாவது நபர் பரிசுத்த ஆவியானவர், மேலும் தேவனின் அனைத்து பண்புகளையும் கொண்டவர்; பரிசுத்தம், நீதி, இறையாண்மை அதிகாரம், சர்வவல்லமை... போன்றவை. அவருடைய மகத்துவம், மாட்சிமையைப் பற்றி தெரியாமல், பக்குவமற்ற விசுவாசிகள் அவரை இழிவுபடுத்துகிறார்கள் மற்றும் விழுந்த தேவ தூதர்களைப் போல கருதுகிறார்கள். ஒரு நபர் தானே விரும்பி அழைத்தால் ஒழிய மற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த நபரிடம் வாசம் செய்வார், இல்லையென்றால் ஒருபோதும் அவர் அழையா விருந்தாளியாக வரவே மாட்டார். பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் பொருள் அல்லது விலங்குகளை உடைமையாக்க மாட்டார்.
சமம் இல்லை:
சாத்தான் ஒரு படைக்கப்பட்ட உயிரினம். பிதாவாகிய தேவன், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் சுயமாக இருக்கும் கடவுள். அவர்கள் அனைத்து உயிரினங்களையும் பொருட்களையும் உருவாக்குகிறார்கள். எனவே, சாத்தானை தேவனுடன் அல்லது அசுத்த ஆவியை பரிசுத்த ஆவியுடன் ஒப்பிடுவது முற்றிலும் முட்டாள்தனம்.
நிந்தனை:
"ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை" (மத்தேயு 12:31). பரிசுத்த ஆவிக்கு எதிரான தூஷணம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கர்த்தராகிய இயேசு எச்சரிப்பதை மறவாதிருப்போம்.
நான் பரிசுத்தத்துடனும் பயபக்தியுடனும் திரியேக தேவனை ஆராதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்