ஃபிரடெரிக் பெர்ட் 12 வருடங்கள் கூகுளில், கலிபோர்னியாவில் அதன் தொடக்க தலைமை கண்டுபிடிப்பு பிரகடனப்படுத்துபவராகப் பணியாற்றினார். 'அடுத்து என்ன இருக்கிறது: எதிர்காலத்தை எப்படி வாழ வேண்டும்' என்பதான ஒரு புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ அவர் மூன்று முக்கிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார், வேறுவிதமாகக் கூறினால், எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதற்கான பாடங்களை வழங்குகிறார். சுவாரஸ்யமாக, சீஷர்கள் அல்லது தேவனைப் பின்பற்றுபவர்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது, மேலும் அவருடைய மூன்று பாடங்களும் வேதாகமத்தோடு நெருங்கிய தொடர்புடையவை.
'ஆம்' மனநிலையைத் தழுவ வேண்டும்:
பெரும்பாலான நேரங்களில் மக்கள் எதிர்மறையாக, 'இல்லை, ஆனால்' என்பதான மனப்பான்மையுடன் சிந்திக்கிறார்கள் என்று அவர் எழுதுகிறார். அவர்கள் அதை 'ஆம், மற்றும்' என்பதான அணுகுமுறையாக மாற்ற வேண்டும். சீஷர்கள் எப்போதும் நித்திய கண்ணோட்டத்துடன் செயல்படுவது மிக அவசியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில், தேவனின் அனைத்து வாக்குத்தத்தங்களும் 'ஆம் என்றும் ஆமென்' என்றல்லவா இருக்கிறது (1 கொரிந்தியர் 1:20). கிறிஸ்தவத்தின் நம்பிக்கை இரட்சிப்பின் கன்மலையில் உள்ளது, ஆம், மரணத்தை தோற்கடித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இரட்சகராகிய கிறிஸ்துவே அந்த கன்மலை.
உங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்:
ஒரு நபர் தனது சொந்த எதிர்காலத்தைக் குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். ஒவ்வொரு நபரும் தனது எதிர்காலத்தை மனதிரையில் காண வேண்டும் மற்றும் இலக்கை அடைய சரியான தெரிவுகளை எடுக்க வேண்டும் என்பதாக வேதாகமம் போதிக்கிறது, தேவன் ஒவ்வொரு நபருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். தேவனிடமிருந்து யோசேப்பிற்கு ஒரு கனவு கிடைத்தது, தேவன் அதை நிஜமாக்கினார். ஆபிரகாமும் சாராளும் பிள்ளைகள் இல்லாமல் இருந்தனர்; ஆனால் அவர்கள் தேசங்களின் பிதாவாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது (ஆதியாகமம் 12:1-2). அதேபோல் சீமோன் பேதுருவை அழைத்து, நீ புல்லைப் போல இருக்கிறாய், பாறையைப் போல ஆவாய் என்றார் (யோவான் 1:42). தேவன் தரிசனத்தைக் கொடுத்து, அதை நோக்கி அவர்களை வழிநடத்துகிறார். வாழ்க்கையில் தேவனின் திட்டத்தை அறிவது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது.
தின தியானம்:
தியானம் உங்களுக்குள் செல்கிறது, இது ஒரு நபரை புதிய கருத்துக்களுக்கு அல்லது புதிய யோசனைகளுக்கு உற்சாகப்படுத்தும் என்று ஆசிரியர் கூறுகிறார். தியானம் ஒரு நபரை ஆசீர்வதிப்பதாகவும், நீரோடைகளின் ஓரத்தில் நடப்பட்ட மரம் போல பலனளிக்கவும், வெற்றியடையச் செய்யவும் வேதாகமம் கற்பிக்கிறது (சங்கீதம் 1:1-3). கிறிஸ்தவ ஆவிக்குரிய ஜீவியம் மனதை ஈடுபாட்டோடு வைத்திருக்க உதவுகிறது. இது மனதை வெறுமையாக்குவது அல்ல, மாறாக மனதை, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு புதுப்பிக்கிறது.
எதற்கும் தயாரான கிறிஸ்தவர்கள்:
மனந்திரும்பி, தங்கள் பாவங்களை விட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராகப் ஏற்றுக் கொள்கிறவர்கள், மறுபடியும் பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தேவனின் இரண்டாம் வருகையை பயமற்றவர்களாக எதிர்நோக்குகிறார்கள், இது ஆசீர்வதமான நம்பிக்கை என்றே சொல்லலாம்.
நான் எப்பொழுதும் ஆயத்தமான மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் கிறிஸ்தவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்