குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் சமாரியாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையில் வழக்கமாக குடியிருக்கும் பகுதிகளில் வசித்து வந்தனர். ஆண்டவராகிய இயேசு அந்தப் பகுதி வழியாகச் சென்றபோது, அவர்கள் பிரமாணத்தின்படி தூரமாக நின்று கொண்டு இயேசுவிடம் இரக்கத்திற்காக மன்றாடினார்கள். அவர்களை அவர் பார்த்து; நீங்கள்போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அவர் சொன்னப்படி செய்ய அவர்களுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. ஆம், அப்படியே அவர்கள் குணமடைந்தனர். அவர்கள் குணமடைந்து சுத்திகரிப்பு நிகழ்வையும் நிறைவேற்றினர். இவ்வளவு நடந்த பின்பதாக குணமடைந்த குஷ்டரோகி ஒருவன் ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க திரும்பி வந்தான், அவன் ஒரு சமாரியன் (லூக்கா 17:12-19).
1) முதலில் குடும்பம்:
ஒன்பது பேருக்கும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களுமே முன்னுரிமையாக இருந்தது. தாங்கள் குணப்பட்டோம் என்ற சந்தோஷமான செய்தி முதலில் தங்கள் அன்பானவர்களுக்கு அறிவிக்கப்பட நினைத்தார்கள். அவர்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆண்டவரிடம் வந்திருப்பார்கள்.
2) பயம்:
கர்த்தராகிய இயேசுவிடம் திரும்பி வருவது என்பது அவருடைய அப்போஸ்தலர்களாக அல்லது சீஷர்களாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கு அர்ப்பணிப்பு தேவைப்பட்டது. அவர்கள் குஷ்டரோகிகளாக இருந்து இழந்ததையெல்லாம் மீட்டுக் கொள்ளுவதை முதலில் தேர்ந்தெடுத்தனர்.
3) அபாயகரமான மனநிலை:
கர்த்தராகிய இயேசுவிடம் குணமாக்கும் வல்லமை, அதிகாரம் காணப்பட்டது. அதனால் அவர் குணப்படுத்தினார். அது தேவனின் கடமை அல்லது அறம். ஒன்பது குஷ்டரோகிகளும் குணமடைவது தங்களுக்கு இயல்பாக நடந்தது போல் நினைத்தார்கள். அதாவது இது போன்ற காரியங்களெல்லாம் நேரம் காலம் வரும் (அண்ட சராசரங்களின் மாற்றம்) போது தானாகவே நடக்கும் என்பதாக எண்ணினார்கள். எனவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுடன் இருக்கவோ அல்லது நன்றியை வெளிப்படுத்தவோ தேவையில்லை.
4) முறையான மதம்:
அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கையை முடித்துவிட்டதால், ஜீவனுள்ள தேவனுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் நியாயப்படுத்தினர். தேவனை அறிந்து கொள்வதற்குப் பதிலாக, பிரமாணத்தின் படி செய்வது தான் அவசியம் என நினைத்தனர். அவர்கள் சடங்குகளைச் செய்வதில் திருப்தி அடைந்தனர்.
5) அந்நியனின் விசுவாசம்:
ஆண்டவராகிய இயேசுவிற்கு நன்றி சொல்ல வந்தவன் ஒரு அந்நியன், சமாரியன். சமாரியர்கள் மதக் கூட்டங்களில் தேவபக்தியற்றவர்கள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் பிரமாணங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என கேலி செய்யப்பட்டனர். சமாரியர்களை சீஷராகச் சேரும்படி கேட்கவில்லை, ஆனால் உலகிற்கு அனுப்பப்பட்டார்கள். ஒன்பது பேரும் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் ஒருவருக்கு மாத்திரம் வாழ்வின் நோக்கமும் மற்றும் அருட்பணி உணர்வும் இருந்தது, மற்றவர்களுக்கு இல்லை.
நாம் நன்றியுள்ளவர்களாகவும், தேவனால் உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம் என்ற மனநிலை இருந்தால் நமது அன்றாட வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
நான் அந்த பத்தில் ஒருவனைப் போல் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்