அன்பான தேவன் தம் மக்கள் மத்தியில் மகிழ்ந்து பாடுகிறார். யூதாவில் யோசியாவின் ஆட்சியின் போது தீர்க்கதரிசி செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தார் மற்றும் இந்த பெரிய வாக்குறுதியை வழங்கினார். பிரதானஆசாரியனான இல்க்கியா ஆலயத்தில் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்தான். ராஜா யோசியாவும் தேசமும் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினார்கள் (2 இராஜாக்கள் 22:19). சிலைகளை அகற்றுவது மற்றும் பஸ்காவைக் கொண்டாடுவது உட்பட பல மாற்றங்களைக் கொண்டு வந்தான் யோசியா ராஜா (2 இராஜாக்கள் 23:22). "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17). இந்த வாக்குத்தத்தம் தேவனால் மீட்கப்பட்ட மக்கள் அனைவருக்குமானது.
1) வலிமையானவர்:
தேவன் இறையாண்மையுள்ளவர் மற்றும் வலிமைமிக்க போர்வீரர், ஆம் அவர் தனது மக்களை ஆவிக்குரிய ரீதியிலும், உணர்வுபூர்வமாகவும், மனதளவிலும் மற்றும் சரீர ரீதியிலும் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறார். தேவனுக்கு எதிராக எழுவதற்கு எந்த சக்தியோ அதிகாரமோ இல்லை. அவர் தம் மக்களுக்குப் பலமான அடைக்கலம்.
2) உடனிருப்பவர்:
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் வசிப்பதில் மகிழ்ச்சியடைகிறார் (2 கொரிந்தியர் 6:16). அவர் தொலைதூரத்தில் இருக்கும் கடவுள் அல்ல, எப்போதும் உதவி செய்யும் வகையில் உடனிருப்பவர்.
3) இரட்சகர்:
தம் ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கும் தேவன் அவர் ஒருவரே (மத்தேயு 1:21). இரட்சிப்புக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தைத் தவிர வேறு வழியோ நாமமோ இல்லை.
4) மகிழ்ச்சியடைபவர்:
பாவி மனந்திரும்பும்போது, தேவதூதர்களுடன் சேர்ந்து தேவனும் சந்தோஷமடைகிறார் (லூக்கா 15:7). ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள் (நீதிமொழிகள் 15:20).
5) சமாதானமளிக்கிறவர்:
தேவன் தனது மக்களுக்கு சமதானத்தைக் கொடுக்கிறார்; அதாவது நல்ல ஓய்வையும் அமைதியையும் அளிக்கிறார். மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது ஆரோக்கியமான சமாதானம்.
6) அன்பானவர்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்ததின் மூலமாக தேவ அன்பு வெளிப்படுத்தப்பட்டது, தெரிவிக்கப்பட்டது மற்றும் தெளிவாக காண்பிக்கப்பட்டது.
7) களிகூர்கிறவர்:
தேவன் மகிழ்ந்து பாடுகிறார், களிகூறுகிறார் என்றறிவது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. பிதாவாகிய தேவன், குமாரன், பரிசுத்த ஆவியானவர் தேவதூதர்களுடன் சேர்ந்து பாடி மகிழ்கிறார் மற்றும் தேவ பிள்ளைகளை அவர் மீட்டெடுக்கிறார். தேவனின் பாடலுக்கு நாம் ஒரு காரணமாக அல்லது கருப்பொருளாக இருப்பது என்பது அற்புதமானது. தேவன் பாடினால் நாமும் பாட வேண்டும்.
ஆண்டவரின் இன்பப் பாடல்களை நான் கேட்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்