அக்டோபர் 28 அன்று, பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் குர்குரே மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளைத் திருடியதாகக் கூறி நான்கு சிறுவர்கள் அடித்துத் தாக்கப்பட்டு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டனர் (என்டிடிவி அக்டோபர் 31, 2023).
ஒரு வரலாற்று நிகழ்வு
பிரித்தானியாவில், கிராமத்தில் உள்ள கடையில் ரொட்டியை ஒரு சிறுபிள்ளை திருடியது. போலீசார் அக்குழந்தையை பிடித்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி குழப்பமடைந்தார். முதலில் , இப்படிப்பட்ட பொல்லாத இடத்தில் வாழ்வதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்றார். இரண்டாவதாக , ஒரு குழந்தையை பட்டினி கிடக்க அனுமதித்த கிராமம் குற்றம் செய்தது என்றார். மூன்றாவது , அக்குழந்தைக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நான்காவது , நீதிமன்றத்தில் இருக்கும் அனைவரும் இப்போது நன்கொடை அளிக்க வேண்டும், பணம் அபராதமாக செலுத்தப்படும், அதிலுள்ள மீதி அப்பிள்ளையின் மறுவாழ்வுக்காக வழங்கப்படும்.
குழந்தைக்கு பயிற்சி கொடு
குழந்தைகளை சரியான முறையில் பயிற்றுவிக்கும்படி பெற்றோர்களுக்கும் சபைகளுக்கும் மற்றும் பள்ளிகள் போன்ற நிறுவனங்களுக்கும் தேவன் கட்டளையிட்டுள்ளார். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6). திருடுவது பாவம் என் எடுத்துரைக்கும் பத்துக் கட்டளைகளை அவர்களுக்குக் கற்பிப்பது மிக முக்கியம் (யாத்திராகமம் 20:15). பல குடும்பங்களில் பெற்றோர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்பையும் புறக்கணிப்பதைப் பார்ப்பது மனவருத்தத்தை அளிக்கிறது. சில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. பல சமயங்களில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால் அல்லது ஆர்வத்துடன் கற்காததால் பள்ளியும் தோற்றுப்போகிறது.
தர்மம் எடுக்கும் குழந்தைகள்
“குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பாரில்லை” (புலம்பல் 4:4). இது மிகவும் பரிதாபகரமானது, பிள்ளைகள் பசிக்கும் போது என்ன செய்வது திருடுவதை தெரிந்தெடுக்கிறார்கள்.
கலாச்சாரம்
உள்ளூர் சமூகத்தில் குழந்தைகளை பராமரிக்காத இடம் கொடுமையானது என்று நீதிபதி தெளிவாக கூறினார். ஏழைகள் மற்றும் தேவையில் உள்ளோர் மீதும் அக்கறை காட்டாத சமூகம் குற்றமுள்ள சமூகமாகும். அனாதைகள், ஆதரவற்றவர்கள், பெற்றோர் அன்பு மற்றும் பொருள் தேவைகள் இல்லாததால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
சபையின் முன்முயற்சிகள்
ஜார்ஜ் முல்லர் போன்ற தேவ மனிதர்கள், நோய்நொடியால் மரித்த பெற்றோரால் அல்லது கைவிடப்பட்ட அல்லது போர் அல்லது விபத்துக்கள் அல்லது இயற்கை பேரழிவுகளால் அநாதைகளான குழந்தைகளை கவனித்துக் கொண்டனர். உலகெங்கிலும் உள்ள பல குழந்தைகள் இல்லங்கள் அத்தகைய குழந்தைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியது. இன்று இத்தகைய நிறுவனங்கள் பல சட்டங்களால் இயங்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது, கிறிஸ்துவின் அன்பை உலகிற்குக் காட்ட, அத்தகைய குழந்தைகளைத் தத்தெடுக்க சபையானது கிறிஸ்தவ குடும்பங்களைத் திரட்ட வேண்டும்.
எஸ்தர் போன்ற குழந்தைகளை தத்தெடுக்க நான் மொர்தெகாயைப் போல் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்