சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கிறிஸ்தவ தொழிலாளி தனது சொந்த ஊரில் உள்ள ஸ்டேடியத்தில் பிரீமியர் லீக் போட்டியைப் பார்ப்பதற்காக நிதி கேட்டு அனுப்பியிருந்தார். இதுபோன்ற பொழுதுபோக்குக்கு உரிமை உண்டு என்று அவர் முறையிட்டார். ஒரு கிறிஸ்தவர் செய்யும் எந்தவொரு செயலுக்கும் அல்லது நடந்து கொள்ளும் விதமும் பின்விளைவுகளையும் எதிர்வினைகளையும் கொண்டுள்ளது. எனவே, எல்லா விசுவாசிகளும் தேவனின் தராதரங்களால் தீர்மானிக்கப்படுவார்கள். இந்த செயல் தேவனை கனப்படுத்தக் கூடியதா, அர்த்தமுள்ளதா மற்றும் நோக்கமுள்ளதா என்பதை அறிய, மூன்று வேதாகமக் கொள்கைகளைப் பயன்படுத்தலாம்.
சீஷத்துவக் கொள்கை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, கர்த்தரால் கற்பிக்கப்படுபவர்களுக்கு சில முன்னுரிமைகள் உள்ளன. தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே முதலில் நீங்கள் நாடவேண்டும் (மத்தேயு 6:33). போட்டிக்குச் செல்வது தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துவதோடு, கொடுக்கப்பட்ட சூழலில் அவருடைய நீதியை உயர்த்தும் என்றால், அது செய்யப்படலாம். சிலர் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக இதுபோன்ற போட்டிகளின் ரசிகர்களிடையே நண்பர்களை உருவாக்குகிறார்கள். ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையை தேவ ராஜ்யத்திலிருந்தும் நீதியிலிருந்தும் துண்டிக்க முடியாது.
உக்கிராணத்துவக் கொள்கை:
அனைத்து சீஷர்களும் தேவன் கொடுத்த அனைத்து வளங்கள், நேரம் மற்றும் வாய்ப்புகளின் உக்கிராணக்காரர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் தேவக் கிருபையின் வரங்கள், சீஷர்கள் உரிமையாளர்கள் அல்ல, ஆனால் அவற்றைப் பயன்படுத்த அல்லது நிர்வகிக்க அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மறக்க கூடாது. ஒரு விளையாட்டு நிகழ்வு போன்ற ஒரு சிறிய விஷயத்திற்கு பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது நல்ல சீஷனுக்கான காரியமா? தாலந்துகளின் உவமையில் அனைத்து சீஷர்களும் ஐந்து தாலந்து கொண்ட நபர் போலவும் மற்றும் இரண்டு தாலந்து கொண்ட நபரைப் போலவும் முதலீடு செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறது. உக்கிராணக்காரர்கள் வளங்களை மேம்படுத்தவும், மூலோபாய ரீதியாகவும், உண்மையாகவும், ஞானமாகவும் பயன்படுத்த வேண்டும்.
அழைப்புக் கொள்கை:
தேவன் தம்முடைய பிள்ளைகளை உலகத்தில் சாட்சிகளாகவும், நீதியின் கருவிகளாகவும், தூதர்களாகவும் இருக்க அழைத்துள்ளார் (அப்போஸ்தலர் 1:8; ரோமர் 6:13; 2 கொரிந்தியர் 5:20). சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தியை கிருமி நீக்கம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் இருக்கும் கத்தியை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஆக, தேவ ஊழியர், அவர் நீதியின் கருவியாக தேவனால் பயன்படுத்தப்படுகிறார். ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு குறிப்பிட்ட சூழலில் வைக்கப்படுகிறார்கள். எஸ்தரைப் போலவே, அவர்கள் ‘இப்படிப்பட்ட காலத்தில்’ ஊழியம் செய்ய அழைக்கப்படுகிறார்கள் (எஸ்தர் 4:14).
வேதாகமக் கோட்பாடுகளின் அடிப்படையில் நான் முடிவுகளை எடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்