மீள் தன்மையுடைய நீதிமான்!

தாக்குப்பிடித்து (Resilience) நிற்பது என்பது நெருக்கடிகளை தைரியமாக, மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் எதிர்கொள்ளும் திறன்;  பின்னர் நெருக்கடிக்கு முந்தைய சூழலுக்கு உடனடியாக மீண்டும் திரும்புவதை மீண்டெழுவது அல்லது மீளாற்றல் எனலாம்.  விபத்துகள், நெருக்கடிகள், வியாதிகள், விமர்சனங்கள் அல்லது துக்கங்களால் பலர் தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அவர்கள் தங்கள் முழு திறனையோ அல்லது நெருக்கடிக்கு முந்தைய நிலையையோ அடைய முயற்சிப்பதில்லை, அதிலேயே துவண்டு விடுகிறார்கள். இருப்பினும், நெருக்கடிக்குப் பிறகும் சிறப்பாகச் செயல்படும் சிலர் இருக்கதான் செய்கின்றனர்.

மோசே:
அவர் எகிப்தை விட்டு ஓடிப்போய் நாற்பது வருடங்கள் மீதியானின் வனாந்தரத்தில் அகதியாக மறைந்திருந்தார் (யாத்திராகமம் 2:11-22). அவருடைய கனவுகள், கல்வி, பயிற்சி, திறமைகள், வரங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் வெறுமையாக இருந்தன.  பின்னர் கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று மோசேக்கு தரிசனமானார் (யாத்திராகமம் 3 & 4). அவரை தலைவனாக நியமித்து, இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படி எகிப்து தேசத்திற்கே அவரைத் திருப்பி அனுப்பினார். 

தாவீது:
பெரிய, பிரபலமான ராஜா பத்சேபாளோடு விபச்சாரம் செய்தார்.  எலும்புகள் நொறுங்கிப் போனது போல குற்ற உணர்வு அடைந்தார் (சங்கீதம் 51:8). அந்த சம்பவத்திற்கு பின்பு நாத்தான் தாவீதை எதிர்கொண்டபோது, தாவீது உடனடியாக மன்னிப்பு கேட்டார் (2 சாமுவேல் 12). ஆம், தன் பிள்ளையை சாக கொடுக்க வேண்டிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதற்கு பின்னர், தாவீது மற்றும் பத்சேபாளின் மகனான சாலமோன் ராஜாவானான் (1 இராஜாக்கள் 1:28-53). தாவீதின் ஒப்புதல் வாக்குமூலமான சங்கீதம் 51, வரலாறு முழுவதும், இன்று வரை கோடிக்கணக்கானோர் மன்னிப்பு கேட்க தூண்டியுள்ளது‌ மற்றும் உதவியுள்ளது எனலாம். 

பவுல்:
யூதர்கள் சதி செய்து பவுலைக் கல்லெறிந்தனர், பவுல் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே விட்டுவிட்டனர்.  பின்னர், பவுல் எழுந்து பயணம் செய்து ஊழியம் செய்தார் (அப்போஸ்தலர் 14:19-21). ஆம், பவுலின் வைராக்கியத்தை கல்லெறிவதாலோ அல்லது எந்த விதமான துன்புறுத்துவதாலும் தணிக்க முடியவில்லை.

பேதுரு:
கர்த்தராகிய இயேசு, சேவல் இரண்டு முறை கூவும் முன்  பேதுரு தன்னை மூன்று முறை மறுதலிப்பான் என அவனுக்கு நேரப்போகும் சோதனையைப் பற்றி எச்சரித்தார்.    பேதுரு கதறி அழுது எருசலேமை விட்டு வெளியேறினான்.  அப்படி பேதுரு கலிலேயாவில் இருந்தபோது, கர்த்தரால் அழைக்கப்பட்டு சீஷராக ​​எருசலேமுக்குத் திரும்பினார்.  அவர் மேல் அறையில் மற்றவர்களுடன் தங்கியிருந்தார் மற்றும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார். அங்கு அவர் பிரசங்கியாராக நின்று தீர்க்கதரிசியாகிய யோவேலினால் கூறப்பட்டபடி  திரண்டிருந்த மக்களுக்கு பிரசங்கித்தார்.  மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 2).‌ ஆண்டவரை மறுதலித்தவர் சுமார் ஐம்பது நாட்களுக்குள்ளாகவே, மீண்டும் தலைமைக்குத் திரும்புகிறார்.

நோய், எதிர்ப்பு, துன்புறுத்தல், உபத்திரவங்கள், தடைகள், இன்னல்கள், சோதனைகள் மற்றும் பேரழிவுகள் ஆகியவை ஒரு நீதிமானை தடுத்து நிறுத்த முடியாது. "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்" (நீதிமொழிகள் 24:16).  

*நான் இடறுண்டு கிடக்கிறேனா அல்லது திரும்பவும் எழுந்திருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download